ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட - கும்மிடிப்பூண்டி தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி!

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட - கும்மிடிப்பூண்டி தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி!
கடந்த 12.12.2016 அன்று, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கிய வர்தா புயல், திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிப்பூண்டியில் அமைந்துள் “தமிழீழ ஏதிலியர்” முகாமில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பல நூறு மரங்கள் விழுந்து, பலர் படுகாயமடைந்தனர். கூரைகள் சரிந்து விழுந்தன.
இதனையடுத்து, தி.வி.க. தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களைத் தலைவராகக் கொண்டும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மற்றும் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் கோவை. கு. இராமகிருட்டிணன் அவர்களை தலைமைக்குழுவினராகக் கொண்டும் உருவாக்கப்பட்ட “தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” சார்பில், கும்மிடிப்பூண்டி தமிழீழ ஏதிலியருக்கு உதவும் பொருட்டு, துயர் துடைப்புப் பணிகளுக்குத் திட்டமிடப்பட்டது.
தமிழின உணர்வாளரும் நடிகருமான திரு. த. சத்தியராசு அவர்களும், பல்வேறு தமிழின உணர்வாளர்களும் இப்பணிகளுக்காக நிதியுதவி செய்தனர்.

இவற்றைக் கொண்டு, முகாமிலுள்ள 1048 குடும்பங்களுக்கும் தலா 5 கிலோ அரிசி வீதம் சற்றொப்ப 5 டன் அரிசி நிவாரணமாக வழங்கப்பட்டது.

31.01.2016 அன்று பிற்பகல், கூட்டமைப்பின் பொருளாளரும், த.பெ.தி.க. வடக்கு மண்டல அமைப்பாளருமான தோழர் கரு. அண்ணாமலை தலைமையில், தி.வி.க. தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசிக்குமரன், மண்டல அமைப்பாளர் தோழர் அன்பு தனசேகர், த.தே.வி.இ. தலைமைக்குழுத் தோழர் தியாகு, இளந்தமிழகம் இயக்க அமைப்பாளர் தோழர் செந்தில், த.பெ.தி.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அமர்நாத், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஆவடி நாகராசு உள்ளிட்டோர் குழுவாகச் சென்ற தோழர்கள் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தோழர்கள் வி. கோவேந்தன், மு.வெ. இரமேசு, சி. பிரகாசுபாரதி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, தோழர்கள் முகாமிற்குள் சென்று ஏதிலியரின் குடியிருப்புகளைப் பார்வையிட்டனர்.
திபெத், வங்கதேசம், பாக்கித்தான் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகளுக்கு சிறப்புரிமைகள் வழங்கப்படுவதும், “தமிழர்” என்ற ஒரே காரணத்திற்காக தமிழீழ ஏதிலியர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுவதும் இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது. இதனை மாற்ற நிச்சயம் அதற்கான போராட்டங்களிலும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களிலும் இறங்குவோம் என்ற உறுதியோடு தோழர்கள் விடைபெற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.