ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முதலமைச்சர் பதவியை முடிவு செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

முதலமைச்சர் பதவியை முடிவு செய்வதில் ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
 


தமிழ்நாடு ஆளுநர் திரு வித்தியாசாகர் ராவ் இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் தேர்வு அல்லது பதவியேற்புக்கான அறிவிப்பைச் செய்யாதிருப்பது, அவர் தமது பதவியை சட்ட விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

செயலலிதா – சசிகலாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் சில நாட்களில் தீர்ப்பு வர இருந்ததால், நேற்று (14.02.2017) வரை, தமிழ்நாடு முதல்வர் தேர்வு அல்லது பதவியேற்புக்கான அறிவிப்பை வெளியிடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தியதில் காரணம் இருந்தது.

ஆனால், நேற்று காலை 10.40 மணியளவில் உச்ச நீதிமன்றம் அவ்வழக்கில் தீர்ப்புச் சொல்லி, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தபிறகு, இன்று (15.02.2017) மாலை வரை முதல்வர் பதவி குறித்து முடிவு எதுவும் எடுக்காமல் ஆளுநர் மவுனம் காப்பது, அவருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் பதவிச் சண்டையைப் பயன்படுத்தி, பா.ச.க. இங்கு வீங்கிப் பெருக்க வேண்டும் என கனவு காண்கிறது. இவ்வாறான பா.ச.க.வின் அரசியல் சதி நோக்கத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்தான் ஆளுநர் திரு வித்தியாசாகர் ராவ் என்றால், அவர் தனது மதிப்பைத் தானே கெடுத்துக் கொண்டவர் ஆவார்.

அரசமைப்புச் சட்டப்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படியும் தமிழ்நாட்டில் நிலவுகின்ற முதலமைச்சர் பதவிச் சிக்கலுக்கு தீர்வு காண ஆளுநருக்கு மூன்று வழிகள் இருக்கின்றன.

1. முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் இருவரில் ஒருவரை சட்டப்பேரவைக் கூட்டத்தில், உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்வது. அடுத்த சில நாட்களில் இதற்காக சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்குரிய அறிவிப்பை உடனடியாக வெளியிடுவது.

2. பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களால் வெளியில் தேர்வு செய்யப்பட்டு அவ் உறுப்பினர்களின் ஒப்புதல் கையொப்பத்துடன் ஆட்சி அமைக்க அனுமதி கோரி, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ள திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்சி அமைக்க உடனயாக வாய்ப்பளிப்பது. அவர் தமது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் மெய்ப்பிக்க கெடு விதிப்பது.

3. இப்போது முதலமைச்சராக உள்ள திரு ஓ. பன்னீர்ச்செல்வத்திற்கு தமது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிறுவிட முதல் வாய்ப்பளிப்பது. அவருக்குப் பெரும்பான்மை இல்லையேல் அடுத்த வாய்ப்பை திரு எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிப்பது.

இவ்வாறான முறைகளில் ஒன்றை உடனடியாக ஆளுநர் தேர்வு செய்து, ஒரு நிமிடமும் காலம் தாழ்த்தாமல் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க. சண்டையை இருபக்கமும் இருந்து கொண்டு, பா.ச.க. ஊதிப் பெருக்கி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரும் சதித் திட்டத்திற்கு ஆளுநர் இடம் கொடுக்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.



இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.