ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“அணுஉலைகளை எதிர்ப்போர் இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற வேண்டும்” கூடங்குளத்தில் அடுக்கடுக்காய் அணுஉலைகள் திறப்பதை எதிர்த்த மாநாட்டில் - கி. வெங்கட்ராமன் பேச்சு!

“அணுஉலைகளை எதிர்ப்போர் இந்திய அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தில் பங்குபெற வேண்டும்” கூடங்குளத்தில் அடுக்கடுக்காய் அணுஉலைகள் திறப்பதை எதிர்த்த மாநாட்டில் - தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் பேச்சு!
#TamilsBoycottGovtOfIndia

“இந்திய அரசால் தமிழ்நாடு குறிவைத்துத் தாக்கப்படுகிறது! என கூடங்குளம் அணுஉலைப் பூங்கா எதிர்ப்பு மாநாட்டில் என தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

கூடங்குளத்தில் உயிர்க்கொல்லி அணுஉலைகளை அடுக்கடுக்காய் அமைக்கும் இந்திய அரசைக் கண்டித்தும், அத்திட்டத்தைக் கைவிடக் கோரியும், “அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு” சார்பில், நேற்று (03.12.2016) நெல்லையில் அனைத்துக்கட்சியினர் மாநாடு நடைபெற்றது.

1988 முதல் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை எதிர்த்து வந்த நிலையில், “கட்டி முடித்தபின் எதிர்க்கலாமா?” என்று சிலர் கேள்விகேட்டனர். தற்போது, தமிழ்நாட்டு மக்கள் போராட்டத்தை சிறிதும் மதிக்காத இந்திய அரசு, கூடங்குளத்தில் 3, 4, 5, 6 அணுஉலைகளை அங்கு நிறுவவுள்ளது. இதனை தொடக்க நிலையிலேயே எதிர்க்கும் வகையிலேயே இம்மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது.

கூடங்குளத்தில் அடுக்கடுக்காய் அணுஉலைகள் அமைக்கும் திட்டத்தையும், கல்பாக்கம் அணுஉலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும், இந்திய அரசு - தமிழ்நாட்டை அணுக் கழிவுக் கிடங்காக மாற்றக் கூடாது, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து அறவழியில் போராடிய மக்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டுமென்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து - தமிழ்நாடு அரசு மக்கள் மீதான வழக்குகளைக் கைவிட வேண்டும், அமெரிக்கா, ஜப்பான், இரசியா ஆகிய நாடுகளுடனான அணு ஒப்பந்தங்களை இந்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டம் - பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி சித்த மருத்துவக்கல்லூரி அருகிலுள்ள “கிங்ஸ் சிக்” அரங்கில், 03.12.2016 மாலை 4 மணியளவில், நாகர்கோவில் “முரசு” கலைக்குழுவினரின் பறை முழக்கத்துடன் மாநாடு தொடங்கியது. முதலில் நடைபெற்ற அறிவாளர் அரங்கில், பச்சைத் தமிழகம் தலைவர் முனைவர் சுப. உதயகுமார், தாளாண்மை உழவர் இயக்கம் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு, இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.

பின்னர் நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவருமான தோழர் கொளத்தூர் தா.செ. மணி தலைமை தாங்கினார். சி.பி.எம்.எல். – மக்கள் விடுதலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் மீ.த. பாண்டியன் வரவேற்றார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு, நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் திரு. வியனரசு, தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம். செரீப், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. நாகை. திருவள்ளுவன், ஆதித்தமிழர் கட்சித் தலைவர் திரு. கு. ஜக்கையன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் எழுத்து வடிவம் :

“கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம், தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும், அணுஉலைகளை இழுத்து மூட முடியவில்லையே என்று நம்மில் பலர் கவலைப் படுகின்றனர். ஆம், அது உண்மைதான். ஆனால், இந்தப் போராட்டம் கண்ணுக்குத் தெரியாத அரசியல் ஆழத்தை மக்களிடத்தில் விதைத்துள்ளது. பலரின் சிந்தனைகளைக் கிளறி, பல விவாதங்களை எழுப்பி, இந்தப் போராட்டம் மகத்தான சாதனை படைத்துள்ளது. சோர்வடைவதற்கான நேரமல்ல இது, நம்பிக்கை கொள்வதற்கான நேரம் இது!

இன்று தமிழ்நாட்டின் மீது இந்திய அரசு, ஒவ்வொரு நாளும் ஒரு தாக்குதலைக் கட்டவிழ்த்துக் கொண்டுள்ளது. ஒவ்வொரு புதிய அறிவிப்புக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய தேவையில் உள்ளோம். தமிழ்நாடு குறிவைத்துத் தாக்கப்படுகிறது. இதனை, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் இயக்கங்களே எதிர் கொண்டு வருகின்றன.

ஆனால், பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களை வைத்துள்ள கட்சிகளோ, தலைவர் பிறந்தநாள் சுவரொட்டி அடிப்பதோடு தங்கள் அரசியல் பணியை நிறுத்திக் கொள்கிறார்கள் என்பது வேதனையான உண்மை!

சென்னையில் எண்ணூர் தொடங்கி, இராமேசுவரம் – கன்னியாகுமரி வரை, தமிழ்நாட்டின் வளங்கள் சூறையாடப்படுகின்றன. தென்மாவட்டங்களில் தாது மணல், கிரானைட், காவிரிப்படுகையில் பெட்ரோல், இயற்கை எரிவளி, மீத்தேன், நெய்வேலி நிலக்கரி, சேலம் இரும்பு என தமிழ்நாடே கனிம வள வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டமே இன்று சுண்ணாம்புத் தொழிற்சாலைகளால் சூழப்பட்டுள்ளது.

இந்திய வல்லாதிக்கத்தின் ஒத்துழைப்போடு, பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியப் பெருமுதலாளிய நிறுவனங்களும் இந்த கொடும் சுரண்டலை முன்னின்று நடத்தி வருகின்றன.

எந்தவொரு அரசுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் வர்க்கத்தன்மை இருப்பது போல, இனத்தன்மையும் உண்டு! சுரண்டலை ஞாயப்படுத்தும் அதிகார வர்க்கம், அதை இனத்தோடு தொடர்புபடுத்தி, ஞாயப்படுத்தும் செயலை நாம் பல இடங்களில் காண முடியும். இன்னொரு இனத்திற்கு எதிராகவும் சுரண்டலை ஞாயப்படுத்தும் செயலை அரசுகள் செய்கின்றன. வட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளியல் சுரண்டலோடுதான், கருப்பின ஒடுக்குமுறையும் இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அதேபோலத்தான், ஆரிய இனத்தின் அரச வடிவமாக இந்திய அரசு செயல்படுகிறது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

ஆயுதப் போராட்டம் நடக்காத ஒரு மண்ணில் கொடுமையான சுரண்டலும் சூறையாடலும் நிகழ்ந்து கொண்டுள்ளது என்றால், அது தமிழ்நாட்டில்தான்! காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில்கூட இந்தளவிற்கு இயற்கை வளச் சூறையாடல் நடப்பதாகத் தெரியவில்லை.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சட்டப்பேரவையில் காவல்துறை மானிய விவாதத்தின், காவல்துறையினர் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்தபோது, முதலமைச்சர் செயலலிதா ஒரு புள்ளி விவரத்தைச் சொன்னார். அதன்படி, இந்தியாவிலேயே அதிகளவில் சனநாயகப் போராட்டங்கள் நடத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது என அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் இந்திய அரசு தமிழ்நாட்டின் மீது தொடுத்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக, அந்தந்தப் பகுதிகளில் தமிழ் மக்கள் போராடி வருவதையே இது காட்டுகிறது. இதில் நமக்கு சில முன்னேற்றங்களும் கிடைக்கின்றன.

அண்மையில், காவிரிப்படுகையிலிருந்து மீத்தேன் எடுக்க தனியார் நிறுவனத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தார். மீத்தேனைத் அந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனம் எடுப்பதற்குதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அத்திட்டம் முற்றிலுமாக கைவிடப்படவில்லை. எனினும், அரசு அந்த குறைந்தபட்ச முடிவிற்கு வருவதற்கு யார் காரணம்? அந்தத் திட்டத்திற்கு கையெழுத்திட்ட, தி.மு.க.வின் மு.க.ஸ்டாலினே அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டுமென்ற சூழலை உருவாக்கியது யார்?

இவற்றையெல்லாம் செய்தது, பெரிய பெரிய கட்சிகள் அல்ல! சிறிய மக்கள் இயக்கங்கள்தான்! மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குப் பின்னால்தான், பெரிய அரசியல் கட்சிகள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வருகின்றன. இது நாம் நம்பிக்கைக் கொள்ளத்தக்க சூழல்! இதில், சோர்வடைய ஏதுமில்லை!

இந்திய விடுதலைப் போராட்டம் நடைபெற்ற போது, அதில் களத்தில் இறங்கி வெளிப்படையாக பங்களிப்பு செய்த மக்கள், எண்ணிக்கையில் மிகவும் குறைவு. ஆனால், அது வெற்றி பெற்றது.

1965ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் மாபெரும் தமிழ்த்தேசிய எழுச்சியாக நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில், ஒவ்வொரு கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் பங்கேற்றனர்? அந்த எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், அதுதான் வரலாற்று சாதனை படைத்து, இந்தித் திணிப்பைத் தடுத்தது!

இன்றைக்கு நம்மை ஒடுக்கும் ஆதிக்க சக்தியினர் நம்மில் எத்தனை விழுக்காடு இருக்கின்றனர்? வெறும் 1% விழுக்காடுதான். ஆனால், 99% விழுக்காட்டினர் அடிமைகளாக உள்ளோம். எனவே, எதிலும் எண்ணிக்கை பெரிதல்ல, ஆனால் நம் இலட்சியமும் இலக்கும் சரியானதாக இருக்க வேண்டும். சமூக மாற்றத்திற்கான உந்துதலும் முயற்சியும் இருக்க வேண்டும். அதுவே வரலாறாக மாறும்!

இன்று, இந்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக – தாக்குதலுக்கு எதிராக, நாம் தனித் தனியாகக் களம் அமைத்துப் போராடி வருகிறோம். ஒருபக்கம் - அணுஉலைத் திணிப்புக்கு எதிரான போராட்டம், இன்னொரு பக்கம் - காவிரிப் படுகையைக் காப்பதற்கானப் போராட்டம் என தனித்தனியே நாம் போராடுகிறோம். எனவேதான், தமிழ்த்தேசியப் பேரியக்கம் இவை அனைத்திற்கும் காரணமான, இந்திய அரசைப் புறக்கணிக்க வேண்டும் என “தமிழர் ஒத்துழையாமை” இயக்கத்தை அறிவித்துள்ளது.
 
இந்திய அரசுக்கு நாம் ஒத்துழைக்கக் கூடாது, இந்திய அரசின் விருதுகளைப் புறக்கணிக்க வேண்டும், இந்திய அரசின் அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தால், அது பொன். இராதாகிருட்டிணனாகவே இருந்தாலும் அவர்களுக்குக் கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று திட்டங்களை வகுத்துள்ளோம். இதுவே தமிழினத்தைத் தற்காக்கும்!

“மாற்று” என்ற பெயரில் நாம் முன்மொழியும் திட்டங்களைக்கூட, எதிரிகள் தமதாக்கிக் கொள்ள முனைகிறார்கள். நாம் மாற்று எரிபொருள் என கதிரவன் ஒளி, காற்றாலை மின் உற்பத்தி பற்றிப் பேசும்போது, அவர்களோ சுற்றுச்சூழலியலுக்குக் கேடு விளைவாக்காத மாற்று – அணுசக்திதான் என்கின்றனர். நாம் பெட்ரோல் – டீசல் அல்லாத மாற்று எரிபொருள் வேண்டும் என்கிறபோது, அவர்கள் மீத்தேன் – ஷேல் மீத்தேன்தான் அது என்கின்றனர். ஆனால், இவையெல்லாம் உண்மையான மாற்று அல்ல! இவையனைத்தும் அழிவுக்கு அழைத்துச் செல்லும் தொழில்நுட்பங்களே!

இந்தத் தொழில்நுட்பங்களே அழிவு வகைப்பட்டதுதான் என்கிறபோது, இதை தனியார் கையாண்டால் என்ன - அரசு கையாண்டால் என்ன? இரண்டுமே அழிவுதான்! மீத்தேன் எடுப்பதை தனியார் நிறுவனம் மட்டுமல்ல, அரசாங்கமும் செய்யக்கூடாது. அதுபோல், முதலாளிய அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்படும் அணுஉலை மட்டுமல்ல, “சோசலிச” இரசியாவால் இறக்குமதி செய்யப்படும் அணுஉலையும் ஆபத்தானதே என்ற புரிதல் வேண்டும். மீத்தேனும் பெட்ரோலும் இலவசமாக மக்களுக்குத் தந்தால்கூட, அவற்றை எடுக்கும் ஆபத்தான திட்டங்களை மக்கள் எதிர்க்க வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பங்களுக்கும் ஒரு வரம்பு உண்டு. அது வளர்ச்சிவாதத்திற்கு உட்பட்டது. வரைமுறையற்ற வளர்ச்சிவாதம் ஆபத்தானது. சூழலை அழிக்கக்கூடியது. எனவே, இந்திய அரசின் வளர்ச்சிவாதத்திற்கு எதிராக – தமிழ்நாட்டின் சூழலியல் வளங்களைப் பாதுகாக்க நாம் விரிவான தளத்தில் போராட வேண்டும். தொடர்ந்து, கூடங்குளம் அணுஉலைகளை எதிர்ப்பதிலும், இந்திய அரசு அறிவித்துள்ள அணுஉலைப் பூங்காவை எதிர்ப்பதிலும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தோள் கொடுத்து நின்று போராடும்! நன்றி!”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
மாநாட்டில் திரளான தமிழின உணர்வாளர்களும், சூழலியல் ஆர்வலர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் பே. மேரி, தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் திரு. மு. தமிழ்மணி, புளியங்குடி தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயலாளர் தோழர் க. பாண்டியன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.