ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

காவிரிப் படுகையில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளிக்கப்பட்ட மீத்தேன் திட்ட இசைவு திரும்பப் பெறப்படுவதாக இந்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் தில்லியில் நேற்று (10.11.2016) அறிவித்திருக்கிறார்.
 
இது மீத்தேன் திட்டத்தை தமிழ்நாட்டில் அறவே நிறுத்தும் அறிவிப்பு இல்லை என்றாலும், தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனம் நிலக்கரிப் படுகையிலிருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கானத் தடை ஆகும். இடைவிடாத உழவர்களின் போராட்டத்திற்கும் அப்போராட்டங்களை வழிநடத்தியத் தலைவர்களுக்கும் செயல்வீரர்களுக்கும் கிடைத்த வெற்றி இது!
 
வரம்புக்குட்பட்டதாக இருந்தாலும், இந்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தப் பேரழிப்புத் திட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டிய அறிவாளர்களையும், போராடிய உழவர்களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பாராட்டுகிறது. தமிழ்நாட்டிலிருந்து மீத்தேன் திட்டத்தையும் ஷேல் எரிவளி திட்டத்தையும் அறவே நிறுத்துவதற்கு மக்கள் இயக்கங்களுக்கு இது ஊக்கமளிக்கும்.
 
அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அறிவிப்பில், மீத்தேன் திட்டம் செயல்படும் இடம் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் செயல் களமாக ஊடாடுவதும், தங்கள் அமைச்சகத்திற்குள்ளேயே இத்திட்டம் குறித்து எழுப்பப்பட்ட எதிர்ப்புகளையும் அப்பகுதி உழவர்களின் போராட்டத்தையும் காரணமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
 
மேலும், நாகப்பட்டினம் பகுதியில் பாறை எண்ணெய் (ஷேல் எண்ணெய்), பாறை எரிவளி திட்டம் குறித்து ஓ.என்.ஜி.சி.யோ, ஆயில் இந்தியா நிறுவனமோ ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டிலிருந்து நிலக்கரிப் படிம மீத்தேன் எடுப்புத் திட்டத்தையோ, ஷேல் எண்ணெய் எடுக்கும் திட்டத்தையோ நிறுத்துவதாக தெளிவான அறிவிப்பு எதையும் அவர் வெளியிடாதது ஏமாற்றமளிக்கிறது.
வட அமெரிக்காவில், நியூயார்க், டென்னசி ஆகிய மாகாண அரசுகள் மீத்தேன் - ஷேல் எண்ணெய் எடுக்கும் திட்டங்கள், மண்ணின் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளன. இது பேரழிவை ஏற்படுத்தமாதலால் தங்கள் மாகாணங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதில்லை என ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, போலந்து உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்திருக்கின்றன.
 
மீத்தேன் எடுக்கும் திட்டமும் ஷேல் எரிவளித் திட்டமும் அடிப்படையில் ஒன்றுதான். ஷேல் எரிவளி என்பது பாறைப் படிமங்களிலிருந்து எடுக்கப்படும் மீத்தேன்தான். நிலக்கரிப் படிம மீத்தேன் திட்டத்திற்கும் ஷேல் எரிவளி – ஷேல் எண்ணெய் திட்டத்திற்கும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் Fracking எனப்படும் நீரியல் விரிசல் முறைதான்.
 
3,000 மீட்டர் தொடங்கி 6,000 மீட்டர் வரை – நிலத்திற்குள் துளையிட்டு, பக்கவாட்டில் 2 கிலோ மீட்டர் வரையிலும் எட்டு திசையிலும் குழாய் பதித்து 600க்கும் அதிகமான நச்சு வேதிப் பொருட்களை மணலோடு கலந்து, தண்ணீரில் கரைத்து, அதிக வேகமாக செலுத்தி, நிலத்தை சுக்குசுக்காக உடைத்து பாறை இடுக்கில் பதுங்கியிருக்கும் மீத்தேனை உறிஞ்சும் எடுக்கும் தொழில்நுட்பம் இது!
 
பல இலட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வெளியே எடுத்து, அதில் நச்சுக் கழிவுகளைக் கலந்து மேலே விடும்போது, நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்படுவதோடு, நிலத்திற்கு மேலுள்ள நீர்நிலைத் தண்ணீரும் தலைமுறை தலைமுறைக்கும் பயன்பட முடியாத நச்சுத்தன்மையாகிவிடும். இதனால்தான், சூழலியல் அறிவாளர்களும் மண்ணை நம்பி வாழும் பெருந்திரளான மக்களும் இத்திட்டத்தை உலகெங்கிலும் எதிர்த்து வருகிறார்கள்.
 
தமிழ்நாட்டை நிரந்தர நச்சுப் பாலைவனமாக மாற்றி, தாயக மண்ணிலிருந்து பெருந்திரளான தமிழர்களை, ஏதிலிகளாக வெளியேற்றும் திட்டம் என்பதால்தான், தமிழ்த்தேசியப் பேரியக்கம் மீத்தேன் திட்டத்தையும் ஷேல் திட்டத்தையும் எதிர்த்து வருகிறது. மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட மக்கள் இயக்கங்கள் போராடி வருகின்றன.
 
எனவே, இந்திய அரசு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு இசைவு வழங்க மறுத்தது போலவே, ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட அரசு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் இத்திட்டத்தை செயல்படுத்தாது என்று தெளிவான – உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரிப்படுகையிலிருந்து பெட்ரோலியம் மற்றும் எரிவளி எடுக்கக்கூடாது. காவிரிச் சமவெளியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதுதான் அச்சத்தில் இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு மன நிறைவு தரும் அறிவிப்பாக இருக்கும்.
 
எனவே, தமிழ்நாட்டில் மீத்தேன் திட்டம் – ஷேல் திட்டம் ஆகியவை தனியார் வழியாகவோ அரசு நிறுவனங்களின் மூலமாகவோ செயல்படுத்தப்படாது என உறுதியாக அறிவிக்குமாறு இந்திய அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.