ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உலகமயம் வீழட்டும் - தேசங்கள் மீளட்டும் உழைப்போர் ஆளட்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் மேநாள் வாழ்த்து!

உலகமயம் வீழட்டும் - தேசங்கள் மீளட்டும் உழைப்போர் ஆளட்டும்!தமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் மேநாள் வாழ்த்து! 
உலகம் முழுவதும் 130ஆவது மே நாளை கொண்டாடும் பாட்டாளிகளோடு இணைந்து தமிழ்நாட்டிலும் இம் மே நாளை எழுச்சியோடு கொண்டாடும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் தமிழகத் தொழிற்சங்க முன்னணி சார்பில், புரட்சிகரமான மே நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியத் துணைக் கண்டத்து தொழிலாளி வர்க்கத்திற்கு முன்னோடியாக தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள்தான் ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலர் தலைமையில் மே நாளை 1923ஆம் ஆண்டு கொண்டாடினார்கள்.

 இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதல் ஒழுங்கமைக்கப்பட்டத் தொழிற்சங்கம், ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. முன்முயற்சியில், வாடியா தலைமையில், உருவான ‘மதராஸ் லேபர் யூனியன்’ ஆகும்.

வருங்காலத்திலும் இந்த முன்னோடிப் பாத்திரத்தை வகிப்போம் என தமிழ்நாட்டு உழைப்பாளர்கள் இந்நாளில் உறுதியேற்போம்.

இன்று உழைப்புச் சுரண்டலின் கொடிய வளர்ச்சி நிலையாக உலகமயப் பொருளியல் கோலோச்சுகிறது. இந்த உலகமயம் இயற்கை வளத்தையும், கண்மண் தெரியாமல் சூறையாடுகிறது. ஒட்டுமொத்த மக்களும் உலகமய சந்தைத் தேவைக்காக சுழலும் எந்திரங்களாகவும் சந்தைக்கு உற்பத்தியாகும் பொருள்களை நுகரும் வாடிக்கையாளர்களாகவும் மாற்றப்பட்டுவிட்டார்கள்.

 மண்ணும் நீரும் காற்றும் கேள்விமுறையற்று உறிஞ்சப்பட்டு அவற்றுள் கண்மண் தெரியாமல் நச்சுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

உலகமயம் தன் ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கு ஏற்ப உலக நாட்டு அரசியலை, ஆட்சி முறையை மாற்றியமைத்துவிட்டது. எல்லா நாட்டு அரசுகளும் உலகமய வேட்டைக்கு ஏற்றாற்போல் தகவமைக்கப்பட்டுவிட்டன. இந்திய அரசும் இதில் முண்டியடித்துக் கொண்டு முதல் வரிசையில் நிற்க முயல்கிறது.

தொழிலாளி வர்க்கம் இதுவரை ஈகங்கள் பல செய்து பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன. மே நாள் வீரர்கள் எட்டு மணி நேர வேலை, தொழிலாளர்களுக்கும் அரசியல் உரிமை ஆகிய முதன்மை நோக்கங்களுக்காக போராடியதன் அடையாளமாகத்தான் மேநாளைப் படைத்தார்கள். 


இன்று தமிழகத்தில் மிகப்பெரும்பாலான தொழிலகங்களில் எட்டு மணி நேர வேலை என்பது இல்லை. பத்து மணி நேரம் – பன்னிரெண்டு மணி நேரம் என்ற வரம்பற்ற உழைப்புச் சுரண்டல் பொது விதியாகிவிட்டது. நிரந்தர வேலை வாய்ப்பு என்பது மறைந்து வருகிறது. எல்லா இடத்திலும் வேலை வாய்ப்பு இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும், குறைகூலிக்கு வேலை வாய்ப்பு என்ற வகையில் மறைமுக வேலையின்மையே தொடர்கிறது.


தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்திய அரசு அடுத்தடுத்து சட்டங்களைப் பிறப்பித்து வருகிறது. தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளும் அடிப்படை சனநாயக உரிமையேகூட, கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது.

இந்த நிலையில், இதுவரை பெற்றிருந்த தொழிற்சங்க உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்கே தொழிலாளர்கள் கடும் போராட்டங்களை நடத்தியாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

தொழிலாளர்களும் ஒட்டுமொத்த மக்களும் யாரோ சிலத் தலைவர்களை அண்டிப் பிழைக்கும் அநாதைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள். தங்கள் கைகளை எதிர்பார்க்கும் பயனாளிக் கூட்டமாக உழைக்கும் மக்கள் இருக்க வேண்டும் என்பதையே அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, பெரும்பாலான தொழிற்சங்கத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

தேர்தல் அரசியலில் வெறும் பார்வையாளர்களாக மக்கள் வைக்கப்பட்டிருப்பதைப் போலவே தொழிற்சங்க இயக்கத்திலும் தொழிலாளர்கள் பார்வையாளர்களாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் பங்கேற்பு சனநாயகத்தை மீட்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது.

உலகமயப் பொருளியலை செயல்படுத்தும் எந்திரமாக இந்திய அரசு விளங்குகிறது. உலகமயத்தை வீழத்துவது என்பது உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க அரசை ஏற்படுத்துவது என்ற பொருள் அல்ல. மாறாக, உலகமயத்திலிருந்து விடுபட்டு உள்ளூர் வளத்தைப் பாதுகாப்பது என்பதாகும்.

உலகமயச் சந்தையிலிருந்து விடுபட்டு, அந்தந்த தேசிய இன சந்தையை, தேசியப் பொருளியலை மீட்டெடுப்பது என்பதே உலகமயத்தை வீழ்த்தும் செயல் முறையாகும். இந்த வரலாற்றுக் கடமையில் தொழிலாளர்கள் முகாமையானப் பாத்திரத்தை வகிக்க வேண்டும்.

தாங்கள் பணிபுரியும் இடங்களில் நிலவும் கான்ட்ராக்ட்மயம், தற்காலிகமயம், வெளிப்பணி முறை (அவுட்சோர்சிங்) ஆகியவற்றை எதிர்த்தும், எந்திரத்தோடு எந்திரமாக பிழியப்படும் நிலையிலிருந்து மீளவும், தொழிலாளர்களின் சனநாயக உரிமையை மீட்கவும் சமரசமற்ற போராட்டத்தை விடாப்பிடியாக நடத்த வேண்டும். வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அழுத்தமானப் போராட்டங்களாக அவை அமைய வேண்டும்.

தொழிற்சங்க இயக்கங்கள் தங்களது அன்றாட சொந்த சிக்கல்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால், மேற்சொன்ன தற்காப்புப் போராட்டங்களைக்கூட வெற்றிகரமாக நடத்த முடியாது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும், தொழில் உற்பத்தி முறையும் வெறும் தொழிற்சங்கப் போராட்டங்கள் மட்டும் முழு வெற்றியை ஈட்டித் தராது என்பதைத் தெளிவாக்குகிறது.
தொழிலாளர்கள் தங்களைச் சுற்றி வாழும் மக்கள் சிக்கல்களிலும் கவனம் செலுத்தி அந்தந்த மண்ணின் தேவைக்கேற்ற இலட்சியங்களை முன்னிறுத்தி போராடினால்தான் தங்களுக்குரிய நட்பு ஆற்றல்களையே பெருக்கிக் கொள்ள முடியும். அதுதான் தொழிற்சங்கப் போராட்டத்திற்கே அரணாக அமையும்.

இவ்வாறு மண் உரிமை மீட்பு, மக்கள் உரிமை மீட்புப் போராட்டங்களோடு இணைந்த தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மறு வார்ப்பு செய்யப்பட வேண்டும். பதவி அரசியலின் தொங்கு சதையாகவோ, தொழிற்சங்கக் கிழார்களின் அடிப்பொடி அமைப்பாகவோ, திசை தெரியாமல் வெற்றுக் கூச்சல் எழுப்பும் கூடாரமாகவோ இன்று இருக்கும் நிலையிலிருந்து தொழிற்சங்க இயக்கம் மீட்கப்படுவது முன் தேவையாகிறது.

இந்த முன் தேவையை உடனடியாக நிறைவு செய்து தொழிற்சங்க உரிமையையும் தொழிலாளர் உரிமையையும் பாதுகாத்துக் கொள்வதோடு வரலாறு விதித்திருக்கிற தனது கடமையை செயல்படுத்தும் படை வரிசையாக தொழிலாளி வர்க்கம் எழ வேண்டும்.

இதுதான் இந்த மே நாளில் உழைக்கும் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்.

உலகமயம் வீழ...
ஒடுக்குண்ட தேசங்கள் மீள...
உழைப்பாளர்கள் உலகை ஆள...
விழிப்புற்ற எழுவோம்! 
வீறு கொண்டு வெல்வோம்!


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.