பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு - பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு.
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
இந்திய விடுதலைக்குப் பிறகு பாரதமாதா பலிகொண்ட தமிழர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. இப்போது, தமிழின இளங்குருத்து தம்பி பா. விக்னேசு தழல் ஈகியாகியுள்ளார். விக்னேசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றம் 2013 சனவரி மாதம் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்முறைக் குழு ஆகியவற்றை அமைத்து அதனைச் செயல்படுத்துமாறு இந்திய அரசுக்குக் கட்டளையிட்டது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு பகுதியாக உள்ள அரசிதழில் வெளியிடுவதை மட்டும் செயல்படுத்திவிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் நயவஞ்சகமாக அப்போதிருந்த காங்கிரசுக் கூட்டணி அரசும், இப்போதுள்ள பா.ச.க. கூட்டணி அரசும் ஒதுங்கிக் கொண்டுவிட்டன.
இதனால்தான், தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீர் கர்நாடக ஆட்சியாளர்களாலும் கன்னட வெறியர்களாலும் தடுக்கப்பட்டுள்ளது. எனவே, விக்னேசு தீக்குளிப்பும் வழக்கமான இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு அரசியலால் விளைந்ததே!
பாரதமாதா பலிகொண்ட மற்றொரு தமிழனே விக்னேசு!
தமிழக வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தில், 1953இல் சிறைபட்ட 2 தமிழர்கள் சிறையிலேயே உயிரீகம் செய்தனர். தெற்கெல்லை மீட்புப் போராட்டத்தில், 11.08.1954 அன்று, 16 தமிழர்கள் கேரளக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டிற்குத் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட வலியுறுத்தி, காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் நடத்தி 13.10.1956-இல் பலியானார் பெரியவர் சங்கரலிங்கனார்.
இந்தித் திணிப்பை எதிர்த்து 1964 சனவரி 25-இல், கீழப்பழூர் சின்னச்சாமி முதல் தீக்குளிப்பு ஈகியாக உயிர் நீத்தார். அதன்பிறகு, 1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்து கோடம்பாக்கம் சிவலிங்கம் தொடங்கி மயிலாடுதுறை மாணவன் சாரங்கபாணி வரை தீக்குளித்தும் நஞ்சுண்டும் உயரீகம் செய்தோர் எட்டு தமிழர்கள். அப்போது துப்பாக்கிச் சூட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் பலியானார். தமிழ்நாட்டில் அந்த மொழிப் போரில், காவல்துறையினராலும் இந்தியப் படையினராலும் 300 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காவிரித் தீர்ப்பாய இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டதை எதிர்த்து கர்நாடகத்தில் 1991 திசம்பரில், கன்னடர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டத்தில் பன்னிரெண்டு தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களின் வணிக நிறுவனங்களும் வீடுகளும் எரிக்கப்பட்டன.
அடுத்து, ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க அப்துல் ரவூப், முத்துக்குமார் தொடங்கி சேலம் விசயராஜ் வரை இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் தீக்குளித்து உயிர் நீத்தனர். முல்லைப் பெரியாறு அணை உரிமை காக்க கூடலூர் செல்வபாண்டியன், தேனியில் 2011 திசம்பரில் தீக்குளித்து உயிரீந்தார்.
இந்திய விடுதலைக்குப் பிறகு, கச்சத்தீவும் தென்கடலில் மீன் பிடி உரிமையும் பறிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 600 பேர் சிங்களப் படையாட்களால் சுட்டும் அடித்தும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் சிங்களர் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்து வாடுகின்றனர்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நீரில் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீர் மறுக்கப்பட்டதால், வேளாண்மை செய்ய முடியாமல் எண்ணற்றத் தமிழ்நாட்டு உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
பேருந்தில் பயணம் செய்த தமிழர்கள் 20 பேரை, 2015இல் ஆந்திரக் காவல்துறை கடத்திக் கொண்டு போய், கட்டி வைத்து சுட்டுக்கொன்றது.
இவையெல்லாம் தமிழர்கள் பாரத மாதாவுக்குக் கொடுத்த பலிகள்! ஆயுதப் போராட்டம் நடத்தாத ஒரு மாநிலத்தில், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் 1947 – ஆகத்து 15க்குப் பின் மக்களை பலி கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்!
அந்த பலிகளில் ஒருவராக நம்முடைய இளம் தம்பி – நாம் தமிழர் கட்சி மாணவர் அணிப் பொறுப்பாளர் மன்னார்குடி விக்னேசு ஈகியாகியுள்ளார். அவரைப் படிக்க வைத்து – அவரின் எதிர்காலம் பற்றிய கற்பனையில் வாழ்ந்த அவர்தம் பெற்றோர் திருவாளர்கள் பாண்டியன் – செண்பகவல்லி ஆகியோருக்குப் பேரிழப்பு! ஆற்றலும் அறிவுமுள்ள ஓர் இளைஞரை இழந்தது தமிழினத்திற்கும் பேரிழப்பு!
விக்னேசு கடிதத்தை படிக்கும்போது, தழல் ஈகி முத்துக்குமாரைப் போல் விக்னேசும் அறிவாற்றல் மிக்க போர்க்குணமுள்ள இளைஞர் என்று தெரிய வருகிறது. அப்படிப்பட்ட ஆற்றலுள்ளவர்கள் மக்களைத் திரட்டிப் போராட தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழின உரிமைகளுக்காகத் தங்களை மாய்த்துக் கொள்ளும் போராட்டங்களைக் கைவிட வேண்டும்.
இவ்வளவு அறிவாற்றலும் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் உள்ள விக்னேசு மக்களைத் திரட்டும் களத்தில் இறங்கி தொடர்ந்து பணியாற்றினால், நம் இனத்திற்கு எவ்வளவு பெரிய பயன் கிடைத்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, நம் இன எதிரிகள் நம் இளைஞர்களின் ஒப்புமையற்ற இந்த தழல் ஈகங்களால் எந்த நெருக்கடிக்கும் உள்ளாகப் போவதில்லை.
தமிழர் உரிமைகளைப் பறிக்கும் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தமிழ் மக்களுக்குத் தூண்டுதலும், எழுச்சியும் வழங்கும் என்ற கருத்தில்தான், தமிழின இளைஞர்கள் தீக்குளிக்கிறார்கள். அந்த நேரத்தில் அது ஒரு சமூகம் தழுவிய ஆத்திரத்தை உண்டாக்கினாலும், நிரந்தரமான தற்காப்புப் போராட்ட எழுச்சிகளைத் தொடர்ந்து இந்த ஈகங்கள் வழங்குவதில்லை.
தன்னலமற்ற போராளிகள் களப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு - அமைப்பு வழியில் மக்களைத் திரட்டுவதுதான் தமிழின உரிமைகளைக் காக்க – மீட்க வாய்ப்புகளைத் தரும்.
தமிழ்நாட்டில் தீக்குளிப்பு ஈகங்களில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட்டு தங்களை அழித்துக் கொள்வதற்கான காரணங்களில் மக்களின் செயல்பாடின்மையும் செயலற்றத்தன்மையும் அடங்கும்.
தமிழர் உயிர்களும், உரிமைகளும், உடைமைகளும், பகைவர்களால் பறிக்கப்படும் போது, அவற்றைத் தடுக்க அறச்சீற்றத்துடன் மக்கள் திரள் களமிறங்காத நிலையில், அந்த மக்களுக்கு உணர்ச்சியூட்டி களத்தில் இறங்கச் செய்வதற்காக விக்னேசு போன்ற இளைஞர்கள் தங்களைத் தாங்களே தீச்சுடராக்கிக் கொள்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும். இந்த ஈகங்களைக் கண்டு வெறும் இரக்கம் காட்டுவது அல்லது கண்டும் காணாமல் இருப்பது என்ற மக்கள் திரள் மனநிலை மாற வேண்டும்.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் தமிழின உணர்வுச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆவேசப் பேச்சுகளே விக்னேசு போன்ற இளைஞர்களைத் தீக்குளிக்கத் தூண்டி விடுகின்றன என்று ஒரு சாரார் கொச்சைப்படுத்துகின்றனர். முதலமைச்சர் செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டபோது, நூற்றுக்கணக்கானோர் இதே தமிழ்நாட்டில் தீக்குளிப்பு உள்பட தற்கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களையெல்லாம் செயலலிதா தூண்டிவிட்டார் என்று யாரும் அப்போது விமர்சிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழின உரிமைகளைக் காக்கச் செயல்படுவோரைக் கொச்சைப்படுத்திட, ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், மேற்கண்டவாறு உள்நோக்கம் கொண்ட விமர்சகர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இளம் தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம் செலுத்தும் அதே நேரத்தில், நம் இளைஞர்கள் இனி யாருமே தீக்குளிப்புப் போராட்டத்தில் இறங்கித் தங்களை அழித்துக் கொள்ளாமல் களச் செயல்பாடுகளில் ஈடுபட்டு போராளிகளாக – தலைவர்களாக உருவாக வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Leave a Comment