டிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம்! தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!


டிரம்ப் வெற்றி
தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம்!

பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

வட அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஒரு செய்தியை அழுத்தமாக உணர்த்துகிறது.

சொந்த இனம் வெள்ளை இனம் – வந்த இனங்கள் கருப்பினங்கள்; மற்ற இனங்கள் என்ற வேறுபாட்டை முன்னிறுத்தியும், வெள்ளை இன மேன்மை மற்றும் மேலாதிக்கம் ஆகியவற்றை வலியுறுத்தியும் தேர்தல் பரப்புரை செய்த டிரம்பை அந்நாட்டு மக்கள் பெரும்பான்மை அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

இப்பொழுது குடியரசுத் தலைவராக உள்ள பாரக் ஒபாமா – தேர்தலில் போட்டியிட்ட போதும் – வெற்றி பெற்ற பின்னரும், ஒபாமா அசல் அமெரிக்கக் குடிமகன் அல்ல என்றும் அசல் கிறித்தவர் அல்லர் என்றும் பேசியவர் டிரம்ப். நடப்புத் தேர்தல் விவாதம் சூடு பிடித்த போது, குடியரசுத் தலைவர் ஒபாமா, “கருப்பின அமெரிக்கர்கள் ஹிலரி கிளிண்டனுக்கே வாக்களிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“வெளிநாடுகளிலிருந்து வட அமெரிக்காவுக்கு ஊழியர்கள் வருவதால் வெள்ளை இனத்தவர் வேலை வாய்ப்பு பறிபோகிறது. என்னைத் தேர்ந்தெடுத்தால் வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வந்தோரை கணிசமாக வெளியேற்றுவேன்; புதிதாக வராமல் தடுப்பேன்” என்றார் டிரம்ப்!

உலகில் மிகவும் வளர்ச்சியடைந்த முதலாளிய சமூக அமைப்பைக் கொண்ட நாடு வட அமெரிக்கா (USA). நாடாளுமன்ற சனநாயகத்தின் மூலவர்கள் என்று போற்றப்படுவதில் முதல் இடம் பெற்றவர்கள் வெள்ளை இனத்தவர்!

உலகமயம் பற்றி மற்ற நாடுகளுக்குப் பாடம் நடத்துவோர் தங்கள் நாட்டில் சொந்த இனவாதம் பேசுகின்றனர்.

அங்கு ஏன் இனப்பாகுபாடு, இனவாதம் இன்னும் மறையவில்லை?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திருந்தால் அயல் இன ஐரோப்பியர்கள் அதிகமாகப் பிரித்தானியாவில் குடியேறி விடுகிறார்கள். பிரித்தானியாவில் வெள்ளையர்களின் வேலை வாய்ப்பு பறி போகிறது; எனவே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று பெருவாரியாக வாக்களித்து வெளியேறியது பிரித்தானியா! இதுவும் இனச்சிக்கல்தான்!

பிரித்தானியாவில் ஒரு மாநிலமாக இருந்து கொண்டு, தனிநாடு கேட்கும் ஸ்காட்லாந்து – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரியக்கூடாது என்று பெருவாரியாக வாக்களித்திருந்தது. ஏன்?

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தால் வெள்ளை இன மேலாதிக்கத்தை மற்ற இன மக்களின் துணை கொண்டு சமாளிக்கலாம் என்ற நோக்கிலேயே ஸ்காட்லாந்தியர்கள் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியக்கூடாது” என்று வாக்களித்தனர்.

உலகின் முதற்பெரும் முதலாளிய சமூக அமைப்பைக் கொண்டது பிரித்தானியா! மூத்த நாடாளுமன்றத்திற்குச் சொந்தக்காரர்கள் வெள்ளைக்காரர்கள்! அங்கு வெள்ளை இனவாதம், ஸ்காட்லாந்திய இனவாதம், ஐரிஷ் இனவாதம் ஆகியவை இருக்கின்றன.

உலகெங்கும் நாடுகள் பெரும்பாலும் இனத்தாயக அடிப்படையில்தான் அமைந்துள்ளன.

முந்நூறு ஆண்டுகளுக்கு முன் வணிக வேட்டைக்கு வந்த வெள்ளையர்கள் பல்வேறு இனங்களின் அரசுகளை அழித்து, தங்கள் நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற ஒற்றை நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கினர். எனவே தமிழர் உள்ளிட்ட பல இனத்தவர்கள் இன அடிப்படையில் இறையாண்மையுள்ள தாயக நாட்டை உருவாக்கிக் கொள்ளாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழ்நாட்டில் பிற அயல் இனத்தார் மிகையாகக் குடியேறுவதும், வேலை வாய்ப்பைப் பெறுவதும் தமிழர் தாயகத்தைச் சிதைத்து, கலப்பின மாநிலமாக்கும் செயல் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கூறி வருகிறது. அவ்வாறு வரும் வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று போராடி வருகிறது.

இவ்வாறான எமது தமிழினத் தாயகத் தற்காப்புப் போராட்டத்தை “இனவெறி” என்று சாடும் “சனநாயகவாதிகள்”, “சர்வதேசியவாதிகள்” – சனநாயகம் வளர்ச்சியடைந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். அவர்கள் உலக நடப்புகளைப் பார்க்கிறார்களோ இல்லையோ, நம் தமிழ் இளைஞர்கள் ஆண்களும், பெண்களும் தாயகப் பாதுகாப்பு, வெளியார் ஆக்கிரமிப்பு ஆகியவை பற்றி வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும் பார்வையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழினத் தற்காப்புணர்வை ஒவ்வொரு தமிழரும் பெற்றாக வேண்டும்; தமிழினத் தற்காப்பு ஆற்றலை ஒவ்வொரு தமிழரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய தமிழினப் பற்று எந்த அயல் இனத்திற்கும் எதிரான வெறியன்று; நம் இனத் தற்காப்பு சார்ந்ததே! அடுத்தவர் தாயகத்தில் நாம் ஆட்சி கோரவில்லை; ஆதிக்கம் கோரவில்லை! அடுத்த இனத்தார்க்கு நாம் எந்தத் தீங்கும் செய்வதில்லை; தீங்கு நினைப்பதுமில்லை!

வெள்ளை இனத்தவரின் இன அரசியல்தான் டிரம்ப் வெற்றி! தமிழர்கள் இன உணர்ச்சியின்றியிருந்தால் இந்தியதேசியத்தின் வழியாக ஆரிய இனத்தின் மற்றும் வட நாட்டாரின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைகளாகவே வாழ்வோம்! தமிழர்கள் இன உணர்ச்சியின்றி, இடதுசாரிப் பார்வையில் – சர்வதேசியம் பேசி அல்லது திராவிடப் பார்வையில் சொந்தத் தமிழினத்தை இழிவுபடுத்திக் கொண்டால், ஆரிய – வட இனத்தார்க்கு மட்டுமின்றி அண்டை அயல் இனத்தார்க்கும் அடிமைகள் ஆகிவிடுவோம்!

வட அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் மட்டுமல்ல, கர்நாடகத்தின் இந்தியதேசியவாதிகளின் கன்னட இனவெறியையும், கேரளத்தில் இடதுசாரிகளின் மலையாள இனவெறியையும் பார்த்து எச்சரிக்கை பெறுங்கள்!


இன உணர்வு கொள்வோம்; இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் கோருவோம்! 


தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்பேச: 7667077075, 9443918095 

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 

இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Related

வெளியார் சிக்கல் 5615855695624252397

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item