இந்தியாவின் நிதிநிலையை சீர்குலைத்த நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!
இந்தியாவின் நிதிநிலையை சீர்குலைத்த நரேந்திர மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தன்னார்வ குதூகலத்தில் - தன் விளம்பர வேட்கையோடு நரேந்திர மோடி அரசு, 500 – 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்த முறை தவறானது என்று உச்ச நீதிமன்றம் இன்று (15.11.2016) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த அரைவேக்காட்டு நடவடிக்கை இந்தியா முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் சிறிய – நடுத்தர வணிகம் ஆகியவற்றை முற்றிலுமாக நிலைகுலைத்துள்ளன.
காய்கறிகள்கூட விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன. வணிகர்கள் மட்டுமின்றி, அவற்றை உற்பத்தி செய்யும் உழவர்களின் கதி என்னாவது? டீசல் வாங்கவும், மற்ற இன்றியமையா செலவுகளுக்கும் பணமில்லாமல் மீனவர்கள் படகுகளை எடுத்துச் சென்று மீன் பிடிக்க முடியாமல் துயரத்தில் சிக்கியுள்ளனர்.
இந்திய அரசு உண்டாக்கிய இந்தப் பொருளாதாரச் சிக்கலால் மருத்துவமனைகளில் பழைய ரூபாய் நோட்டு வாங்காமல் குழந்தைகள் இறந்துள்ளன. கிராமப்புறங்களில் தங்களது சேமிப்புத் தொகைப் பயன்படாத நிலையில் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. சில திருமணங்கள்கூட நின்று தற்கொலைகள் நடைபெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் 09.11.2016-லிருந்து கிராமப்புற மக்களின் வங்கியான கூட்டுறவு வங்கிகள் முற்றாக முடங்கிவிட்டன. உழவர்களும் கூட்டுறவு வங்கிகளில் வேலை செய்வோரும் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
“வளர்ச்சியின் தூதுவர்” என்றும், “செயல்படும் அரசின் நாயகர்” என்றும் வர்ணிக்கப்பட்ட நரேந்திர மோடியின் விளம்பரப் பேராசைக்கு இந்தியப் பொருளாதாரம் பலியிடப்பட்டுள்ளது. அனைத்திந்திய அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலைகுலைவுக்கு இடையில், நரேந்திர மோடியின் வாய்ச்சவடால் மட்டும் குறையவில்லை. தன்னை எரித்தாலும் – தன்னைக் கொலை செய்தாலும் தான் பின் வாங்கப் போவதில்லை என்று பேசி, தனக்குத் தானே பேய் விரட்டிக் கொள்கிறார்.
அம்பானி, அதானி உள்ளிட்ட விரல்விட்டு எண்ணக்கூடிய பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் சில, வரி பாக்கி மட்டும் எட்டரை இலட்சம் கோடி வைத்துள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடியே சொன்னது போல், இந்தியாவுக்கு வெளியே 25 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் இருக்கிறது.
இவற்றைலெ்லாம் மீட்க உருப்படியான நடவடிக்கை எதுவும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக மோடி அரசு எடுக்கவில்லை. கருப்புப் பணம் – கள்ளப்பணம் ஆகியவற்றை உண்மையிலேயே ஒழிப்ப தென்றால், ஒட்டு மொத்த சமூகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், அதிகார வர்க்கம், அரசியல் வாதிகள், நீதித்துறை, பெரும் வணிக நிறுவனங்கள், திரைப்படத்துறை போன்ற பலவற்றில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் ஆகிய வற்றின் மீது தாக்குதல் தொடுத்து, அவற்றை ஒழுங்குபடுத்த முன்வர வேண்டும். இவற்றில் எதுபற்றியும் நரேந்திர மோடி அரசு அலட்டிக் கொள்ளவில்லை. சாமான்ய மக்கள் பயன்படுத்தும் ரூபாய் தாள்களைத் தடை செய்து விட்டு ஊழல் ஒழிப்பு வேடம் போட்டு, மேற்கண்ட துறைகளில் உள்ள கொள்ளையர்களைப் பாதுகாக்கிறது.
பண வீக்கம் - விலைவாசி உயர்வு வர வாய்ப்புள்ளது
இந்த நிலைகுலைவை சரி செய்வதற்காக உடனடியாக ஏராளமானப் பணத்தாள்களை புழக்கத்தில்விடப் போகிறார்கள். இந்த நடவடிக்கையானது பெரிய அளவுக்குப் பண வீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் உண்டாக்கப் போகிறது!
இந்த நிலைகுலைவை சரி செய்வதற்காக உடனடியாக ஏராளமானப் பணத்தாள்களை புழக்கத்தில்விடப் போகிறார்கள். இந்த நடவடிக்கையானது பெரிய அளவுக்குப் பண வீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் உண்டாக்கப் போகிறது!
அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல் அச்சிடப்பட்ட புதிய 2000 ரூபாய் பணத்தாள்கள், பணமெடுக்கும் எந்திரங்களில் (ஏ.டி.எம்.) பொருந்தாத அளவைக் கொண்டிருப்பதால், அவற்றின் வழியாக தொகை எடுப்பதில் சிக்கல் உள்ளது. வெறும் 100 ரூபாய் தாள்களைக் கொண்டு மட்டுமே ஏ.டி.எம்.கள் நிரப்பப்படுவதால், வழக்கமாக எடுப்பவர்களைவிட மிகக் குறைவானர்கள் மட்டுமே அதில் பணம் எடுக்க முடிகிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறுகள் ஏற்படுகின்றன.
இந்தியச் சமூகத்தில் பெரும் நிலைகுலைவை உண்டாக்கிவிட்ட மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, கட்சி வேறுபாடில்லாமல் வாக்களித்து ஒரு மாற்று ஆட்சியை உருவாக்கக்கூடிய சனநாயகத் தெளிவும் அறமும் இருந்தால், நாடாளுமன்றம் நீடிப்பதற்கான பொருத்தப்பாடு இருக்கும். நாளை கூடப்போகும் நாடாளுமன்றம், கட்சித் தலைமைக்கான எசமான விசுவாசிகளின் கூடாரம்தான் என்பதை மீண்டும் மெய்ப்பித்தால், மக்கள் போராட்டம்தான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும்!
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். – மோடி அணியினர் நெருக்கடி நிலை சாற்றலை (பிரகடனத்தை) கொண்டு வர வாய்ப்புண்டு. அதை நோக்கித்தான் மோடி அரசு, காய்களை நகர்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே, சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து மோடி அரசு உண்டாக்கியுள்ள பொருளாதாரச் சீர்குலைவைக் கண்டிக்கவும், சனநாயக உரிமைகளைப் பறிக்கும் நெருக்கடி நிலை வராமல் தடுக்கவும் குரல் கொடுக்க வேண்டிய – போராட வேண்டிய நேரம் வந்துள்ளது.
தோழர் அன்பழகனைத் தாக்கிய தருமபுரி யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை மேலாளரைக் கைது செய்ய வேண்டும்!
தருமபுரி - யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழரும் பங்குச்சந்தை முகவருமான தோழர் அன்பழகன் நேற்று (14.11.2016), இந்திய சேம வங்கியின் வழிகாட்டுதல்படி தனது அலுவலக நிர்வாகத்திற்காக ரூபாய் 10,000 பணமெடுக்கப் போனபோது, அவ்வங்கிக் கிளையின் மேலாளர் பிரபுசர்மா ரூபாய் 2,000 மட்டும்தான் தர முடியும் என்றுகூறி, அன்பழகன் கோரியத் தொகையைத் தர மறுத்து விட்டார்.
அப்பொழுது அன்பழகன், இந்திய சேம வங்கியின் வழிகாட்டுதல் சுற்றறிக்கையை சுட்டிக் காட்டி, 10,000 ரூபாய் கொடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார். அதற்கு மேலாளர் பிரபுசர்மா, அன்பழகனை அவமரியாதையுடன் பேசியதுடன் – அங்கிருந்த வாடிக்கையாளர்களுக்குப் பணம் கிடைக்காமல் செய்ய – அன்பழகன் முயல்வதாகத் தவறாகக் கூறி, ஊழியர்களையும் மற்றவர்களையும் தூண்டிவிட்டுள்ளார்.
தனது வேண்டுகோளை வலியுறுத்திக் கொண்டிருந்த அன்பழகனை மேற்படி மேலாளரும் வங்கி ஊழியர்களும் சூழ்ந்து கொண்டு தாக்கி, அவரை இழுத்துக் கொண்டுபோய் பிணைக் கைதி போல் ஒரு அறையில் உட்கார வைத்து விட்டார்கள். செய்தியறிந்து காவல் நிலையத்திலிருந்து காவலர் வந்துதான் அவரை மீ்ட்டு உள்ளார். அன்பழகன் தாக்கப்பட்டது, பிணைக் கைதி போல் உட்கார வைக்கப் பட்டது அனைத்தும் வங்கியிலுள்ள சி.சி.டி.வி. படக்கருவியில் பதிவாகியுள்ளன.
வங்கி மேலாளரும், அவ்வங்கி ஊழியர்களும் தாக்கியதில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் உள் காயங்களுக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு அன்பழகன் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரிடம் விசாரிப்பதற்கு மருத்துவமனை வந்த தருமபுரி பி-1. காவல் நிலையத் துணை ஆய்வாளர், அன்பழகன் கூறியவற்றை அப்படியே எழுதிக் கொள்ளாமல் அவர் விருப்பப்டி எழுதிக் கொண்டு போயுள்ளார்.
இன்று (15.11.2016) தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து அவர்களும், வழக்கறிஞர் முத்துவேலு அவர்களும் தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் சென்று, அன்பழகனைச் சந்தித்து அவர் எழுதிக் கொடுத்தப் புகாரை தருமபுரி பி-1. காவல் நிலைய ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார்கள்.
அன்பழகன் புகாரிலுள்ளபடி வழக்குப் பதிவு செய்து, தருமபுரி – யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் பிரபுசர்மாவையும் மற்ற ஊழியர்களையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். சட்டப்படியான நடவடிக்கையை எடுக்கவில்லையெனில், மேற்படி கிளை மேலாளரைக் கைது செய்ய வலியுறுத்தி, தருமபுரியில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Nandraka parunga 500 2000 noteil vilambaram vera clean india athai mulumayaga seyal padutha kudam ilai atharkul currency noteil advertisement vera
ReplyDelete