தமிழர்களின் கலை - அறிவியல் - பண்பாட்டு வரலாற்றை காட்சிப்படுத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி! பெ. மணியரசன் நேரில் பார்வையிட்டு பாராட்டு!
தமிழர்களின் கலை - அறிவியல் - பண்பாட்டு வரலாற்றை காட்சிப்படுத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் நேரில் பார்வையிட்டு பாராட்டு!
தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில், 10ஆம் ஆண்டாக “தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி”, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், நேற்றிலிருந்து நடைபெற்று வருகின்றது. கண்காட்சியை, தமிழ்நாடு அறிவயல் நகரத் தலைவர் திரு. சகாயம் இ.ஆ.ப. அவர்கள், நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழர்களின் கலை, அறிவியல், பண்பாட்டு வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையில் ஒளிப்படங்களுடன் சிறப்புடன் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை இன்று (15.10.2016) காலை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர் ஏந்தல் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் பார்வையாளர் குறிப்பேட்டில், தலைவர் பெ. மணியரசன் அவர்கள் பின்வருமாறு எழுதினார்:
“தமிழகப் பெண்கள் செயற்களம் நடத்தும் தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி ஆண்டுக்காண்டு வளர்ச்சி பெற்றும் மெருகேறியும் வருவது பாராட்டிற்குரியது. 'செயற்களம்' என்ற பெயருக்கேற்ப செயல்படும் தமிழகப் பெண்கள் செயற்களப் பொறுப்பாளர்கள் அனைவரும் தமிழினத்தின் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள்!”
கண்காட்சிப் பொறுப்பாளர், தலைவர் மணியரசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், கையடக்கத் திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக வழங்கியும் மகிழ்ந்தனர்.
நாள்தோறும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும், தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி, நாளை மாலையுடன் நிறைவு பெறுகின்றது.
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
Leave a Comment