தொடரும் உழவர்கள் சாவைத் தடுக்க . . . அரசுக்கடன் தள்ளுபடியும் தனியார் கடன் வசூல் தள்ளி வைப்பும் (Moratorium) உடனடித் தேவை! பெ. மணியரசன் அறிக்கை!

தொடரும் உழவர்கள் சாவைத் தடுக்க . . . அரசுக்கடன் தள்ளுபடியும் தனியார் கடன் வசூல் தள்ளி வைப்பும் (Moratorium) உடனடித் தேவை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
கருகிய வேளாண் பயிர்களைக் கண்டு கலங்கிப்போய், மாரடைப்பாலும் நஞ்சருந்தியும் உழவர்கள் சாவும் கொடுமை நாளுக்கு நாள் பெருகி வருவது, தாங்க முடியாத துயரத்தை உண்டாக்குகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு இந்தப் பெருந்துயரத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது உழவர் சாவுகளை மேலும் தூண்டுவதாக அமைகிறது.

உழைக்கும் மக்களுக்காகவே அவதாரம் எடுத்ததுபோல், அன்றாடம் சொற்பொழிவு மழை பொழிந்து கொண்டிருக்கும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு உழவர்கள் சாவு பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் தனது “பொற்கால” ஆட்சி பற்றி புகழுரைகள் ஆற்றி வருவது, கொடுமையிலும் கொடுமை!

தமிழ்நாட்டில், வேளாண்மை பொய்த்ததால் அறுபது பேருக்கு மேல் உழவர்கள் உயிரிழந்து விட்டார்கள். இந்த சாவுகளுக்கு அடிப்படைக் காரணங்கள், கர்நாடகம் தமிழ்நாட்டுக்குரியக் காவிரி நீரை சட்ட விரோதமாகத் தடுத்துக் கொண்டதும், கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை இந்திய அரசு ஆதரித்ததும், தமிழகம் தழுவிய அளவில் பருவமழைப் பொய்த்துப் போனதுமாகும்!

வேளாண் பயிர்கள் தண்ணீரின்றி முற்றிலுமாக அழிந்து போவதை, கண்ணால் காணும் உழவர்கள், “கடன்காரர்களுக்கு என்ன செய்வது?” என்று அஞ்சியே பெரும்பாலும் உயிர் விட்டிருக்கிறார்கள். எனவே, இனியும் உழவர்கள் சாவு தொடராமல் இருப்பதற்கு, தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் கீழ்வரும் மனித நேய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

1. நில உச்ச வரம்பு வைக்காமல், தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் உழவர்களின் கூட்டுறவுக் கடன்களையும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கடன்களையும் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

2. பயிர்க்கடன்கள் மட்டுமின்றி, வேளாண் பணிகளுக்காக, உழுவை எந்திரம் உட்பட எந்தக் கடன் வாங்கியிருந்தாலும், அந்தக் கடனை தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

3. தமிழ்நாடு முழுவதிலும் உழவர்கள் வாங்கியுள்ள தனியார் கடன்கள் அனைத்தையும் ஓராண்டுக்கு வசூலிக்கத் தடை விதித்து தமிழ்நாடு அரசு கட்டளையிட வேண்டும் (Moratorium). உழவர்களுக்குத் தனியார் கொடுத்த கடன்களுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். ஓராண்டு கழித்து, தனியார் கடன்களை பல தவணைகளில் அளிக்க ஆணையிட வேண்டும். இதை மீறும் தனியார் நிதி நிறுவனங்கள் மீதும், வட்டிக்குக் கடன் கொடுத்த தனிநபர்கள் மீதும் சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழ்நாடு முழுவதும் வறட்சியாக அறிவித்து, பயிர்க் காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் போர்க்கால வேகத்தில் செயலில் இறங்க வேண்டும்.

5. வேளாண் பயிர் செய்து, பாழ்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாயும், இவ்வாண்டு சாகுபடி செய்ய முடியாமல் தரிசாய் போட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாயும் தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

6. தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டால், தொழிலாளர்களுக்கு லே ஆப் ஊதியம் தருவது போல், உழவுத் தொழிலாளிகளுக்கு, ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

7. வேளாண் பயிர் கருகியதால் உயிர்விட்ட உழவர் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் உடனடியாக 15 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

8. தமிழ்நாடு முழுவதற்கும் வறட்சித் துயர் துடைப்புப் பணிகள் செய்ய, இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு சிறப்பு நிதிக் கோரி பெற வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதில் காலதாமதம் செய்வது, தமிழ்நாட்டில் மனித அழிவிற்கு இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் மறைமுகத் தூண்டுதல் செய்வதாகவே அமையும்!

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

Related

பெ. மணியரசன் 3285469091574541536

Post a Comment

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

emo-but-icon

அனைத்து இதழ்களையும் படிக்க

புத்தக வடிவில் படிக்க

புத்தக வடிவில் படிக்க
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்

தினம் ஒரு குறள்

தமிழகம்

தமிழீழம்

அதிகம் பார்த்தவை

தேடுக

செய்தித் தொகுப்பு

item