யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக்கொலை! அக்டோபர் 26 - அறிவன் கிழமையன்று . . . சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை!
யாழ்ப்பாணத்தில் இரண்டு தமிழ் மாணவர்கள் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக்கொலை! அக்டோபர் 26 - அறிவன் கிழமையன்று . . . சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை!
தமிழீழத்தின், யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப்புப் பகுதியில், கடந்த 21.10.2016 வியாழன் இரவு 11 மணியளவில், இரு சக்கர ஊர்தியில் வந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்ஸன் (அகவை 24) மற்றும் நடராசா கஜன் (அகவை 23) ஆகியோரை, சிங்களக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
காவல்துறையினரின் சோதனைச் சாவடிக்கு அருகில் நடைபெற்ற இந்தப் படுகொலைகளை, முதலில் “விபத்து“ என மூடி மறைக்க சிங்களக் காவல்துறையினர் முயன்றனர். அதன்பின்பு மாணவர்கள் உடலில் தென்பட்ட காயங்களை மறைக்க முடியாமல் அது அம்பலமானது.
2009ஆம் ஆண்டே போர் முடிந்துவிட்டதாக சிங்கள அரசு தெரிவித்துவிட்ட பிறகும், தொடர்ந்து வடக்கு – கிழக்குத் தமிழீழத் தாயகப் பகுதியில் பெருமளவிலான சிங்கள இராணுவத்தினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு, தமிழ் மக்கள் துப்பாக்கி முனையில் வாழ்ந்து வரும் அவலம் நீடித்து வருகின்றது.
சிங்கள இராணுவமயமாக்கலுக்கு எதிராகவும், தமிழர் அரசியல் உரிமைகளைப் பெற வேண்டியும் கடந்த செப்டம்பர் 24இல், தமிழீழ மக்கள் “எழுக தமிழ்” பேரணியில் பெருமளவில் கலந்து கொண்ட பிறகு, தமிழ் மக்களை போராட்டக் களத்திற்கு வரக்கூடாது என அச்சுறுத்தும் வகையிலேயே, இந்த படுகொலை நடைபெற்றுள்ளது.
யாழ். மாணவர்களின் படுகொலைகளைக் கண்டித்து, வரும் அக்டோபர் (26.10.2016) அன்று, சென்னையில் அமைந்துள்ள சிங்களத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடுவதென, “தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில், கூட்டமைப்பின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் பங்கேற்கின்றனர். முற்றுகைப் பேரணி, 3 மணிக்கு நுங்கம்பாக்கம் இலயோலா கல்லூரி அருகிலிருந்து புறப்படும்.
தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் தலைமையில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டத்தில் பங்கேற்கிறது.
தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9047162164
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Leave a Comment