ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சல்லிக்கட்டு அறப்போராட்டத்தினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும்! பெ. மணியரசன் கோரிக்கை!

சல்லிக்கட்டு அறப்போராட்டத்தினர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
சல்லிக்கட்டு எனப்படும் தமிழர் ஏறுதழுவலுக்கு நீதித்துறையும் இந்திய அரசும் விதித்த தடையை நீக்கும் போராட்டத்தில் ஒரு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இப்போராட்டத்தில் பங்கு கொண்ட இலட்சோபலட்சம் தமிழின மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் இன உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நெஞ்சு நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் (தமிழ்நாடு திருத்தம்) அவசரச்சட்டம் – 2017” என்ற புதிய சட்டம், நடுவண் அரசின் “விலங்குகள் துன்புறுத்தல் தடைச்சட்டம் – 1960”-இல் ஏழு திருத்தங்கள் செய்துள்ளது.

இவற்றுள் சல்லிக்கட்டு தடை நீக்கத்திற்கான மிக முகாமையான திருத்தங்கள் பின் வருமாறு உள்ளன.

விலங்குகள் எந்தெந்த வகையில் துன்புறுத்தப்படுகின்றன என்றும், எந்தெந்த செயல்கள் துன்புறுத்தல்கள் இல்லை என்றும் பட்டியலிடும் பிரிவு 11 ஆகும். இதில் சில செயல்கள் “துன்புறுத்தல் இல்லை” என்று கூறும் உட்பிரிவு 3இல் ( a )-வில், கால்நடைகளின் கொம்புகளை அழித்தல், கால்நடைகளை மலடாக்குதல், அவற்றின் மீது சூட்டுக் கோலால் முத்திரை போடுதல், மற்றும் அவற்றுக்கு மூக்கணாங்கயிறு போடுதல் ஆகியவை அடங்கும் என்று கூறுகிறது.

இதில், இப்போது பிரிவு 11 – (3) இல் புதிதாக ( f ) என்ற பிரிவைச் சேர்த்துள்ளார்கள். “மரபு வழிப்பட்ட பண்பாடு மற்றும் உள்நாட்டுக் காளை இனம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் சல்லிக்கட்டு நடத்துவது துன்புறுத்தல் ஆகாது” என்று அப்பிரிவு கூறுகிறது.

ஏற்கெனவே உள்ள பிரிவு 22 (ii), “காட்சிப்படுத்திடத் தடை செய்துள்ள விலங்குகள் பட்டியலை நடுவணரசு அரசிதழில் வெளியிட வேண்டும். அவ்வாறான பட்டியலில் உள்ள விலங்கைக் காட்சிப்படுத்தினால் குற்றம்” என்று கூறுகிறது. அந்த விதி அப்படியே இருக்கிறது.

அதன் கீழே, காப்பு விதியாக (Proviso) பின்வரும் பத்தியைச் சேர்த்துள்ளார்கள். “பிரிவு 22இல், மேலே யாது கூறப்பட்டிருந்தாலும், சல்லிக்கட்டு நடத்துவதற்கு அது பொருந்தாது”.

இதன் பொருள் சல்லிக்கட்டு நடத்தலாம் என்பது. ஆனால், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ள தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை அப்படியே இருப்பதால், அதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்றம் ஒருவேளை தமிழ்நாடு சட்டத்திற்கு தடை விதித்தாலும் விதிக்கலாம்.

ஏனெனில், நீதிபதிகள் அவர்களுடைய விருப்பு – வெறுப்பு, அப்போது நிலவும் சமூக மற்றும் அரசியல் சூழல் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, ரேக்ளா போட்டி நடத்துவதற்கு அனுமதி கேட்ட முனியசாமித் தேவர் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், அப்போது நீதிபதியாக இருந்த பானுமதி அவர்கள், ரேக்ளாவுக்குத் தடை விதித்ததுடன், வழக்கில் சேர்க்கப்படாத சல்லிக்கட்டு விழாவுக்கும் தடை விதித்து தீர்ப்பு வழங்கினார். 2006இல் அவர் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தொடக்கி வைத்த சல்லிக்கட்டுத் தடைதான், இன்று வரை தமிழர்களை ஆட்டி அலைக்கழிக்கிறது, துன்புறுத்துகிறது.

மேற்கொண்டு இத்திருத்தத்தில் பிரிவு 27இல், ஏற்கெனவே இராணுவப் பயன்பாட்டுக்கும் உயிரியல் பூங்காவுக்கும் கால்நடைகளைப் பயன்படுத்துவது குற்றமாகாது என்று கூறப்பட்டுள்ளது. அதில் இப்பொழுது, “சல்லிக்கட்டுக்குக் காளைகளைப் பயன்படுத்துவது குற்றமாகாது” என்ற ( c ) பிரிவைச் சேர்த்துள்ளார்கள்.

ஏற்கெனவே உள்ள பிரிவு 28இல், மதச்சார்புள்ள நிகழ்வுகளுக்காக கால்நடைகளைக் கொல்வது குற்றமாகாது என்று கூறியுள்ளார்கள். இப்பொழுது, “சல்லிக்கட்டு நடத்துவது குற்றமாகாது” என்று புதிதாக ( A ) பிரிவை இணைத்துள்ளார்கள்.

இவையெல்லாம் இருந்தும், காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்கிட இப்போதும் பா.ச.க. அரசு மறுத்து விட்டதால், அத்தடையானது – தமிழர் பண்பாட்டின் தலை மீது தொங்கும் கத்தியாகவே உள்ளது.

உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாடெங்கும் கோடிக்கணக்கான மக்கள் அறவழிப் போராட்டம் ஏழு நாள் தொடர்ந்து நடத்தியும் இந்திய அரசு, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க மறுத்து விட்டது. அதே வேளை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு வழியாக சட்டத்திருத்தம் செய்யும் பாதையைக் காட்டியுள்ளது.

தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்குவது வடநாட்டு ஆரிய ஆதிக்க அரசியலுக்கு இழிவு என்று கருதி, தான் செய்ய வேண்டியதை தமிழ்நாடு அரசைச் செய்யுமாறு நரேந்திர மோடி அரசு கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கானக் கோரிக்கைகள்

1. தமிழ்நாடு அரசு, இத்துடன் சல்லிக்கட்டு உரிமைச் சிக்கலைக் கை கழுவி விடாமல் இந்திய அரசை வலியுறுத்தி தடைப்பட்டியலிலிருந்து காளையை நீக்கச் செய்ய வேண்டும்.

2. இப்பொழுது இயற்றியுள்ள சல்லிக்கட்டு உரிமைச் சட்டத்தை நீதிமன்றம் நீக்கி விடாமலிருக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இதைச் சேர்க்க தமிழ்நாடு அரசு முழுமூச்சுடன் செயல்பட வேண்டும்.

3. அறவழிப் போராட்டம் நடத்திய மாணவர்கள் – இளைஞர்கள் – பெண்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது, நேற்று (24.01.2017) சென்னை கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம், கோவை, ஈரோடு முதலிய இடங்களில் காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்தி, படுகாயப்படுத்திய தமிழ்நாடு அரசின் தமிழர் விரோதச் செயலை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இத்தாக்குதல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளையும், இத்தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.
4. காவல்துறையினரே தீ வைப்பில் ஈடுபட்ட நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன. அக்காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.

5. முழு உண்மை அறிந்து தவறு செய்தோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியிலுள்ள நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

6. இதுவரை சல்லிக்கட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இது தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும்.

7. பா.ச.க. ஆட்சிக்கு வந்த பிறகு தனது இந்துத்துவாவுக்கு முரணான தன்னார்வ அமைப்புகள் (என்.ஜி.ஓ.க்கள்) என்று கருதிய ஏராளமான அமைப்புகளைத் தடை செய்துள்ளது. எட்டுக் கோடி தமிழர்களின் வரலாற்றுக்கும், பண்பாட்டுக்கும் வாழ்வியலுக்கும் எதிராகச் செயல்படும் பன்னாட்டுக் குற்றக் கும்பலான பீட்டாவைத் தடை செய்ய மோடி அரசு முன் வராதது ஏன் என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்புகிறார்கள்.

பன்னாட்டுக் குற்றக் கும்பலான பீட்டாவை இந்தியாவிலிருந்து வெளியேற்றிட இந்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பீட்டா அலுவலகம் தமிழ்நாட்டில் எங்கிருந்தாலும் உடனடியாக மூட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.