ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இந்திப் பிரசார சபை முன்பாக ... இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

இந்திப் பிரசார சபை முன்பாக ... இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

இடம்            : இந்திப் பிரச்சார சபை, தியாகராயர் நகர், சென்னை.
காலம்          : தி.பி. 2048 - சித்திரை 25 (08.05.2017) திங்கள் காலை 10 மணி
தலைமை : தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 

இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, பேச்சு மொழியாகத் திணித்திட பா.ச.க. அரசு சுனாமி வேகத்தில் செயல்படுகிறது. அதே வேகத்தில் தமிழைப் புறந்தள்ளி தீர்த்துக் கட்டவும் முயல்கிறது.

அண்மையில் பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழிப் பாடமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மாநில அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயமாக்கிட, மாநில அரசுகளிடம் பேச்சு நடத்தப்படும் என்றும் நடுவண் அரசு கூறுகிறது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர், அமைச்சர்கள் இந்தி தெரிந்தால், இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் புதிய சட்டம் கூறுகிறது. அத்துடன் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்தியாவில் எங்கு பேசினாலும் இந்தி தெரிந்தோர் இந்தியில் மட்டுமே பொது நிகழ்வுகளில் பேச வேண்டும் என்றும் கூறுகிறது.

மேற்கண்ட புதிய ஆணைகள், கடந்த 2011ஆம் ஆண்டு (02.06.2011), நடுவண் அரசில் காங்கிரசு - தி.மு.க. கூட்டணி ஆட்சி நடந்த போது, உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் இயங்கிய “அலுவல் மொழிக்கான நிலைக்குழு”வின் (Committee of Parliament on Official Language) பரிந்துரைகளே ஆகும். அப்பரிந்துரைகளை ஆறாண்டுகள் கழித்து இப்போதுள்ள பா.ச.க. அரசு ஏற்றுச் சட்டமாக்கியுள்ளது.

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும், அது இந்தித் திணிப்பை தொடரும் என்பதற்கு இதுவே தக்க சான்றாகும்.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் 18.04.2017 அன்று நடந்த இந்தி பரப்பலுக்கான கூட்டுக் குழுக் கூட்டத்தில் பேசிய நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு, இந்தி பேசாத மாநிலங்களில் மக்கள் தங்களுக்கிடையே உரையாடும் பொழுதும் இந்தி மொழியில் பேசுமாறு வலியுறுத்தினார்.

இந்தித் திணிப்பு என்பது மொழி ஆதிக்கம் மட்டுமன்று; அது ஆரிய ஆதிக்கத்தின் இன்னொரு கூறு! தமிழினத்தை ஆரியம் எப்போதுமே பகையினமாகக் கருதும்!

தமிழ்நாட்டில் இந்தி கல்வி மொழியாகிவிட்டால், வடநாட்டவர்கள் இங்கு போட்டித் தேர்வுகள் எழுதி தமிழ்நாட்டின் அதிகார வர்க்கத்திலும், வேலை வாய்ப்பிலும் பேராதிக்கம் செலுத்துவார்கள். மண்ணின் மக்கள் வேலையற்ற அகதிகளாக வெளியே தள்ளப்படுவார்கள்!

இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்று பம்மாத்து செய்தார்கள்; இப்போதே வடநாட்டவர்கள் வந்துதான் தமிழ்நாட்ட்டின் வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் இந்தி கல்வி மொழியாகிவிட்டால், தமிழர்களின் கதி என்னவாகும்?

தமிழ் மொழி காக்க - தமிழர் உரிமை காக்க - ஆதிக்க இந்தியை அடித்து விரட்ட வேண்டியது கட்டாயக் கடமையாகும். எனவேதான், ஆதிக்க இந்தியைத் தடுக்க இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது!

கோரிக்கைகள்

1. மக்களவை மாநிலங்களவையில் முன் அனுமதி கேட்காமல், அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேசுவதற்கான உரிமையும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

2. நடுவண் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, தமிழ்நாட்டில் அவற்றில் தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக்க வேண்டும்.

தமிழைக் கட்டாய மொழிப்பாடமாக ஏற்றுக் கொள்ளாத நடுவண் வாரிய மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது. அவற்றைக் மூடச் செய்ய வேண்டும்.

இந்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தும் வகையில் தமிழ் மக்களும், இளைஞர்களும், இன உணர்வாளர்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095

முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.