“அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை” இதுவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!


“அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை” இதுவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!

பயிற்சி பெற்றுள்ள 206 பேரை தமிழ்நாடு அரசு அர்ச்சகராக அமர்த்த வேண்டும்!
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டில் இந்துக் கோயில்களில் அர்ச்சகர்கள் அமர்த்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நேற்று (16.12.2015) வந்த தீர்ப்பு, அர்ச்சகர் நியமனத்தில் சாதியோ – பிறப்போ – பிறந்த கோத்திரமோ பார்க்கக்கூடாது என்றும் அவை காரணமாக ஒருவரை அர்ச்சகராக நியமிக்க மறுப்பது அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகள் 14, 17 ஆகியவற்றுக்கும் 1972ஆம் ஆண்டு இது தொடர்பாக ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு (சேசம்மாள் வழக்கு) வழங்கிய தீர்ப்பிற்கும் எதிரானது என்றும் தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளை, இந்து மதத்தில் உள்ள சிவநெறி, திருமால் நெறி (வைணவம்) ஆகியவை சார்ந்த கோயில்களுக்கு அது அதற்கும் உரிய ஆகமம் கூறும் தகுதிகளைக் கொண்டு அர்ச்சகர் நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோரைக் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்புரைத்துள்ளது.
இதன்பொருள் பரம்பரை அடிப்படையில் இப்பொழுது அர்ச்சகராக உள்ளவரின் வாரிசுதான் அர்ச்சகராக நியமிக்கப்பட வேண்டும் என்பதல்ல. அந்தந்தக் கோயிலுக்குரிய ஆகமத்தின்படி – உரியவரை நியமிக்க வேண்டும். அதாவது அதற்குரிய பயிற்சியும், தீட்சையும் பெற்றவரை நியமிக்க வேண்டும்.
வைணவக் கோயிலில் அர்ச்சகர் நியமிக்கும்போது, அக்கோயில் பாஞ்சரத்னா ஆகமத்தின்கீழ் கட்டப்பட்டதா அல்லது வைக்கானசா ஆகமத்தின்கீழ் கட்டப்பட்டதா என்று பார்த்து – அக்கோயில் வழிபாட்டுக்குரிய பிரிவைச் சேர்ந்தவர் (Denomination) ஆகமப் பறிற்சியும் தீட்சையும் பெற்றால் அவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்கிறது தீர்ப்பு.
சைவக்கோயிலில் சைவநெறி வழிபாட்டைச் சேர்ந்தவரையும் வைணவக் கோயிலில் வைணவ நெறி வழிபாட்டாளரையும் – ஆகமத்தில் பயிற்சி பெற்று – தீட்சை பெற்றால் நியமிக்கலாம் என்கிறது தீர்ப்பு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எல்லா சாதியிலும் சிவன் கோயில் வழிபாட்டாளர்களும், பெருமாள் கோயில் வழிபாட்டாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆகமப் பயற்சி கொடுத்து தீட்சையும் பெறச் செய்து, இந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோயில்களில் அர்ச்சகராக நியமிப்பதற்கு இருநீதிபதி கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழி திறந்துவிட்டிருக்கிறது.
அடுத்து, தமிழ்நாட்டில் இந்து அறநிலைய ஆட்சித் துறையின்கீழ் உள்ள 36 ஆயிரம் கோயில்களில் மிகச்சில கோயில்களே ஆகமப்படி கட்டப்பட்டுள்ளன.
மற்ற கோயில்களில் அர்ச்சகர் நியமனத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தலையிடவில்லை.
எனவே, இப்பொழுது வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆகமக் கோயில்களில் உடனடியாக, ஆகமப் பயிற்சியும் தீட்சையும் பெற்றவர்களை அர்ச்சகர்களாக அமர்த்தும்படியும் ஆகமத்தின்கீழ் வராத கோயில்களிலும், பயிற்சி பெற்று தீட்சை பெற்ற அர்ச்சகர்களை நியமிக்கும்படியும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே பயிற்சி பெற்று தயாராக உள்ள 206 பேரை, தமிழ்நாடு அரசு உடனடியாக அர்ச்சகராக அமர்த்தி, ஆணை பிறப்பித்து ஆன்மிகத்திலும் சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Related

பெ. மணியரசன் 7019749556524979361

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item