ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கர்நாடகத்தில் தமிழர்களை தாக்கியோர் சில கிரிமினல்கள்தான். இது சரியான செய்தி தானா? பெ. மணியரசன் விடையளிக்கிறார்!


கர்நாடகத்தில் தமிழர்களை தாக்கியோர் சில கிரிமினல்கள்தான். இது சரியான செய்தி தானா? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்!

கேள்வி :

கர்நாடகத்தில் தமிழர்களையும் தமிழர் நிறுவனங்கள் மற்றும் ஊர்திகளையும் தாக்கியோர் சில கிரிமினல்கள்தான். மற்றபடி கன்னடர்கள் குறிப்பாக, கர்நாடக உழவர்கள், தமிழர்களுக்கெதிரான போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று இங்கு கட்டுரைகள் எழுதுகிறார்கள், தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகிறார்கள். இது சரியான செய்தி தானா?

பதில் :

தமிழ் மாணவர் சந்தோசைத் தாக்கி இழிவுபடுத்திய வன்முறை, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓட்டுனர்கள் பலர் இழிவுபடுத்தப்பட்டது – தாக்கப்பட்டது, தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டது என கர்நாடகாவில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் எவற்றையும் கர்நாடகக் காங்கிரசு முதல்வர் சித்தராமையா, கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ச.க. நடுவண் அமைச்சர்கள் அனந்த குமார், சதானந்த கௌடா ஆகியோர் கண்டிக்கவே இல்லை.

சித்தராமையா வருத்த மளிக்கிறது என்று கூறி பூசி மொழுகினார். பா.ச.க. அமைச்சர்கள் அதைக்கூட கூறாமல், தமிழ்நாட்டில் நடந்தவற்றின் எதிர்வினைகள்தான் இவை என்று கூறி முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க முயன்றார்.

கன்னடர்களில் கணிசமானோர்க்கு, தமிழின எதிர்ப்பு நீண்டகாலமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் நாற்பதாண்டுகளுக்கு முன் வாட்டாள் நாகராசு கர்நாடகத் தமிழர்களுக்கு எதிராகத் தொடங்கிய கன்னட சளுவளி அமைப்பு!

கன்னட மக்களிடம் தமிழர்களுக்கு எதிரான இனவெறி இருப்பதால்தான் அதைப் பயன்படுத்தி வாக்குகள் வாங்க அரசியல் கட்சிகள் அங்கு போட்டி போடுகின்றன.

இந்த உண்மையை மூடி மறைத்து ஏதோ சில கிரிமினல்கள் செய்த வேலைகள் என்ற கூறித் தமிழ்நாட்டில் தமிழர்களை ஏமாளிகள் ஆக்க இந்தியத்தேசியவாதிகள் முயலக்கூடாது.

அதேபோல் தமிழர்களுக்கெதிராகக் கர்நாடகத்தில் நடந்த வன்முறைகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க வேலைகள் மட்டுமே என்று சுருக்கவும் கூடாது.

1991 திசம்பரில், காவிரி இடைக்காலத் தீர்ப்பு நடுவண் அரசிதழில் வெளியிட்ட போது, அப்போது காங்கிரசு முதல்வராக இருந்த பங்காரப்பா தூண்டுதலில் முழு அடைப்பு நடந்தது. அவருடைய மறைமுக ஆதரவோடு கன்னட வெறியர்கள் தமிழினப் படுகொலைகளை நடத்தினர். பன்னிரெண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்களுடைய நிறுவனங்களும் வீடுகளும் சூறையாடப்பட்டன. எரிக்கப்பட்டன. 2 இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக ஓடி வந்தார்கள். இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. தூண்டுதல் என்று சொல்ல முடியாது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.