தகுதியுள்ள அரசியல் தலைமை - தகுதியுள்ள மக்களால் உருவாகும்! - தோழர் பெ. மணியரசன்
மழை வெள்ளத்தால் மனிதர்களைக் காணோம் - மாடு ஆடுகளைக் காணோம் - வீடுகளைக் காணோம் என்று மக்கள் தேடுகிறார்கள்; சில ஏடுகளோ அரசியல் தலைமையைக் காணோம் என்று தேடுகின்றன. அவ்வேடுகள் அரசியல் தலைமை அற்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது என்ற அவலத்தை உணர்த்துவது சரியே!
ஆனால் அசரீரி மனிதர்களைப்போல் கற்பனைத் தலைவர்களை அடையாளம் காட்டுவதும், அதோ தொலை தூரத்திலிருந்து அவர் வந்து கொண்டிருக்கிறார் என்று சித்தரிப்பதும்தான் சிரிப்பிற்குரியதாய் இருக்கிறது.
தமிழ்நாடு அரசியல் தலைமையற்ற - அரசியல் காப்பற்ற அனாதை மாநிலமாக இருக்கிறது என்பதைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் அவ்வப்போது சுட்டிக் காட்டி வந்திருக்கிறது. தமிழ் மக்களின் தற்காப்பிற்குரிய அரசியல் தலைமை உருவாக வேண்டும். அப்படிப்பட்ட தலைமையைத் தமிழ் மக்கள் உருவாக்க வேண்டும் என்றும் கூறி வருகிறது.
நீர்நிலைகளை அரசு ஆக்கிரமிக்காமலும் செல்வாக்குள்ள தனிநபர் ஆக்கிரமிக்காமலும் பாதுகாப்பதுடன், வெள்ளம் வந்தால் வடிவதற்குரிய நீர் வழித்தடங்களைத் தக்க முறையில் உருவாக்கியும், ஏற்கெனவே உள்ளவற்றைப் பராமரிக்கவும் வருவதற்கும் திட்டங்கள் வகுத்துச் செயல்படும் அரசு வேண்டும்.
அடைமழை அதிகரித்து ஏரிகளில் வெள்ளம் வேகமாக நிரம்பி வருவதை உணர்ந்து, சீராகத் தண்ணீரை முன்கூட்டியே வெளியேற்றிவிடும் அறிவுக் கூர்மையுள்ள அதிகாரிகள் வேண்டும். களத்தில் உள்ள அந்த அதிகாரிகள் நிமிடம் தோறும் மாறும் நிலைமைக்கேற்ப தண்ணீரைத் திறந்துவிடவும் மூடவும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரம் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் செயல்படுத்தக் கூடியதாக அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த அறிவுக் கூர்மையும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் அதிகாரமும் என்றோ ஒரு நாளுக்குரியதாக இல்லாமல் அன்றாடம் நடைமுறை ஆகிட வேண்டும். அப்படி இருந்திருந்தால் - முன்னறிவிப்பின்றி வீராணம் ஏரி வெள்ளத்தை நள்ளிரவில் திறந்துவிட்டு, மனித உயிர்களையும் வேளாண்மையையும் ஊர்களையும் சாலைகளையும் நாசமாக்கி இருக்க மாட்டார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளத்தை - முன்னறிவிப்பின்றி இரவு நேரத்தில் திடீரென்று 40 ஆயிரம் கன அடி திறந்துவிட்டு சென்னை மாநகரத்தையும், அதைச் சுற்றியுள்ள நகரங்களையும் செயற்கையாக ஓர் ஊழிக் காலப் பேரழிவு வெள்ளத்தில் சிக்கிக் கொள்ள விட்டிருக்க மாட்டார்கள்!
அரிய உயிர்கள் எத்தனை அடித்தச் செல்லப்பட்டு வங்கக் கடலோரம் பிணங்களாக மிதந்தன! அடுக்கப்பட்ட பிணங்களில் தங்கள் உறவுகளை அடையாளம் காணப் புரட்டிப் பார்த்துக் கதறியோர் கண்களில் கண்ணீரும் நெஞ்சங்களில் நெருப்புமல்லவா கொதித்தன!
தொடர்ந்து மூன்று நாள் மின்சாரமில்லை; தொலைப்பேசி இல்லை; குடிநீர் வற்றிவிட்டது; கழிவறைக்கும் தண்ணீர் இல்லை; வெளியே போக முடியாது. வீதிகளில் கட்டுக்கடங்காத காட்டாறு போல் வெள்ள நீரோட்டம்! ஐயகோ, மனித வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டது போன்ற துயரம்! சொந்தங்களுக்கும் செய்தி சொல்ல முடியாது; நண்பர்கள் உதவியும் நாட முடியாது - தொலைப்பேசி இல்லை!
அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் ஆண்டவனுக்கு இணையான ஆற்றல் பெற்றவராகப் பாதந்தாங்கிகளால் பாசுரம் பாடப்படும் அம்மாவின் ஆட்சி - அடுப்படிப் பூனை போல் வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தது. யார் போய் எழுப்ப முடியும்? கடவுளின் கருவறையிலாவது அர்ச்சகர் போகலாம்! பூனையின் அடுப்படிக்குச் செல்லும் புனிதர் யார்? யாருமில்லை.
வீராணமா? செம்பரம்பாக்கமா? அம்மாவின் ஆணையின் பேரில்தான் திறக்க முடியும்; மூட முடியும்! கோண வாய்க்காலின் மதகைக்கூட கொலு பீடத்தின் ஆணையில்லாமல் திறக்க முடியாது; மூட முடியாது.
ஒற்றை அதிகார மையத்தின் உடன் பிறந்த நோய் முடக்குவாதம்! அந்த ஒற்றை அதிகார மையத்திற்கும் அடுத்த நிலை நிர்வாக வட்டங்களுக்கும் இடையே தொலைவு மிக அதிகம்! அதுமட்டுமல்ல, அமைச்சர்களும் அதிகாரிகளும் அச்சத்திலேயே இருப்பார்கள். தங்களின் முதல் பகைவன் சொந்த புத்தி என்று அஞ்சி, சிந்திக்கும் ஆற்றலையே இழந்திருப்பார்கள். சாவி கொடுத்தால் இயங்கும் பொம்மைகள் ஆகிவிடுவார்கள்!
இந்த வெள்ளத்தில் ஒற்றை அதிகார மையத்தால் ஏற்பட்ட விபத்துகள்தான் அதிகம்! ஒற்றை அதிகார மையம் ஊழலின் ஊற்றுக் கண்ணாகும்! உண்மையான அதிகார மையத்திற்குக் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டிவிட்டால் ஊழல் பெருச்சாளிகள் உல்லாசமாகத் திரியலாம்.
அம்மாவின் ஆட்சி மட்டுமல்ல, ஐயாவின் ஆட்சியும் அப்படித்தான் இருந்தது. அம்மாவின் ஆட்சி ஒருநபர் அதிகார மையம். ஐயாவின் ஆட்சி ஒருநபர் குடும்பங்களின் அதிகார மையங்கள். ஊழலுக்கான உலகப் பல்கலைக்கழகம்!
சிங்காரச் சென்னை - சிங்காரச் சென்னை என்று மேடைகளில் சித்தரித்தவர்கள் ஐந்து முறை ஆட்சி நடத்தியவர்கள். நாற்பத்தெட்டாண்டுகளாக - மாறிமாறிக் கழகங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துகின்றன. சென்னையை யானைக்கால் நோயாளியாக இக்கழகங்கள் மாற்றிவிட்டன. கூவம் ஆறு, அடையாறு, கொசஸ்தலை ஆறு, படகுச்சவாரிக்கான பக்கிங்காம் கால்வாய் எல்லாமே சாக்கடைகள் ஆயின! எத்தனையோ ஏரிகள் - குளங்கள், காங்கிரீட் கல்லறைகளாக மாறின! வெள்ளம் தனக்கான இடங்களைக் கண்டடைந்தது!
“வீடுகள் ஆக்கினாய் குளங்களை.. குளங்கள் ஆயின வீடுகள்!” என்று எழுதினார் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்.
கழகங்கள் ஊழலின் உறைவிடங்கள்; அலங்கோலத்தின் அரியணைகள்! அன்றைய ஆதாயத்திற்காக இனத்தை அடமானம் வைக்கத் தயங்காதவை.
உலக நாடுகளின் கவனத்திற்குரிய ஒரு தலைநகரம் சென்னை! ஒரு தேசத்திற்குரிய மக்கள் தொகையைவிட அதிக மக்கள் தொகை சென்னையில் குவிந்துள்ளது. எத்தனை எத்தனை கலைகள், எத்தனை எத்தனை ஆற்றல்கள்! எத்தனை எத்தனை கோடி மக்களுக்கு வாழ்வளிக்கிறது! இந்த நகரத்தை எப்படிக் கட்டுமானம் செய்திருக்க வேண்டும்!
ஓர் ஆண்டில் பல மாதங்கள் குடிக்கத் தண்ணீரில்லாமல் தவிக்கும் சென்னை நகரத்தில் வெள்ளம் சூழ்ந்து மனித உயிர்களைக் குடித்த கொடுமையை என்னென்று சொல்வது?
அ.இ.அ.தி.மு.க. - தி.மு.க.தான் இப்படி மற்ற கட்சிகள் வந்தால் நிலைமை சீராகும் என்று நம்புவதற்கான - அறிகுறிகள் இல்லை. பல கட்சிகள் குட்டி அ.தி.மு.க. போலவும் குட்டி தி.மு.க. போலவும்தான் செயல்படுகின்றன.
எனவேதான் மக்களிடமிருந்து புதிய தலைமை எழ வேண்டும் என்று சில ஏடுகள் எழுதுகின்றன.
வெள்ளம் வந்தால் சமாளிக்கக் கூடிய புதிய அரசியல் தலைமை என்ற அளவிற்கு மாற்றுத் தலைமையைச் சுருக்கிவிட முடியாது. ஊழலற்ற தலைமை என்பதை மட்டும் முதன்மை நிபந்தனை ஆக்கிட முடியாது - இவையெல்லாம் தேவை. இவற்றுக்கும் மேலே எல்லா முனைகளிலும் தமிழர்களுக்கான அரசியல் காப்பாளராக விளங்கக் கூடிய தலைமை தேவை!
வெளிச்சம் போட்டு முகம் காட்டிக் கொள்ள விரும்பாத உயர் சம்பள இளைஞர்கள், இளந்தொழில் முனைவோர், கற்றவர்கள் இந்த வெள்ளத் துயர் துடைப்பில் - மீட்புப் பணியில் - பொருட்கள் வழங்குவதில் துடிப்புடன் செயல்பட்டார்கள். அவர்களில் தலைவர் உருவாக்கலாம் என்று ஏடுகள் நினைக்கலாம். அதுமட்டும் போதாது.
அரசியல் கொள்கைகள் - இலட்சியங்கள் தெளிவாக இருக்க வேண்டும். கொள்கை வேறு தான் வேறு என்றில்லாத தன்மயமாதல் கொண்ட இளைஞர்கள் வேண்டும்.
காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு உரிமைகளை மீட்கும் ஆற்றல் - கன்னடர்களும் மலையாளிகளும் தமிழர்களைத் தாக்கியபோது,கைகட்டி நின்று கடிதம் எழுதிக் கொண்டிருந்த தி.மு.க., அ.தி.மு.க. தலைமைகளுக்கு மாற்றாக - அயல் இனத்தாக்குதலைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தலையிடும் ஆற்றல் உள்ள தலைமை, ஆந்திரப்பிரதேசத்தில் 20 தமிழர்களைக் காக்கை குருவிகளைவிடவும் கேவலமாக சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இன உணர்ச்சியும் - ஆற்றலும் உள்ள தலைமை - இந்தி , சமற்கிருதத் திணிப்புகளையும் ஆங்கில ஆதிக்கத்தையும் தடுத்துத் தமிழைக் கல்வி மொழியாக ஆட்சி மொழியாக ஆக்கிடும் தலைமை - சூழலியல் பாதுகாப்புப் பற்றிய புரிதலும் செயலூக்கமும் உள்ள தலைமை - சென்னையில் புதிய தொழிற்சாலைகள் எதையும் பத்தாண்டுகளுக்கு அனுமதிக்கக்கூடாது என்று முடிவெடுக்கும் தலைமை - வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் நுழையும்போது, அருணாச்சலப் பிரதேசம் - நாகாலாந்து மாநிலங்களில் உள்ளது போல் உள்நாட்டு நுழைவு அனுமதி (Inner line Permit) வாங்கும் முறையைக் கொண்டுவரும் கொள்கையுடைய தலைமை - மண்டும் ஊழல் அண்டா நெருப்பாய் வாழ்ந்து காட்டும் தலைமை என பற்பல தகுதிகளைப் பெற்ற புதிய அரசியல் தலைமை தமிழ்நாட்டிற்குத் தேவை!
இவற்றையெல்லாம் நிபந்தனையாக்காமல், வெள்ளம் வரும்போது காப்போராக வந்தவர்களில் - ஊழல் அற்றவர்களில் ஒரு தலைவர் வர வேண்டும் என்று எழுதுவது - எதிர்பார்ப்பது, அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய மனிதர் தலைவராக வர வேண்டும் என்ற ஆசைப்படுவது போன்ற கற்பனையாகும்.
மேலே நாம் சொன்ன தகுதிகள் கொண்ட ஒற்றைத் தலைவர் தனியே உருவாக முடியாது. ஓர் அமைப்பு வழியாகத்தான் உருவாக வேண்டும். அவ்வாறான ஓர் அமைப்பு வளர்வது என்பது, மக்களில் கணிசமானோரின், மனநிலை, பண்புகளின் மாற்றத்திலிருந்துதான் உருவாகும்!
மக்கள் புதிய மனிதர்களாக மாறுவதற்கான கொள்கைகளை - பண்புகளை - அரசியலை ஊடகங்கள் பரப்ப வேண்டும். அவ்வாறான மக்கள் இயக்கங்களை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்.
இவற்றைச் செய்ய ஊடகங்கள் முன்வருமா?
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2016 சனவரி 1-15 இதழுக்கு எழுதிய ஆசிரியத் தலையங்கம் இது.
Leave a Comment