காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்குத் துரோகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!
காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்குத் துரோகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்றம் 20.09.2016 அன்று வழங்கியத் தீர்ப்பில், இந்திய அரசு ஒரு மாதத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று காலவரம்பு விதித்தும், 21.09.2016 முதல் 27.09.2016 வரை நொடிக்கு 6,000 கன அடி காவிரி நீரைக் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டுமென்றும் கட்டளையிட்டுள்ளது.
நேற்று (21.09.2016) கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் அமைச்சரவைக் கூட்டம் ஆகியவற்றை நடத்தியபின், அம்மாநில முதல்வர் சித்தராமையா உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்றும் 24.09.2016 அன்று கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த முடியாது என்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப்பின், காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமையைக் கலந்து ஆலோசித்தபின் இந்த முடிவுகளை சித்தராமையா அறிவித்ததாக இன்று (22.09.2016) “இந்து” ஆங்கில நாளேடு கூறியுள்ளது. காங்கிரசுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைவர்களான சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் கர்நாடகக் காங்கிரசு முதலமைச்சர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்ததற்குத் துணை நிற்கிறார்கள் என்பதும், அவ்விரு தலைவர்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகமிழைத்துக் கர்நாடகத்தின் தமிழினப்பகை அரசியலுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டிலுள்ள காங்கிரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் தங்களுடைய அனைத்திந்தியத் தலைமை தமிழர்களுக்குச் செய்யும் துரோகத்தை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது அனைத்திந்தியத் தலைமையின் நிலைபாட்டை நடுநிலையாக மாற்றுகிறார்களா என்பது இன்று தமிழ் மக்கள் முன் உள்ள கேள்வியாகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என்பதை கர்நாடகத்தைச் சேர்ந்த பா.ச.க. அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா இருவரும் ஒளிவு மறைவின்றித் தெரிவித்து, அச்செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. சதானந்தகவுடா புதுதில்லியில் நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தக் கூடாது என்று வற்புறுத்திய செய்தியும் ஊடகங்களில் வந்துள்ளது.
பா.ச.க.வின் அனைத்திந்தியத் தலைமை, தனது கட்சியின் கர்நாடகத் தலைவர்கள் அதிலும் குறிப்பாக, நடுவண் அமைச்சர்களாக உள்ளவர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாதே என்று சொல்வதைக் கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து அவர்கள் அவ்வாறு பேசி வர அனுமதி அளிப்பது, தமிழ்நாட்டு மக்களுக்கு பா.ச.க. தலைமை செய்யும் துரோகமாகும். தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர்களும் தொண்டர்களும் தங்கள் அனைத்திந்தியத் தலைமையின் நடுநிலை தவறிய, தமிழர் விரோத அணுகுமுறையை மாற்றி அமைக்காமல் தமிழ்நாட்டில் காவிரி உரிமை பற்றி பேசிக் கொண்டிருப்பது ஏமாற்று வேலையாகவே தமிழர்களால் புரிந்து கொள்ளப்படும்.
இவ்வளவு நெருக்கடிகள் சூழ்ந்துள்ள நிலையிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த, நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா ஈடுபடாமல் இருப்பதன் மர்மம் என்ன?
கர்நாடகத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அனைத்துக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டியதுடன் கர்நாடக வெகு மக்களிடம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு எதிராகவும் கன்னட இனவெறியை மறைமுகமாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தூண்டி வருகிறார். ஆனால், தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவது குறித்து ஒருவகை “அரசியல் தீண்டாமை”ப் பார்வையே தமிழக முதல்வர் செயலலிதாவிடம் இருக்கிறது. அவரின் இந்த அணுகுமுறை தமிழ் மக்கள் அவரை நம்பி ஒப்படைத்திருக்கும் பொறுப்புக்கு துரோகமிழைப்பதாக அமையும்!
கர்நாடக முதலமைச்சர் மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுப்பதுடன், முதலமைச்சர் செயலலிதா நேரடியாக, இந்தியத் தலைமை அமைச்சர் மோடி அவர்களைச் சந்தித்து, உச்ச நீதிமன்றத்தின் 20.09.2016 தீர்ப்பைச் செயல்படுத்துமாறு கர்நாடக முதல்வருக்கு கட்டளையிட்டு, அரசமைப்புச் சட்ட உறுப்பு 355-இன் கீழ் கடிதம் எழுதுமாறு வலியுறுத்த வேண்டும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த வைத்திடவும், கர்நாடகத்தில் ஆளுங்கட்சியின் துணையோடு அனைத்துக் கட்சிகளும் கன்னட வெறி அமைப்புகளும் நடத்தும் தமிழர் விரோத அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவும், தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகள், உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து மக்கள் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டிய தருணமிது! இந்த அவசரத் தேவையை உணர்ந்து, உள்ளாட்சித் தேர்தலை சில மாதங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தள்ளி வைக்க வேண்டும்.
பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.
ஒருங்கிணைப்பாளர்,
காவிரி உரிமை மீட்புக் குழு.
Leave a Comment