ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே! - தோழர் பெ. மணியரசன்



களம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர்!
தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

அஇஅதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வேறொரு அரசியல் கட்சியை அல்லது வேறொரு அரசியல் கூட்டணியை முன்னிறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை (16.05.2016) சந்தித்தவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள். அவ்விரண்டில் ஒரு திராவிடக் கட்சிக்கு மாற்று இன்னொரு திராவிடக் கட்சியே என்பது போல் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அஇஅதிமுக – 134 தொகுதிகள், திமுக அணி – 98 தொகுதிகள் வென்றுள்ளன. எஞ்சிய இரண்டு தொகுதிகளுக்கு 23.05.2016 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

      திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக சிறு அளவில் கூட வேறு கட்சி வெல்லவில்லையே, ஏன்? மாற்று என்று சொல்லிக் கொண்டவற்றில் பெரும்பாலான கட்சிகள் குட்டி திமுக, குட்டி அதிமுக என்று சொல்லத்தக்கவையே! இலட்சியமற்று பதவிவெறி, பணவெறி, குடும்ப அரசியல், ஒற்றை ஏகபோகத் தலைமை என்று செயல்படும் திராவிடக் கட்சிகளின் சிறு வடிவங்களாகவே மாற்று பற்றி பேசிய கட்சிகள் இருக்கின்றன.

      தமிழ்நாட்டில் ஒரு பொதுத் தேர்தலை நடத்த எத்தனை இராணுவப் பட்டாளங்கள், அண்டை மாநிலக் காவல்துறைப் பிரிவுகள், நடுவண் அரசு அதிகாரிகள் படையெடுப்பு; இரவு பகல் தூங்காமல் தமிழ்நாடு அரசு அதிகாரிகள்! ஒரு சனநாயகத் தேர்தலுக்கு இத்தனை படை பரிவாரங்கள் ஏன்? குற்றச் செயல்கள் நடந்து விடாமல் தடுத்திட! இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்? ஆளுங்கட்சியினரும் எதிர்க் கட்சியினரும்!

      இந்தக் குற்றக் கும்பல்கள்தாம் தேர்தலில் வென்று நாட்டை நிர்வகிக்கப் போகின்றன: ஆளுங்கட்சியாக – எதிர்க்கட்சியாக நாட்டை நடத்தப் போகின்றன. உற்று நோக்கினால் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் கிரிமினல் குற்றவாளிகளுக்கிடையே நடந்த தேர்தல் போல் அல்லவா ஆகிறது! ஒரு பேட்டையில் நாலைந்து ரவுடிக் கும்பல்கள் செயல்படுகின்றன, பேட்டை நிர்வாகத்திற்காக அந்தக் குற்றக் கும்பல்களுக்கிடையே தேர்தல் நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படியல்லவா தமிழ்நாடு தேர்தல் நடைமுறைகள் ஆகிவிட்டன! எந்த கட்டுக் காவலையும் ஏமாற்றி வாக்காளர் வீடு தேடிப்போய் கையூட்டு கொடுக்கும் வல்லவர்கள் தமிழ்நாட்டில் தான் இவ்வளவு பெரிய அளவில் இத்துணை சீரழிந்த அளவில் செயல்படுகின்றனர், அவர்கள் தலைவர்கள் அப்படி!

      பாக்கிஸ்தானின் பக்கத் துணையோடு பல குழுக்கள் ஆயுதந்தாங்கி விடுதலைப் போராட்டம் நடத்தும் சம்மு காசுமீரில் நடைபெறும் தேர்தல் போல் தமிழ்நாட்டுத் தேர்தலில் அரசுப் படை, பரிவாரங்கள் களம் இறங்கின. அங்கே தேச விடுதலைப் போராட்டம்! இங்கே தன்னல வெறிச் சூதாட்டம்!

      இந்தியாவிலேயே இன உரிமைப் பறிப்பிற்கு அதிகம் ஆளாகியிருக்கும் மாநிலம் தமிழ்நாடு! இயற்கை வளங்கள் கொள்ளை, சுற்றுச் சூழல் கேடுகள் எனப் பேரழிவுக்கு உள்ளாகியுள்ள மாநிலம் தமிழ்நாடு. அவற்றுக்கு முகம் கொடுக்காத பெரிய, சிறிய கட்சிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

      இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு! தனிநபர் பகை அரசியல், தனிநபர் ஆதாயத்திற்காகத் தன்மானத்தைப் பலியிட்டுத் தலைவர் வழிபாடு நடத்தும் தரங்கெட்ட அரசியல், ஊழல் கொள்ளையில் ஒய்யார அரண்மனை வாழ்க்கை, பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களைப் போல் மக்களுக்கெட்டாத உயரத்தில் ஒற்றை அதிகார மையம் – இவைதானே இன்று தமிழ்நாட்டு அரசியல் காட்சிகள்!

      பெரிய திராவிடக் கட்சிகளும், வெவ்வேறு பெயர்களில் உள்ள சின்ன திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டில் நிலைநாட்டியுள்ள சனநாயகம் இதுதான்!

      இந்த அவலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழர் மொழி, இன அடையாளங்களை அழித்து ஆரிய அடிமைச் சமூகமாகத் தமிழ்ச் சமூகத்தை மாற்றிட, பாசிசத்தின் பாரத மாதா வடிவமாக பாசக வருகிறது. ஏற்கேனவே தமிழின உரிமைகளைப் பறித்த, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த காங்கிரசு ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொள்கிறது. தேர்தல் இடதுசாரிகளுக்குத் தனித்துவமான வேலைத்திட்டம் எதுவுமில்லை. தில்லு முல்லுக் கூட்டணி ஒன்றில் சேர்ந்து கொள்ளும்.

      காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உரிமைகளை மீட்கவும், கூடங்குளம் அணு உலை, மீத்தேன், நியூட்ரினோ, மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை போன்றவற்றைத் தடுக்கவும் மேற்கண்டவற்றில் எத்தனை அரசியல் கட்சிகள் களம் கண்டன? மக்கள் அமைப்புகள், உழவர் அமைப்புகள், சுற்றுச்சூழல் இயக்கங்கள் என்ற குடிமைச் சமூக இயக்கங்கள் தான் இச்சிக்கல்களில் முன்கை எடுக்கின்றன; முதன்மையாகக் களத்தில் நிற்கின்றன!

      தமிழ்மொழி காத்திடவும், தமிழ்நாடு அயலாரின் வேட்டைக் காடாகவும், அயலாரின் தாயகமாகவும் முற்றும் முழுதாக மாறிடாமல் தடுக்கவும் குடிமைச்சமூக அமைப்புகளும் தமிழ்த்தேசிய இயக்கங்களும்தாம் போராட வேண்டும்.

      தரங்கெட்ட பொருளையெல்லாம் சந்தையில் தள்ளிவிட, மாய விளம்பரங்கள் செய்யும் வணிக நிறுவனங்கள் மக்களுக்கு நுகர்வு வெறியை ஊட்டுகின்றன. திராவிடக் கட்சிகள் மக்களில்  கணிசமானோரை கையூட்டு வாங்கி வாக்களிப்போராக, தற்சார்பற்றுக் கையேந்தும் பயனாளிகளாக மாற்றி விட்டன. ஆனாலும் நம்மக்களிடம் விழிப்புணர்ச்சி வளர்ந்து வருகிறது என்பதற்கான அடையாளமாகத் தான் இத்தேர்தலில் வாக்களிப்போர் எண்ணிகை கணிசமாகக் குறைந்துள்ளது. “யாருக்கும் வாக்களியேன்” என்ற நோட்டா வாக்கும் கணிசமாக உயர்ந்துள்ளது! தேர்தல் ஆணையம் வாக்களிக்க வலியுறுத்தி ஊருக்கு ஊர், சந்துக்கு சந்து, சட்ட விதிகளுக்கு அப்பால் சென்று தீவிரப் பரப்புரை செய்தும், தூண்டியும் பயன் இல்லை.

      நம்பிக்கையோடு நாம் செயலில் இறங்கலாம்.

      நம் உரிமைகளைப் பாதுகாத்திட மட்டுமின்றி, நாறிப்போன தமிழ்நாட்டு அரசியலை நாகரிகப்படுத்தவும் களத்தில் இறங்க வேண்டிய கடமை குடிமைச் சமூக இயக்கங்களுக்கும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கும் இருக்கின்றன, தேர்தலுக்கு வெளியே இந்தப் பணிகள் தொடர வேண்டும்.

      புதிய மறுமலர்ச்சி தமிழினத்தில் புத்தொளி வீச வேண்டும்! இதற்கான பொறுப்பு பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இளையோர்க்கும் பெரியோர்க்கும் இருக்கிறது! இலட்சியத் தேர்வு – உரிமை உள்ள உணர்ச்சி – அறம் சார்ந்த பண்பு – செயல் துடிப்பு – இவையே வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகட்டும்!

      களம் காத்திருக்கிறது; காலம் அழைக்கிறது; கடமையாற்ற வாருங்கள்!

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.