ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது! பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
"தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்."

என்றார் தமிழினப் பேராசான் திருவள்ளுவர். ஒருவர் வாழுங்காலத்தில் தகுதிகள் மிகுந்தவராக வாழ்ந்தாரா இல்லையா என்பது அவர் மறைவிற்குப் பின் எஞ்சி வாழும் அவரின் செயல்களால், கருத்து களால் அளக்கப்படும் என்றார். இக்குறளுக்கு ஒருவரின் பிள்ளைகளால் அவரின் தகுதி அறியப்படும் என்று பொருள் கூறுவாரும் உளர்.

அண்மையில் காலமான செயலலிதாவின் “தகுதியும் புகழும்” எத்தன்மையானவை என்பது அ.இ.அ.தி.மு.க. வினரின் இன்றையச் செயல்களால் அளக்கப்பட வேண்டும்.

செயலலிதாவுக்கே ஊழல் வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் தண்டத் தொகையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அவர் இறந்து விட்டதால் அவர் தண்டனை படிக்கப்பட வில்லை. காரணம் அத்தண்டனையை அனுபவிக்க ஆள் இல்லை என்பதால்!

கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சசிகலா தரப்பு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நபருக்கு மூன்று கோடி ரூபாயும் மூன்று கிலோ தங்கமும் கையூட்டாக வழங்கப்பட்டது என்கிறார்கள். சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவர் தனக்குப் பெண் பிள்ளை கள் இல்லாததால் மூன்று கிலோ தங்கம் வேண்டாம் அதற்கு ஈடாகப் பணம் கொடுத்து விடுங்கள் என்றாராம்!

நடிகர் சரத்குமாரை இழுக்க அவருக்கு ஏழு கோடி ரூபாய் தரப்பட்டதாம். அவர் வீட்டில் நடுவண் வருமானவரித்துறை சோதனை! நலத்துறை அமைச்சர் விசயபாஸ்கர் வீடுகளிலும் அவரின் உறவினர்கள் மற்றும் கையாட்களின் வீடுகளிலும் சோதனைகள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க.-வின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள் ளிட்ட அனைவரின் பணப் பதுக்கல் - ஊழல் அந்த ரங்கம் பலவற்றை வருவானவரி அதிகாரிகளிடம் விசய பாஸ்கர் உளறிக் கொட்டிவிட்டார் என்கிறார்கள்.

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தில்லித் தரகர் ஒருவர்க்கு தினகரன் கையூட்டுக் கொடுத்ததை அத்தரகரே ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தளைப் படுத்தப்பட்டார். அடுத்த கைது தினகரன் என் கிறார்கள்.

புரட்சித்தலைவியின் வாரிசாக விளம்பரப்படுத்தப் பட்ட “சின்னம்மா” என்கிற சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர்ச் சிறையில் உள்ளார்.

ஏற்கனவே, செயலலிதாவின் ஆட்சியின் தலைமைச் செயலாளராக இருந்த இராம மோகனராவ் வீடும் கோட்டை அலுவலகமும் சோதனை இடப்பட்டன.

இன்னும் இன்னும் எத்தனையோ ஊழல்கள், வெளிவரப்போகின்றன. புரட்சித் தலைவியின் போர்ப்படைத் தளபதிகள் பம்மிப் பதுங்கிக் கிடக் கிறார்கள்.

தக்க தலைமையின்றி, கூட்டுத் தலைமையுமின்றி சிதறிக்கிடக்கிறது அ.தி.மு.க.!

ஒற்றைச் சர்வாதிகாரத் தலைவியாய் தன்னை உருவாக்கிக் கொண்ட செயலலிதா - தந்திரங்களையும் சர்வாதிகாரத்தையும் மட்டுமே நம்பினார். இரண்டாம் நிலைத் தலைவர்கள், மூன்றாம், நான்காம் நிலைத் தலைவர்கள்கூட உருவாகாமல் தடுத்தார். செயலலிதா வீற்றிருக்கும் காரின் சக்கரத்தைப் பார்த்துக் கும்பிடும் கொத்தடிமைகளாக அவரின் அமைச்சர்கள் நடத்தப் பட்டார்கள். கொள்ளை விகிதம் போதும் என்று அமைச்சர்களும் அடங்கிக் கிடந்தார்கள்.

தமது ஆட்சியின் வழியாக அன்றாட நிர்வாக ஏற்பாடாகக் கிடைத்த ஊழல் பணத்தை மற்ற அமைச்சர்களுடன் அவரவர் தகுதிக்கேற்ப பகிர்ந்து கொண்டார். ஆனால் ஆட்சி மற்றும் கட்சியின் அதிகாரத்தைத் தகுதியான மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒற்றைச் சர்வாதிகாரியாக விளங்கினார்.

அதனால், செயலலிதா மறைவுக்குப்பின் அந்தக் கட்சி, தலைமை இன்றி சின்னாபின்னமாய்க் கிடக் கிறது. அரசியலில் ஆனா, ஆவன்னா தொடர்பு கூட இல்லாத “தீபா” என்ற ஒரு பெண் - _ செயலலிதா வின் இரத்தத் தொடர்பு என்று கூறிக் கொண்டு தலைவி வேடம் போட்டுத் திரிகிறார். தீபாவின் கணவர் என்ற ஒரு நபர் தான்தான் தலைவர் என்று திரிகிறார். இந்த இருவரைச் சுற்றித் திரிய அ.தி.மு.க. முகவர்கள், தொண்டர்கள் பலர்.

“தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்”.

சசிகலாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர்கூட அ.தி.மு.க. பொறுப்பில் - ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடாது, சசிகலா துதிபாடிகளாக இருந்தவர்களே இப்போது புது முடிவுக்கு வந்துள்ளார்கள். சீரழிவு மற்றும் குழப்பங்களுக்கிடையே இவ்வாறான மாற்றங்களும் நடக்கின்றன.

இந்தக் குழப்பங்களில் ஆதாயம் பெற - ஆக்கிமிப்பில் இறங்க பா.ச.க. பதுங்கி இருக்கிறது என்பது மட்டுமல்ல, குழப்பங்களை பா.ச.க.வே உருவாக்கும்.

நடுவண் வருமானவரித்துறையால் சோதனை இடப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளின் பட்டியலை நடுவண் அரசு கையில் வைத்துக் கொண்டு, அ.தி.மு.க.வினரை மிரட்டியதாகச் சொல்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம். ஏனெனில், இதைச் சொல்பவர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி!

அடுத்து, மோடி அரசின் அமைச்சரவையில் அ.தி.மு.க.வும் சேர வேண்டுமென்ற கருத்து அ.தி.மு.க. வின் அணிகளில் ஒன்றிலிருந்து வருகிறது. இதுவும் பா.ச.க. திரைமறைவு வேலையை அம்பலப்படுத்தும் செய்திதான்!

தமிழினத்தைக் கருவறுக்கக் காத்துக் கிடக்கும் ஆரிய பா.ச.க., அண்ணா திமுக மந்தையை அப்படியே வளைத்துக் கொள்ள வலைவீசவில்லை! தடியைத் தூக்கி உள்ளது. அரசியல் ஒழுக்கம், ஆன்மிக ஒழுக்கம் இரண்டுமே இல்லாத ஆரிய மேலாதிக்கவாத பா.ச.க. வின் அதிகாரத்தின் முன் குலை நடுங்கிக் கிடக்கின் றனர் அம்மாவின் அடிமைகள்!

தமிழினத்தின் மானம் சந்தி சிரிக்கிறது. தமிழர்களை எவர் மதிப்பார்?

பா.ச.க. ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்காக அ.தி.மு.க. அணி ஒன்றை ஆதரிப்பதோ, தி.மு.க.வை ஆதரிப்பதோ தன்மானமற்ற, தற்சாற்பற்ற செயலாகும். காட்டிக் கொடுக்கும் கங்காணி அரசியலைக் காப்பதாகவே அமையும்.

ஒருவேளை அ.தி.மு.க. மந்தையை வளைத்துப் போட்டு, பா.ச.க. தமிழ்நாட்டு அரசியலில் தலை யெடுத்தால், அது தற்காலிக வீக்கமாகவே பா.ச.க.வுக்கு அமையும். எனவே இளைஞர்கள், தன்மானமுள்ள தமிழர்கள் பதற்றப்பட வேண்டாம்! தமிழ் மண் ஆரிய பா.ச.க.வை ஏற்காது!

கங்காணி அரசியல் நடத்தும் அ.தி.மு.க. - தி.மு.க. கட்சிகளின் சிதைவில் தான் தன்மானமுள்ள தற்சார்புள்ள தமிழர் உரிமை அரசியல் கிளர்ந்தெழும்! அதற்குச் சில ஆண்டுகள் தேவைப்படலாம்.

இந்துத்துவா அபாயத்தைத் தடுக்க தி.மு.க.வை ஆதரிப்போம் என்று இடதுசாரிகளும் இன்னபிற சின்ன தி.மு.க.க்களும் தோள்தட்டி நிற்கக்கூடும். அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவற்றிற்குத் தமிழர்களுக்குத் தேவைப்படும் தனித்த இலட்சியமோ, வேலைத்திட்டமோ கிடையாது. அவ்வப்போது அடையாள எதிர்வினை ஆற்றி, தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே பெரும்பாடு படுகின்றன. அவற்றால் மாற்று அரசியலை உருவாக்க முடியாது.

பா.ச.க. என்ற பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது.

எதிர்ப்பு அரசியல் இலட்சிய அரசியல் ஆகிவிடாது. தி.மு.க., அ.தி.மு.க.-வின் சீரழிவு அரசியலில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. பாணி வெற்றுவேட்டு அரசியலை அருவருக்கும் பண்பு வளர வேண்டும்.

தமிழ்த்தேசிய இலட்சியம், தமிழர் அறம் ஆகிய வற்றை அடித்தளமாக்கி, சரியான புதிய அரசியலை முன்னெடுத்தால் ஆரியவாத பா.ச.க. அரசியலைத் தமிழ்நாட்டில் ஓரங்கட்ட முடியும்.

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம், ஏப்பிரல் 16-30 இதழில் வெளியானது. கட்டுரையாளர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர்).

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.