ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கடலூரில் நச்சுவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி: அரசின் அலட்சியம் மட்டுமல்ல அரசே கடைபிடிக்கும் தீண்டாமை! கி. வெங்கட்ராமன் கண்டனம்!

கடலூரில் நச்சுவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி: அரசின் அலட்சியம் மட்டுமல்ல அரசே கடைபிடிக்கும் தீண்டாமை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
கடலூரில் பாதாள சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலாளர்கள், நச்சு வாயுத் தாக்கி பலியான செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கடலூர் மோகினி பாலம் அருகே பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்களை பராமரிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவனம், அக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் கொடிக்கால்குப்பம் பகுதியைச் சேர்ந்த அப்புக்குட்டி என்ற ஜெயக்குமார், வேலு, புதுச்சேரி - சோரியாங்குப்பம் முருகன் ஆகிய மூன்று ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளர்.

பாதாள சாக்கடையில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, நச்சு வாயுத் தாக்கி அம்மூவரும் பலியானார்கள். அவர்களது உடலை பெற்றுக் கொள்ள மறுத்து, அவர்களது உறவினர்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்திய நிலையில்தான், மாவட்ட நிர்வாகம் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்கவும், தனியார் நிறுவனத்தினர் மீது வழக்குப்பதியவும் முன்வந்துள்ளது. மேலும், குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றின் விளைவாக “கையால் மலம் அள்ளுவோரை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் உலர் கழிவறைகள் கட்டுதல் தடுப்புச்சட்டம் - 1993” என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து 1997-இல் செயலுக்கு வந்தது. இச்சட்டத்தில் உள்ள குறைபாடுகள், அவை செயலாவதில் உள்ள குளறுபடிகள், ஆகியவை குறித்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு அவற்றின் விளைவாக 2013-ஆம் ஆண்டு - மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதற்குத் தடை விதித்து சட்டம் (Prohibition of employment as Manual scavengers and their rehabilitation - 2013) இயற்றப்பட்டது.

அதன்பிறகு, 2014ஆம் ஆண்டு - கையால் மலம் அள்ளும் பணிகளை ஒழித்து இதில் ஈடுபட்டுள்ளோருக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக ‘தூய்மைத் தொழிலாளர்கள் சங்கம் - எதிர்- இந்திய ஒன்றிய அரசு’ (Safai Karamchari Andolan -Vs- Union of India) என்ற வழக்கில் 2014 மார்ச் 27 அன்று அன்றைய தலைமை நீதிபதி பா. சதாசிவம் தலைமையில் ரஞ்சன் கோகோய், ரமணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற ஆயம் தீர்ப்பு வழங்கியது.

இவ்வாறான பணிகளில் உரிய பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் ஈடுபடக்கூடாது என சட்டமும் நீதிமன்றத் தீர்ப்பும் கூறி வந்த நிலையில், கடலூரில் அந்தத் தனியார் நிறுவனம் இத்தொழிலாளர்களை விதிமுறைகளை மீறி அப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

ஆயிரம் அடிகளுக்குக் கீழ் நிலத்திற்குள் புதைந்துள்ள மீத்தேன் உள்ளிட்ட கனிம வளங்களைத் தோண்டியெடுக்க தொழில்நுட்பக் கருவிகளை வைத்துள்ள இதே அரசு, சில அடிகளில் உள்ள கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் இல்லாமல் தவிப்பதாக நாடகமாடி வருகின்றது. தமிழ்நாட்டில், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இவ்வாறானப் பணிகளில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் மீதான அரசின் அக்கறையின்மையும், அலட்சியமுமே தொடர்ந்து இது போன்ற உயிர்ப்பலி நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்!

இது மட்டுமல்ல, மனிதக் கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தவும், இது போன்ற பணிகளில் ஈடுபடவும் வற்புறுத்தப்படுவது அரசே கடைபிடிக்கும் தீண்டாமை ஆகும்.

தூய்மைத் தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கிப் பாதுகாக்க முன் வராத இதே அரசுதான், இந்த அவலத்தை வெளிப்படுத்தி வந்துள்ள “கக்கூஸ்” ஆவணப்படத்தைத் திரையிட விடாமல் ஊருக்கு ஊர் தடை செய்து வருகின்றது.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளையும், அதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனங் களையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். பாதாள சாக்கடைத் தூய்மையாக்கலில் உறிஞ்சுக் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை உடனடியாக வாங்கிப் பயன்படுத்தவும், அது குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூரில் பலியாகியுள்ள இம்மூன்று இளம் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், உறுதியளித்தபடி அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்க வேண்டும்.

இன்னணம்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.