ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரித் தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தைக் கட்டுப்படுத்த வழி என்ன? - பொறிஞர் அ. வீரப்பன் கட்டுரை!



காவிரித் தீர்ப்பு:
உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தைக்
ட்டுப்படுத்த வழி என்ன?

பொறிஞர் அ. வீரப்பன்
பொதுச் செயலாளர், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம்.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2016 அக்டோபர் 1-15 இதழில் வெளியான கட்டுரை)


கடந்த ஒரு வாரமாகவே அரசியல் மட்டங்களிலும் ஊடகங்களின் விவாதங்களிலும், காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் குறித்த கேள்விகள் காரசாரமாக விவாதிக்கப்படுகின்றன.

காவிரித் தீர்ப்பாயம் 1991இல் அளித்த இடைக்காலத் தீர்ப்பு, தற்போது காவிரி வழக்கில் 20.09.2016 நாளிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என கர்நாடக அரசு தொடர்ந்து காவிரி குறித்த தீர்ப்புகளை எல்லாக் காலங்களிலும் மீறியே செயற்படுத்தாமல், இந்திய அரசியல் சட்ட மேலாண்மையினை (Force and Authority of the Constitution) கேலிக் கூத்தாக்கி தினமும் ஒரு செயற்கையான நாடகத்தை (Stage managed show) நடத்தி வருகின்றது.

இவற்றிற்கு இந்தியாவின் தலைமையமைச்சராக இருந்த திரு. தேவகவுடா, முன்னாள் ஆளுநரான திரு. எஸ்.எம். கிருஷ்ணா, இன்றைய நடுவண் அமைச்சரான திரு. சதானந்தா கவுடா, ஆனந்த் குமார் உள்ளிட்டோரும் உடந்தையாகத் துணை போவதை இந்திய அரசு எத்தனை நாளைக்குத்தான் வேடிக்கை பார்க்கப் போகின்றது?

கர்நாடகாவின் வாதங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று, இந்தப் பருவத்தில் போதுமான மழை பெய்யாமையால் தங்கள் நீர்த்தேக்கங்களில் (குறிப்பாக கிருஷ்ணராஜசாகர் அணையில்) மிகக் குறைவான நீர் இருப்பே (present storage capacity) உள்ளது. “கிருஷ்ணராஜசாகரில் இப்போதுள்ள நீர் இருப்பு வெறும் 27 டி.எம்.சி. மைசூரு மற்றும் பெங்களூரு  குடிநீர்த் தேவையோ 40 டி.எம்.சி. இந்த நிலையில் கர்நாடகா காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை (67 டி.எம்.சி.) எவ்வாறு திறந்துவிட முடியும்?” என்று திரும்பத் திரும்பச் சொல்லி 23.09.2016 அன்று கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் கூட்டப்பட்ட சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பாக இரு தகவல்களை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றம் 1990 முதல் 2007 வரையிலான 17 ஆண்டுகளில், காவிரி வடிநிலப்பரப்பு (Cauvery Basin states land area) ஆண்டு சராசரி மழையளவு, கிடைக்கப்பெறும் நீரின் அளவு (@50% dependability) இவற்றின் அடிப்படையில் 740 டி.எம்.சி என்று கணக்கிட்டு, கர்நாடகாவுக்கு அதில் 270 டி.எம்.சி. (குடிநீருக்கு என 30 டி.எம்.சி.) என்று இறுதித் தீர்ப்பில் தெளிவாகத் தெரிவித்துள்ளது. பெய்யும் மழையளவு - கிடைக்கப் பெற்ற நீரின் அளவு தான் கணக்கீடே தவிர, கர்நாடகா அணைகளின் கொள்ளளவு எவ்வளவு, இன்று எவ்வளவு நீர் இருப்புள்ளது என்ற அடிப்படையில் அல்ல!

கர்நாடகா காவிரி ஒப்பந்தம், சட்ட மற்றும் நடுவர் மன்றத் தீர்ப்புகளுக்கெதிராக மறைமுகமாக கபினி மற்றும் ஹாரங்கி, ஹேமாவதி, சுவர்ணவதி அணைகளின் கீழே துணையாறுகளில் வரும் நீரை இடை மறித்து விட்டு, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு மேலேயே ஏறக்குறைய 100 டி.எம்.சி. நீரை இராட்சச நீர் இறைப்பிகளின் (16x2000 HP Pumps & motors) வழியாக இறைத்து அவர்களின் 25,000 ஏரிகளிலும், 10 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல்களிலும் நிரப்பிவிட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில் போதுமான தண்ணீர் இல்லை என்று நாடகமாடு கின்றனர்.

மேலும் இந்திய வானிலை ஆய்வு மையப் (Indian Meterological Dept - IMD) புள்ளி விவரங்களின்படி, கடந்த சூன் -_ ஆகத்து மாதங்களில், கர்நாடகாவில் மழைக்குறைவு வெறும் 8% மட்டுமே. ஆனால் கர்நாடக அரசு அழிச்சாட்டியமாக 48% மழைக்குறைவு என்று உச்ச நீதிமன்றத்திலும் காவிரி மேற்பார்வைக் குழுவிலும் பொய்யுரைக்கின்றது. நல்ல வேளையாக இவ்வாதம் ஒப்புக் கொள்ளப்படவில்லை.

இரண்டாவதாக, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையும் உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் ஆணைகளையும், கர்நாடக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி எதிர்க்க அதிகாரம் உண்டா? இதன் அடிப்படையில் தொடர்ந்து கர்நாடகா காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையே செல்லாக் காசாக்கிவிட முடியுமா? வழக்கறிஞர் திரு கே. எம். விஜயன் உட்பட பலரும் இது அரசமைப்புச் சட்டச் சிக்கல் (Constitutional Break down) என்று கருத்து தெரிவிக்கின்றனர். இவை எல்லாம் மிகச் சரியான கருத்துரைகள் அல்ல என்பது தான் நம் தெளிவான முடிவு.

சான்றுக்கு, காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பினை (மே 1991) எதிர்த்த கர்நாடக அரசு, ”கர்நாடக பாசனப் பாதுகாப்பு அவசரச் சட்டம்என்ற சட்டத்தை இயற்றிய போது அன்றிருந்த இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. ஆர். வெங்கட்ராமன், இது பற்றி உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவிக்க வேண்டுமென்று கேட்டார்.

நவம்பர் 1991இல் 5 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு அமர்வு, ஒரு பன்மாநில நதிநீர்ப் பங்கீட்டில், ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திற்கோ அல்லது மாநில அரசுக்கோ நடுவர் மன்றத் தீர்ப்பினை எதிர்த்து சட்டமியற்ற எந்த அதிகாரமும் கிடையாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து அந்த அவசரச் சட்டத்தை இரத்து செய்தது.

இதுபோலவே, முல்லைப் பெரியாறு வழக்கில், 2006ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரளா அரசின் சட்டமன்றமும், அரசும் இயற்றியகேரளா  அணைப் பாதுகாப்பு சட்டம் - 2006” என்ற அவசரச் சட்டம் செல்லுபடியாகாது என்றும் மிகத்தெளிவான தீர்ப்பினை வழங்கியது. எமக்குத் தெரிந்த வரையில் காவிரி நடுவர் மன்ற அமைப்பு அரசமைப்புச் சட்டம் 262இன்படி அமைந்தது.

உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டம் 124இன்படி அமைக்கப்பட்டது. இவற்றின் முடிவுகளும் தீர்ப்பும், அரசமைப்புச் சட்ட மேலாண்மையினை (Force and Authority of Constitution) உடையவை. எனவே இவற்றை எதிர்த்து மாநில சட்டமன்றமோ அல்லது மாநில அரசோ (அரசமைப்புச் சட்ட உறுப்பு - 168), நாடாளுமன்றமோ (அரசமைப்புச் சட்ட உறுப்பு 79 மற்றும் 80), இந்திய அரசோ (அரசமைப்புச் சட்ட உறுப்பு - 73 மற்றும் 74) எதிர்த்துச் செயற்பட முடியாது.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 144இன்படி, மாநில அரசு மற்றும் நடுவண் அரசு இவற்றின் நடவடிக்கைகளை (தீர்மானம் அல்லது சட்டமியற்றல்) மறு ஆய்வு செய்யும் அதிகாரம் (Judicial Review) உச்ச நீதிமன்றத்திற்குத்தான், அரசமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ளதே தவிர நடுவர் மன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை எதிர்க்கவோ மறு ஆய்வு செய்யவோ மாநிலச் சட்டசபைக்கோ அல்லது நடுவண் அமைச்சரவைக்கோ அதிகாரமில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரு வல்லுநர்களின் தவறான கருத்துரைகள்
கடந்த 24.09.2016 அன்று, சன் செய்திகள் தொலைக் காட்சியில், செய்தியாளர் சதீஷ்குமார் என்பவருக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற வழக்கறிஞர் திரு மோகன் பராசரன் பின்வருமாறு  குறிப்பிட்டார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் மழை குறைவான காலங்களில் வறட்சி மாதங்களில் தமிழ் நாட்டிற்கு மாதவாரியாக எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தெளிவாகத் தெரிவிக்கப் படவில்லை”.

மேற்கண்ட வாதத்தைக் கர்நாடக அரசுக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் திரு. பாலி நாரிமன் அவர்களும் தெரிவித்திருந்தார். அதை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இவர்கள் இருவரும் தாங்களாகவே (By themselves with a application of mind), காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுமையாகவும் படிக்கவில்லை. படித்திருந்தாலும் ஒரு கணக்காசிரியர் அல்லது நீரியியல் வல்லுநர் நோக்கில் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே குறிப்பிட நேரிடுகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05.02.2007), பத்தி 25 மற்றும் 28-களில், மழை பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், எத்தனை விழுக்காடு மழைப் பற்றாக்குறை இருக்கிறதோ, அதே விகிதத்திற்கு ஏற்ப மாநிலங்கள் தமக்குரிய நீரின் விகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெளிவாகக் கூறுகிறது. அப்பத்தியில் உள்ள, “Proportionately reduced among the statesஎன்ற சொற்டொரை ஒரு நீரியல் வல்லுநர் அல்லது கணக்காளர் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஆனால்ஒரு வழக்கறிஞரால் புரிந்து கொள்ள முடியாது என்று நமக்குப் புலனாகிறது.

இரண்டாவதாக, இந்திய அரசின் நீர்வளத்துறைச் செயலாளரும், காவிரி மேற்பார்வைக் குழுவின் தலைவருமான திரு. சசிசேகர், ஆங்கில இந்து நாளேட்டுக்கு 25.09.2016 அன்ற அளித்த பேட்டியில், காவிரிப் படுகையிலுள்ள 8 அணைகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பை காவிரி மேலாண்மை வாரியம் எடுத்துக் கொள்ளாது என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி தண்ணீர் வழங்கலை முறைப்படுத்துவது மட்டுமே அதன் பணி என்றும் தெரிவித்துள்ளார்.

அணைகளின் இயக்கத்தில் நான் பெற்ற 10 ஆண்டு அனுபவத்தில், எமக்குத் தெரிந்த வரையில், மேற் குறிப்பிட்ட எட்டு அணைகளின் இயக்குதலைத் (Operations) தம் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல், எவ்வாறு காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவு நீரைப் பிரித்து வெளியேற்ற இயலும்? இன்னொன்று, காலமுறை பராமரிப்பு அல்லது மராமத்து (Periodical Maintenance of the Dams) மட்டுமே அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பாக இருக்கும்.

இது குறித்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில், பத்தி 14, 15 மற்றும் 16 -களில், பக்ராபியாஸ் மேலாண்மை வாரியம் போலவேதான் காவிரி மேலாண்மை வாரியம் இந்திய அரசால் அமைக்க வேண்டும் என்றும், அது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் தன்னாட்சியுடன் செயல்படும் என்றும், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை செயல் படுத்தும் வகையில் - நீர் அளவைக் கணக்கிட்டு வழங்கும் ஒழுங்குமுறைக் குழுவின் அறிவுறுத்தல்படி அது செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே, அந்த எட்டு அணைகளும் காவிரி மேலாண்மை வாரியத்தின் கட்டுப்பாட்டில்  (இயக்கத்தில்) தான் இருக்க வேண்டும் என்றே காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனவே, இந்திய அரசு அரசமைப்புச் சட்ட உறுப்புகள் 73 மற்றும் 74-இல் தெரிவித்துள்ளபடி, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினை இனியும் காலந்தாழ்த்தாது அமைத்து, இச்சிக்கலுக்கு முற்றுப் புள்ளி வைத்திட வேண்டும்.

மேலும் கர்நாடக அரசு, அரசமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் மேடை நாடகங்களைத் தொடர்ந் தால், இந்தியக் குடியரசுத் தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசமைப்புச் சட்ட உறுப்பு 365இன்படி, கர்நாடக அரசை தன் கட்டுப்பாட்டில் ஏற்று நடத்த வேண்டும்.



No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.