ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசைக் கண்டித்து தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசைக் கண்டித்து தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் நரேந்திரமோடி அரசைக் கண்டித்து, தஞ்சையில் 14.10.2016 வெள்ளி அன்று, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறுகின்றது.

தஞ்சைத் தொடர்வண்டி நிலையம் அருகில், 14.10.2016 வெள்ளி காலை நடைபெறும் இப்போராட்டத்தில், தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், மனித நேய சனநாயகக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்கின்றனர்.

பா.ச.க. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு கர்நாடகத்துக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடுநிலையுடன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கு மாறாக, பாகுபாடு காட்டி தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டது. இந்த அநீதியான நிலைபாடு காவிரி உரிமையைத் தமிழ்நாடு நிரந்தரமாக இழந்துவிட வேண்டும் என்ற முடிவில்தான் கொண்டு போய்விடும்!

உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டு உழவர்களையும் மக்களையும் பாதுகாக்கும் என நம்பிய நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தங்களுக்கு ஆணையிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது, இந்த விடயத்தில் அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட முடியாது என்று சொல்லும் இந்திய அரசு, ஆந்திரத்தின் போலாவரம், கிருஷ்ணா உள்ளிட்ட நதிநீர் சிக்கல்களில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றதா? ஒரு வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருக்கிறது என்பதற்காக, அது தொடர்பான மற்ற வழக்குகளில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கக் கூடாது என்று எந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது?

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலேயே பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளதே, அது எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது? மோடி அரசு இல்லாத சிக்கலை இருப்பதாகக்கூறி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பது தமிழ்நாட்டை மேலும் வதைக்கும் எண்ணமேயன்றி வேறென்ன?

பிரிட்டன் காலனியிலிருந்து விடுதலைப் பெற்றபின்பும் போராட்டமே வாழ்க்கையாகிப் போன தமிழினத்திற்கு வந்த சோதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல! மொழிப்போர் தொடங்கி, கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி, மீத்தேன், கூடங்குளம் அணுஉலை, தேனி அணுப்பிளவுக் கூடம், ஏழு தமிழர் விடுதலை என பட்டியல் நீள்கிறது. மொத்தத்தில் தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கித் தமிழர்களை நாடற்றவர்களாக்கத் துடிக்கும் இனப்பகையின் தொடர்ச்சியே இந்த முடிவு!

இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கும் துரோகங்களில் மாபெரும் துரோகம் இது! காலத்தால் மறக்க முடியாத வடுவாக தமிழர் மனங்களில் நீடித்திருக்கும். “இந்தியன்” என்ற பெருமிதத்துடன் இருந்து இழந்தது போதும் தமிழர்களே! இழந்ததை மீட்கக் களம் காண வாருங்கள்!

காவிரி இல்லாமல் வாழ்வில்லை!
களம் காணாமல் காவிரியில்லை!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com
பேச: 94432 74002, 76670 77075

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.