ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு! பெ. மணியரசன் அறிவிப்பு!

காவிரி டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தியும் - நடப்பு சம்பா சாகுபடிக்குத் தமிழ்நாட்டுக்குரிய விகித நீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றிடவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் தமிழ்நாடு அரசு துடிப்புடன் செயல்பட வேண்டுமென்று வலியுறுத்தியும் - காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 23.09.2016 அன்று 1000 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதென்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தோம்.

ஆனால், கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்குவது – தமிழர் உடைமைகளை எரிப்பது என்று வன்முறையில் இறங்கி, அந்த மாநில அரசு மற்றும் அரசியல் கட்சிகள் ஆதரவோடு கன்னட வெறியர்கள் அட்டூழியம் புரிந்த நிலையில், அனைத்து உழவர் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சேர்ந்து மேற்கண்ட அட்டூழியங்களைக் கண்டித்தும் மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும், கடந்த 16.09.2016 அன்று தமிழ்நாடு தழுவிய முழு அடைப்பு மற்றும் நடுவண் அரசு அலுவலக முற்றுகைப் போராட்டங்கள், தொடர்வண்டி மறியல்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தின. காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் அமைப்புகள் முழு வீச்சில் அப்போராட்டத்தில் பங்கேற்றன.

அடுத்து, 20.09.2016 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு மாதக் காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று இந்திய அரசுக்குக் கட்டளையிட்டதுடன், கர்நாடக அரசு ஒரு நாளைக்கு ஒரு நொடிக்கு 6,000 கன அடி வீதம் 27.09.2016 வரை காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் தீர்ப்பளித்துள்ளது.

இப்பின்னணியில், 23.09.2016 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு, காவிரி டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம் நாள் குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகின்றது என்று தெரிவித்துக் கொள்கிறேன். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் தடைகள் ஏற்பட்டால் காவிரி உரிமை மீட்புக் குழு அத்தடைகளை உடைக்கப் போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.