ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்! – தோழர் பெ. மணியரசன்




ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள்!

பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)

தமிழ்நாடு கொந்தளிக்கிறது! மூத்த அரசியல்வாதிகளோ பதவி வேட்டைக்காகக் கொந்தளிக்கிறார்கள்; மோதிக் கொள்கிறார்கள்!

இளைஞர்கள்தாம் தமிழர் உரிமைகளுக்காக, தமிழர் நலன்களுக்காகக் கொந்தளிக்கிறார்கள்!

தைப்புரட்சியின் வெற்றியை அடுத்து, நெடுவாசல் புரட்சியில் இறங்கியுள்ளார்கள்.

காவிரிச் சமவெளியில் மீத்தேனை விரட்டியது, காளை தழுவும் உரிமையை மீட்டது போன்ற தமிழர் வாழ்வுரிமை மற்றும் பண்பாட்டு உரிமைகளைக் காத்ததில் மூத்த அரசியல்வாதிகளுக்கும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் எந்தப் பங்கும் இல்லை!

இப்போதும், எப்போதும் இந்தக் கட்சிகள் பதவி வேட்டைக்காக - பண வேட்டைக்காகப் பரபரப்பாகச் செயல் படுகின்றன. ஒன்றை எதிர்த்து மற்றொன்று போராடுகின்றன. அப்பப்பா, அதில் காட்டும் விறுவிறுப்பும் வேகமும் புயலைக்கூடத் தோற்கடிக்கும்.

அந்த வேகத்தில் நூற்றில் ஒரு பங்கு வேகம் கச்சத்தீவு, காவிரி, பாலாறு, பவானி உரிமைகளைக் காப்பதில், மீட்பதில் இவை காட்டியதில்லை

இக்கட்சிகளின் குறிப்பாகக் கழகங்களின் தலைவர்களை இப்படியே கோயில் மாடுகளைப் போல் ஊர்மேய அனுமதித்துவிட்டு, தமிழர் உரிமைப் போராட்டங்களில் மட்டும், இளைஞர்கள் கவனம் செலுத்துவது போதுமா?

நெடுவாசலில் நச்சுக்குழாய் இறக்கும் அறிவிப்பை நடுவண் அமைச்சகம் 15.2.2017 அன்று அறிவித்தது. அன்றிலிருந்து தமிழ்நாட்டில் அச்சமும் பீதியும் பற்றிக் கொண்டது. மறுநாள் நெடுவாசல் போராட்டக் களமாகியது.

போராட்டத்தின் 12ஆம் நாள், இந்திய அரசு அறிவிப்பு வந்த 13ஆம் நாள் (28.02.2017) தமிழ்நாட்டின் .தி.மு.. அமைச்சர் கே.சி. கருப்பணன், நெடுவாசல் எரிவளித்திட்டத்திற்குத் தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறையிடம் நடுவண் அரசு அனுமதி பெறவில்லை என்று ஒரகடத்தில் கூறினார். எப்படி இவர்களின் தமிழர் காப்பு அக்கறை! இவர்தான் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சர்!

அத்தோடு விட்டாரா கருப்பணன்? இல்லை. அடுத்து அவர் கூறியது, அதிர்ச்சி தருகிறது.

எரிவளி எடுக்க எங்களிடம் வரும்போது, அனுமதிப்பதா, வேண்டாமா என்பது அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது”.

இத்தனை நாட்களாக சசிகலா அரசு இதில் ஒரு முடிவெடுக்கவில்லை! மதில் மேல் பூனை போல் இருக்கிறது.

காவிரியில் கசிவு நீரும் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்க, மேக்கேதாட்டில் 66.5 .மி.. கொள்ளளவில் பெரிய நீர்த்தேக்கம் கட்டுவோம் என்று திரும்பத் திரும்ப கர்நாடக முதல்வரும் அமைச்சர்களும் அறிவித்து வருகிறார்கள். அதற்கான திட்டச் செலவாக ரூ. 5,912 கோடி தொகையும் ஒதுக்கிவிட்டார்கள்.

இதற்கு எதிர்வினையாக, ஒரு கண்டன அறிக்கை - ஒரு மறுப்பறிக்கை .தி.மு.. முதல்வரோ, அமைச்சர்களோ வெளியிடவில்லை. இதற்கு சசிகலா வழிகாட்டவில்லையா? அல்லது அவர்களின்குலதெய்வம்செயலலிதா வழி காட்டவில்லையா?

கர்நாடக அணைகளிலிருந்து கசிந்து வரும் நீரையும் மேட்டூருக்கு மேற்கே கோவிந்தபாடி அருகே தமிழ்நாட்டிற்குரிய காவிரி எல்லைக்குள் பெரும்பெரும் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்துக் கொண்டுள்ளது கர்நாடக அரசு. தமிழ்நாடு அரசு இதைத் தடுக்கவில்லை!

இன்னும் சில நாட்களில் மேட்டூரிலிருந்து குடிநீருக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத அபாயம் காத்திருக்கிறது. இதனாலும் வறட்சியாலும் வரும் மாதங்களில் தமிழ்நாடு குடிநீர் கிடைக்காமல் தவிக்கப் போகிறது. தண்ணீர் இன்றித் தவிக்கும் கால்நடைகளை அறுப்புக்கு அனுப்ப நேரிடும்; அல்லது அவை சாகும்!

நெருங்கி வரும் இந்த பேராபத்தை அரசு கட்டிலில் வீற்றிருக்கும் சசிகலா அமைச்சரவையும் கவனத்தில் கொள்ளவில்லை; ஆட்சியைக் களவாடத் துடிக்கும் மு.. ஸ்டாலினும் கவனத்தில் கொள்ளவில்லை.

தமிழ்நாடு அரசின் ஞாயவிலைக் கடைகளில் கடந்த சில மாதங்களாக ஏற்கெனவே மலிவு விலையில் விற்கப்பட்ட பருப்பு, உளுந்து, பாமாயில் போன்ற பொருட்கள் விற்கப்படவில்லை. இந்திய அரசின் உணவுப் பொருள் வழங்கல் திட்டத்தை .தி.மு.. அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. எதற்காக என்ற விவரம் சொல்லாமல் இந்திய அரசு வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

கூரைவீடா, கட்டட வீடா, மாடிகள் எத்தனை, குளிர்ப்பதனப் பெட்டி இருக்கிறதா, இருசக்கர வண்டி, நாற்சக்கர வண்டி, வருமானம் முதலியவற்றை எல்லாம் கணக்கெடுக்கிறார்கள். இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இக்கணக்கை எடுக்கிறார்கள்.

இக்கணக்கெடுப்பு முடிந்த பின் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டு மக்களுக்கு ஞாயவிலைப் பொருள்கள் கிடைக்காது - இலவச அரிசியின் நிலையும் வினாக் குறியே!

ஞாயவிலைக் கடைகளை மூட வேண்டும் என்று உலக வங்கி, அமெரிக்க - ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவைத் தொடர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. பன்னாட்டு முதலாளிகளின் இந்தியாவின் தலைமை அமைச்சராக உள்ள நரேந்திர மோடியின் ஆட்சி வெளிநாட்டு வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தும் நீரை மீட்டர் வைத்து அளந்து விற்கும் முறையை மோடி அரசு கொண்டு வர உள்ளது. அதற்கான தேசிய நீர்க் கொள்கையை அது அறிவித்து விட்டது. இவற்றையெல்லாம் எதிர் கொண்டு தமிழ்நாட்டின் எட்டு கோடி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் கட்சி எது?

.தி.மு..வோ, தி.மு..வோ அல்லது வேறு பெயரில் சின்ன தி.மு..க்களாகப் பவனி வரும் எதுவுமோ  தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போராடப் போவதில்லை; ஈகம் செய்யப் போவதில்லை!

பதவி, பணம், விளம்பரம் மூன்றும்தான் இக்கட்சிகளின் உண்மையான இலக்கு!

எழுச்சி பெற்றுள்ள இளைஞர்களே, எதிர்வினையாற்றுவது தேவைதான்; ஆனால் அது மட்டும் மக்களைக் காக்காது! நேர்வினையாற்ற வாருங்கள்! மாற்றுத் திட்டங்களை முன்மொழியுங்கள்! மாற்று அரசியலை முன்மொழியுங்கள்!

பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத பண்பை அடிப்படை விதி ஆக்கிக் கொள்ளுங்கள்! ஒரு தலைமுறை உழைத்துப் புதிய தமிழ்த்தேசத்தைக் கட்டி எழுப்புவோம் என்று உறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்!

போலிகளைத் தோலுரியுங்கள். இப்பொழுது ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்தித் தலைமையைக் கைப்பற்றி வேறு பெயரில் புதிய சந்தர்ப்பவாதத் தேர்தல் ஆதாயக் கட்சியை உருவாக்கிட முயலும் தன்னலவாதிகளுக்கு இடம் கொடாதீர்கள்!

தமிழினத் தற்காப்பு அரசியல் உண்மையானதாகப் புதிய வடிவெடுக்க வேண்டும். அந்தப் பாதை பற்றியும் சிந்தியுங்கள்; செயல்படுங்கள்!

இந்திய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை - தமிழர் விரோதச் செயல்பாடுகளை எதிர்ப்பதுடன், தமிழ்நாட்டு அரசின் செயலற்ற தன்மையை எதிர்த்துப் போராட வேண்டும். நடுவண் அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்த்து நாம் போராடும்போது, பார்வையாளராக வீற்றிருக்கும் தமிழ்நாடு அரசின் தமிழினத் துரோகத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

கோயில் மாடுகளைப் போல் ஊர் மேயும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் தன்னல அரசியலை எதிர்த்து, சர்வாதிகாரத் தலைமைகளை எதிர்த்துப் போராட வேண்டும். மாற்றுத் திட்டங்களை முன்வைத்துப் போராட வேண்டும்.

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு - 1-15 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)





No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.