ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பருப்பு இறக்குமதி – இந்திய வேளாண்மைக்கு இடி! - தோழர் கி. வெங்கட்ராமன் கட்டுரை!




பருப்பு இறக்குமதி
இந்திய வேளாண்மைக்கு இடி!

தோழர் கி. வெங்கட்ராமன்
ஆலோசகர், தமிழக உழவர் முன்னணி. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் முதன்மை சத்துணவுத் தேவையை,  இறக்குமதி மூலம் சரிக்கட்டிக் கொண்டு - உள்நாட்டு வேளாண்மையை அழிக்கும் திசையில் புதியதொரு ஒப்பந்தம் கண்டுள்ளார்.

ஐந்து நாள் ஆப்பிரிக்க பயணத்தில் முதல் கட்டமாக தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக் நாட்டில் இன்று (07.07.2016) இறங்கிய மோடி, மொசாம்பிக் குடியரசுத் தலைவர் பிலிப் ஜெசிண்ட்டோ நியூசி (Filipe Jacinto Nyusi) உடன் அந்நாட்டுத் தலைநகர் மபுட்டோவில் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இத்திசையில் முக்கியமான ஒன்று.

வறுமைப்பட்ட நாடான மெசாம்பிக்கிலிருந்து பல்லாயிரம் கோடி டன் பருப்பு வகைகளை இறக்குமதி செய்து கொள்ள மோடி – நியூசி ஒப்பந்தம் வகை செய்கிறது.

இந்தியாவில் பருப்பு வகை உற்பத்தி திட்டமிட்ட வகையில் குறைவதற்கே பசுமைப் புரட்சி வகை செய்தது. நெல் மற்றும் கோதுமை உற்பத்தியில் மட்டுமே பசுமைப் புரட்சி கவனத்தைக் குவித்தது.

இதனால், கடந்த நாற்பதாண்டுகளில் பருப்பு வகைகளின் தனிநபர் வழங்கல் தலைக்கு 18 கிராம் என்பதிலிருந்து, 15 கிராமாகக் குறைந்தது. இது தொடர்ச்சியான ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் புரதம் குறைவினால் ஏற்படும் குன்றிய வளர்ச்சி உள்ளிட்ட குறைபாடுகளுக்கும் வழிகோலியது.

சீனா போன்ற நாடுகளில் பருப்பு வகைகளின் பயன்பாடு மக்களிடையே குறைந்ததற்கு ஈடாக, புலால் உணவு பயன்பாடு அதிகரித்தது. இந்தியாவில் புலால் விலை எளிய மக்களின் தொடர் பயன்பாட்டுக்கு இல்லாததனால் அதிகம் போனால், வாரம் ஒருமுறை புலால் உணவு என்பதே பெரும்பாலான குடும்பங்களின் வழக்கமாகிவிட்டது. சீனாவின் வழி இந்த வகையில் இந்தியாவுக்கு கிடைக்காமல் போனது.

இதை ஈடு செய்யும் வகையில் பருப்பு வகை சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு முந்தைய காங்கிரசு அரசும், இப்போதைய மோடி அரசும் எதுவும் செய்யவில்லை.

மாறாக, மொசாம்பிக் நாட்டுடன் மோடி செய்துள்ள இந்த ஒப்பந்தம் நாட்டின் பருப்புத் தேவைக்கு இறக்குமதியைச் சார்ந்திருப்பதை அதிகப்படுத்துகிறது. மொசாம்பிக் நாடு மிகவும் வறிய நாடு என்பதால், மிகக்குறைந்த விலைக்கு பருப்பு வகைகளை கொள்முதல் செய்து, மொத்த வணிகர்கள் இந்தியாவில் உயர் விலைக்கு விற்று கொள்ளையடிக்க இது துணை செய்கிறது.

பருப்பு வணிகத்திற்கு ஈடாக அந்நாட்டின் கடல்பரப்பு பாதுகாப்பு ஏற்பாட்டில் இந்தியா மூக்கை நுழைக்கும் வகையில் படை வகை ஒப்பந்தத்திற்கு அடிகோளப்பட்டுள்ளது.

இதுபோதாதென்று, இந்திய துணைத் தூதரகம் ஆங்கிலத்தில் அணியப்படுத்தியுள்ள இந்தியத் தொழிலாள் முதலாளிகள் பட்டியல் ஒன்றை மொசாம்பிக் குடியரசுத் தலைவரிடம் கையளித்து, “இவர்களெல்லாம் உங்கள் நாட்டில் தொழில் தொடங்க அணியமாக இருக்கிறார்கள்” என்று கூறிச் சென்றிருக்கிறார்.

கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் என்ன செய்ததோ அதையே மொசாம்பிக்கில் மோடி செய்ய முனைந்துள்ளார்.

ஒரே ஒரு வேறுபாடு. கிழக்கிந்திய கம்பெனி சூறையாடிய வளத்தில் பிரித்தானிய மக்களுக்கு ஒரு சிறு பகுதியாவது கிடைத்தது. மோடியின் ஒப்பந்தம் இந்திய வேளாண்மையையும் அழிக்கிறது.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.