மறுக்கப்படும் காவிரி தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள் - 1 - கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
மறுக்கப்படும் காவிரி
தமிழகத்தில் தொடரும் குழப்பங்கள்
கி. வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் அக்டோபர் 1-15 இதழில் வெளியாகியுள்ள தோழர் பெ. மணியரசனின் கர்நாடகச் சிறையில் காவிரித்தாய் கட்டுரை, பொறியாளர் வீரப்பனின் ’கர்நாடகத்தைக் கட்டுப்படுத்த வழி என்ன?’ கட்டுரை ஆகியவற்றின் தொடர்ச்சியாக இக்கட்டுரையைப் படியுங்கள்)
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக காவிரிச்
சிக்கல், ஒரு கட்டத் தீர்வை அடைந்தது போல் தெரிந்து, மீண்டும் பழைய நிலைக்கு பின்தள்ளப்பட்டிருக்கிறது.
காவிரி வழக்கை விசாரித்து
வந்த உச்ச நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, கடந்த 20.09.2016 அன்று “காவிரித் தீர்ப்பாயத்தின்
ஆணைக்கிணங்க காவிரி மேலாண்மை வாரியத்தை இன்னும் 4 வாரத்திற்குள் நடுவண் அரசு அமைக்க
வேண்டும்” என்று தீர்ப்புரைத்தது.
வழக்கு விசாரணை தொடர்ந்த
நிலையில், கடந்த 30.09.2016 அன்று திறந்த நீதிமன்றத்தில், நடுவண் அரசுத் தலைமை வழக்குரைஞர்
முகில் ரோத்தகி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவண் அரசு பணிகள் தொடங்கிவிட்டதாக அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, வாரியத்தை அமைக்க எவ்வளவு நாள் தேவைப்படும் என நீதிபதிகள் கேட்டபோது,
அரசு வழக்குரைஞர் ரோத்தகி அக்டோபர் 4-க்குள் அமைக்கலாம் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச
நீதிமன்றம், “காவிரி மேலாண்மை வாரியத்தை 04.10.2016–க்குள் அமைக்க வேண்டும்” என்றும்,
காவிரி மாநிலங்கள் இந்த வாரியத்தில் இடம்பெற வேண்டிய தங்கள் பேராளர்களின் பெயரை 01.10.2016-க்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.
உடனடியாக முன்னாள் தலைமையமைச்சர்
தேவகவுடா கர்நாடக சட்டமன்ற வளாகத்தில், உண்ணாப்போராட்டத்தைத் தொடங்கினார். பா.ச.க.வின்
நடுவண் அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்தகுமார், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர், நடுவண்
நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது
என வலியுறுத்தி மனு அளித்தனர்.
எப்போதும் தமிழ்நாட்டுக்கு
எதிராகவே செயல்படும் இந்திய அரசு, கர்நாடகத்தின் எதிர்ப்பை பயன்படுத்திக் கொண்டு, உச்ச
நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில்லை என முடிவெடுத்தது.
காவிரி வழக்கு 04.10.2016-இல்
வந்தபோது, இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் ரோத்தகி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிப்
பேசினார். மேலாண்மை வாரியத்தை அமைத்துவிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் தான் வாக்குறுதி
அளித்தது “தவறுதலாக நடந்து விட்டது” என்று கூறினார்.
உறுப்பு 262 கூறுவதென்ன?
“அரசமைப்புச் சட்ட உறுப்பு
– 262-இன்படி, மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்குதான்
உண்டு, உச்ச நீதிமன்றம் அதில் ஆணையிட முடியாது” என்றும், “காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்க வேண்டும் என்பது தீர்ப்பாயத்தின் பரிந்துரையே தவிர, ஆணையல்ல” என்றும் இந்திய
அரசு வாதிட்டது.
மேலும், இது தொடர்பாக
மூன்று நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு உருவாக்கப்பட்டு, அதனிடம் மேற்சொன்ன சிக்கல்கள்
குறித்து விசாரணைக்கு விட வேண்டும் என்றும் இந்தி அரசு வலியுறுத்தியது.
இதன்படி, 27.09.2016
நாளிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மூன்று
நீதிபதிகள் அமர்வின் மேல் விசாரணைக்கு தள்ளிவிடப்பட்டது.
அரசமைப்புச் சட்டத்திலும்,
தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலும் தெளிவாகச் சொல்லப்பட்டவற்றையே விவாதத்திற்கு உட்படுத்தி,
தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய குறைந்தளவு நீதியைக்கூட இந்திய அரசு தட்டிப் பறித்துவிட்டது!
1949இல் இறுதி செய்யப்பட்ட
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 262, மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகள்,
நிலவும் ஆற்றுச் சமவெளிகள் குறித்து, சட்டமியற்றும் அதிகாரம் பற்றி பேசுகிறது.
மாநிலங்களுக்கிடையில்
பாயும் ஆறுகள், நிலவும் ஆற்றுச் சமவெளிகள் ஆகியவற்றின் பயன்பாடு, பங்கீடு, கட்டுப்பாடு
ஆகியவை குறித்து விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்கத் தேவையான பொறியமைவுகளை உருவாக்க சட்டமியற்றும்
அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு என 262 (1) கூறுகிறது.
அரசமைப்புச் சட்டத்தில்
எது கூறப்பட்டிருந்தாலும் இவ்வாறு அமைக்கப்படும் பொறியமைவின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம்
தலையிட முடியாது என சட்டமியற்றும் அதிகாரமும் நாடாளுமன்றத்திற்கு உண்டு என 262 (2)
கூறுகிறது.
இந்த உறுப்பு அளித்த
அதிகாரத்தைப் பயன்படுத்திதான், 1956 – மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தை
நாடாளுமன்றம் இயற்றியது. இச்சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட தண்ணீர் தீர்ப்பாயங்கள் வழங்கும்
தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று இச்சட்டத்திலேயே வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைபாட்டை வலுப்படுத்தும்
வகையில், 1980, 2002 ஆகிய ஆண்டுகளில் தண்ணீர் தகராறு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
அவ்வளவே!
1956 – மாநிலங்களுக்கிடையிலான
தண்ணீர் தகராறுச் சட்டம் – பிறப்பிக்கப்பட்ட பிறகு அரசமைப்புச் சட்ட உறுப்பு - 262
செயல்படத் தொடங்கிவிட்டது. தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் தலையிடக்கூடாது என தண்ணீர் தகராறு
சட்டத்தில் விதிகளைச் சேர்க்க நாடாளுமன்றத்திற்கு 262 (2) அதிகாரம் வழங்குகிறது. அந்த
அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தில் விதி
6 (2) உருவாக்கப்பட்டது. அத்துடன், நாடாளுமன்றத்தின் பணி முடிவடைந்து விடுகிறது.
மேலும், இச்சட்டத்தில்
என்ன திருத்தம் செய்து கொள்வதற்கும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், அவ்வாறு
சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, அதன் செயல்பாட்டில் நாடாளுமன்றம் குறுக்கிடவே முடியாது.
இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பது,
அச்சட்டத்தின் செயல்பாடு! அவ்வாறு அச்சட்டத்தின் நேர்த்திசை செயல்பாட்டை கர்நாடகம்
தடுக்கிறது என்பதுதான் சிக்கல்! அதுதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது.
ஒட்டுமொத்த அரசமைப்புச்
சட்டத்தின் இறுதிக் காவலர் என்ற வகையில், இதில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது. அதற்கு
மேல் தண்ணீர் தகராறுச் சட்டத்தில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல,
நாடாளுமன்றத்திற்கும் அதிகாரமில்லை!
இந்த வழக்கில், தீர்ப்பாயத்தின்
தீர்ப்புக்குள் நுழைந்து உச்ச நீதிமன்றம் திருத்தம் சொல்லவோ, விளக்கம் சொல்லவோ இல்லை.
அது தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி மட்டுமே பேசுகிறது. இந்த வகையில்,
உச்ச நீதிமன்றம் தனது அதிகார வரம்புக்குள்தான் நிற்கிறது. அதையே தாமதமாகச் செய்கிறது
என்பதுதான் நமது குற்றச்சாட்டு!
அதேபோல், நாடாளுமன்றமும்
அதாவது இந்திய அரசும் தனது சட்ட வரம்புக்குள் நின்று கொள்ள வேண்டும்.
ஆனால், இந்திய அரசின்
தமிழினப்பகையானது சட்ட வரம்பையும் மீறச் சொல்கிறது.
அரசமைப்புச் சட்ட உறுப்பு
– 262–ஐ படிக்கிற யாருக்கும் புரிகிற தெளிவான நிலைபாட்டை வேண்டுமென்றே குழப்பி, மேலாண்மை
வாரியம் அமைக்க மறுக்கிறது இந்திய அரசு!
இந்திய அரசுக்கு தமிழினப்பகை
என்ற உறுதியான உள்நோக்கம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டின் சட்டமேதைகளும் அரசியல்
செயல்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் குழம்புவதுதான் வேதனையாக இருக்கிறது.
பரிந்துரையா? ஆணையா?
காவிரித் தீர்ப்பாயத்தின்
இறுதித் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பரிந்துரைக்கவில்லை, ஆணையிட்டிருக்கிறது.
இறுதித்தீர்ப்பின் பகுதி
8 (பக்கம் 224, தொகுதி – 5), “காவிரி மேலாண்மை
வாரியம் அமைப்பது”
“காவிரி நீர் தகராறுத்
தீர்ப்பாயத்தின் இறுதி முடிவுகள் மற்றும் ஆணைகள் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கும், (மாநிலங்களை)
அவற்றுக்கு உட்படுத்துவதற்கும், “காவிரி மேலாண்மை வாரியம்” என்ற பெயரில் மாநிலங்களுக்கிடையிலான
மன்றம் ஒன்றை நிறுவியாக வேண்டும். இந்த வாரியம் இந்திய அரசின் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில்
இயங்க வேண்டும்”.
என்று கூறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம்
நிறுவியாக வேண்டும் (Shall be constituted) என்றுதான் ஆணையிடுகிறதே தவிர, “வாரியம்
அமைக்கலாம்” என பரிந்துரைக்கவில்லை.
இந்த முடிவுக்கு தான்
வந்ததற்கான காரணங்களையும் இறுதித் தீர்ப்பின் இதன் முந்தைய பத்திகள் விளக்குகின்றன.
பத்தி 14-இல், “பொருத்தமான
பொறியமைவை நிறுவுவது முகாமையான தேவை என நாங்கள் கருதுகிறோம். அத்துடன் அவ்வாறு அமைக்கப்படும்
பொறியமைவு தீர்ப்பாயத்தின் முடிவை செயல்படுத்தத்தக்க போதிய அதிகாரம் கொண்டதாகவும் அமைக்கப்பட
வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், எங்களுடைய இந்தத் தீர்ப்பும் வெற்றுத்தாளிலேயே நின்றுவிடும்
என அஞ்சுகிறோம்” என்று கூறுகிறது.
ஏனெனில், இதற்கு முன்
காவிரித் தீர்ப்பாயம் 1991-இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு செயல்படவே இல்லை என்பதை
இந்த இறுதித் தீர்ப்பு வருத்தத்தோடு குறிப்பிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இடைக்காலத் தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளவாறு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்திற்கு ஆணையிடக் கோரி தமிழ்நாடு
அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகுவது தொடர் நிகழ்வாகிவிட்டது என்றும், எனவே இறுதித் தீர்ப்பை
செயல்படுத்துவதற்கு ஒரு பொறியமைவை உருவாக்கியே தீர வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும்
இறுதித் தீர்ப்பு விளக்குகிறது.
இதனடிப்படையில், காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தன்னுடைய முடிவுக்கு தீர்ப்பாயம் விரிவான விளக்கமளிக்கிறது.
இது தொடர்பாக, நர்மதா
கட்டுப்பாட்டு ஆணையம் (NCA) அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு நர்மதை தீர்ப்பாயம் வந்த
விதத்தையும், கிருஷ்ணா தீர்ப்பாயம் தனது தீர்ப்பு செயல்படுவதற்கு உறுதியான பொறியமைவு
நிறுவப்பட வேண்டும் என வாதிடுவதையும் காவிரி இறுதித் தீர்ப்பு எடுத்து விளக்குகிறது.
இதன் போக்கில், மாநிலங்களுக்கு
இடையிலான தண்ணீர் தகராறுச் சட்டத்தில், 6A என்ற புதிய பிரிவு 1980-இல் சேர்க்கப்பட்டதையும்,
6(2) என்ற பிரிவு 2002-இல் சேர்க்கப்பட்டதையும் நிரல்பட விவாதிக்கிறது.
தீர்ப்பாயத்தின் தீர்ப்பை
செயல்படுத்துவதற்கு நடுவண் அரசு ஒரு வழிமுறையையோ, பல வழிமுறைகளையோ ஏற்படுத்த முடிவு
செய்து விட்டு, அதனை அரசிதழில் வெளியிடலாம் என மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச்
சட்டத்தின் பிரிவு 6A (1) கூறுகிறது.
இவ்வாறு அரசிதழில் வெளியிட்ட
30 நாட்களுக்குள் இந்த வழிமுறை (பொறியமைவு) குறித்த நடுவண் அரசின் முடிவை நாடாளுமன்றத்தின்
இரு அவைகளிலும் வைத்து, அவற்றின் ஒப்புதலைப் பெற வேண்டும் என 6A (7) கூறுகிறது.
இப்பிரிவுகள் 27.08.1980–ஆம்
நாள் செய்யப்பட்ட திருத்தங்களின் வழியாக மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் தகராறுச்
சட்டத்தில் சேர்க்கப்பட்ட பிரிவுகளாகும்.
ஆயினும், கிருஷ்ணா ஆற்றுத்
தீர்ப்புக்குப் பிறகு எழுந்த புதிய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, 6(2) என்ற புதிய
உள்பிரிவு 06.08.2002-இல் சேர்க்கப்படுகிறது.
“பிரிவு 6(1)இன் கீழ்
தீர்ப்பாயத்தின் தீர்ப்பு நடுவண் அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அத்தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் ஆணை அல்லது தீர்ப்புக்கு உள்ள அதே வலிமையைப் பெறுகிறது” என்று
6(2) என்ற புதிய பிரிவு கூறுகிறது.
அதாவது, தீர்ப்பாயத்தின்
தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது.
ஏற்கெனவே எடுத்துக்காட்டியபடி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் (Shall be constituted) என்று தீர்ப்பாயத்தின்
இறுதித் தீர்ப்பு உறுதிபடக் கூறிவிட்டது.
எனவே, இதனை உச்ச நீதிமன்ற
தீர்ப்பைப் போல் மதித்து இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்க வேண்டும்.
சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக இருந்தால், அதுதான் நடந்திருக்கும்!
ஆனால், இந்தியாவில் தமிழர்களுக்கு
மட்டும் சட்டத்தின் ஆட்சி செயல்படவே செய்யாது! காவிரிச் சிக்கலிலும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது.
கிருஷ்ணா தீர்ப்பாயம்,
தனது இறுதித் தீர்ப்பில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென தீர்ப்புரைத்தது. அதை எழுத்து
குறையாமல் இந்திய அரசு அப்படியே செயல்படுத்தியது. தீர்ப்பு வந்த மறுநாளே
29.05.2014 அன்றே கிருஷ்ணா மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.
காவிரியில் மேலாண்மை
வாரியம் அமைக்கப்பட்டால், அது தமிழர்களுக்கு வழங்குகின்ற நீதியாகிவிடுமே, ஆரிய இந்தியாவில்
அது எப்படி நடக்கலாம்? எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் சட்டமும் கடலில் வீசப்பட்டுவிட்டன.
இது பா.ச.க.வின் தேர்தல்
திருவிளையாட்டா, முதலமைச்சர் செயலலிதாவின் உடல் நலக்குறைவால் வந்ததா உண்மைக் காரணம்
என்ன? தொடர்ந்து பார்ப்போம்.
(தொடரும்)
Leave a Comment