ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யலாம், உழவர்களின் கடனை தள்ளுபடி செய்யக் கூடாதா?” தஞ்சை போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி!

“கார்ப்பரேட் நிறுவனங்களின் கடனை தள்ளுபடி செய்யலாம், உழவர்களின் கடனை தள்ளுபடி செய்யக் கூடாதா?” தஞ்சை போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி!

காவிரி உரிமை மீட்கவும் உழவர்கள் வறட்சி நிவாரணத்திற்கும் கோரிக்கைகள் வைத்து, கடந்த 28.3.2017லிருந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தி வரும் தொடர் முழக்க அறப்போராட்டம், இன்று (07.04.2017) பதினோறாவது நாளாகத் தொடர்ந்து நடந்து வருகிறது.

இன்று, செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் பின்வருமாறு தெரிவித்தார்:

தில்லியில் தமிழக உழவர்கள் தாக்கப்பட்டதற்குக் கண்டனம்

தில்லியில் காவிரி மற்றும் உழவர்கள் கோரிக்கைகளை முன்வைத்து வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் 25 நாட்களாக போராடி வரும் தமிழக உழவர்கள், உழவர் கடன் தள்ளுபடியை எதிர்த்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்சித் பட்டேல் கூறிய கருத்துகளைக் கண்டித்து, தில்லி ரிசர்வ் வங்கி முன் அறவழி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றுள்ளனர்.

அப்போது தில்லி காவல்துறை அவர்கள் மீது தடியடி நடத்தி, வலுக்கட்டாயமாக கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறினார்.

மேலும், உழவர்கள் கடன் தள்ளுபடியில் உள்ள பொருளியல் மற்றும் சமூகவியல் ஞாயங்களை பின் வருமாறு கூறினார் :

“இன்றைய செய்தித்தாள்களில் முகாமையான செய்தியாக, இந்தியாவின் சேம (ரிசர்வ்) வங்கி ஆளுநர் உர்சித் பட்டேல் அவர்கள், “உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், அது அவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள வழிவகுக்கும், வரி கொடுத்த மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகும். பொருளாதாரச் சிக்கல்களை உருவாக்கும்” என்று பேசியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

உர்சித் பட்டேலின் இந்தப் பேச்சு கடும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது. இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களில் முதல் பத்து நிறுவனங்கள் கட்ட வேண்டிய அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக் கடன்களில் 4 இலட்சம் கோடியை வாராக் கடனாக, வசூலிக்காதப் பட்டியலில் சேர்த்துள்ள நரேந்திர மோடி அவர்களால் ரிசர்வ் வங்கித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர்தான் உர்சித் பட்டேல்.

அந்த 4 இலட்சம் கோடி வசூலிக்கப்படக் கூடாது என்பதில் உர்சித் பட்டேலுக்கு உடன்பாடு இருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் பயிர்க்கடன்கள் 1 இலட்சம் கோடிக்குள்தான் இருக்கும். உழவர்களின் உற்பத்திப் பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி, அவர்களை நிரந்தரக் கடன்காரர்களாக்கி இருப்பது இந்திய அரசின் பெருந்தொழில் நிறுவன ஆதரவுக் கொள்கைதான்!

வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலையே கூடாது என்பதுதான் நடுவண் அரசின் கொள்கை. இது எந்தப் பொருளாதார விதி சார்ந்தது? சந்தை விதிகள் உழவர் உற்பத்திப் பொருட்களுக்கு மட்டும் கிடையாதா?

இன்றைக்கு இந்தியச் சந்தைப் பொருளியல் அடிப்படையில் நெல் விலையை நிர்ணயித்தால், ஒரு குவின்டால் விலை ரூபாய் 3,000 ஆகும். ஆனால் அதன் விலை இன்று 1530 ரூபாய் என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது. உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு கொடுக்கப்படாத விலையின் ஒரு பகுதிதான், கடன் தள்ளுபடி என்பது!

அடுத்து, வரி கொடுக்கும் மக்கள் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவது என்கிறார் உர்சித் பட்டேல். உழவர்கள் குடும்பத்தினர்தான் இந்தியாவில் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அரசுக்கு மறைமுக வரி – நேர்முக வரி செலுத்துவோரே!

உணவு உற்பத்தியில் ஈடுபட்டு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது, இன்றியமையாத ஓர் ஆதரவு நடவடிக்கையே (Affirmative action) ஆகும். இதை ஒழுங்கீனம் என்று சேம வங்கி ஆளுநர் கூறுவது அவரின் மேட்டிமை உளவியலையே காட்டுகிறது.

கூட்டுறவு வங்கி – தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில் உழவர்கள் வாங்கியுள்ள வேளாண் கடன்கள் அனைத்தையும் இந்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது காவிரி உரிமை மீட்புக் குழுவின் தொடர் அறப்போராட்டத்தின் ஒரு முக்கியமான கோரிக்கையாகும்”.

இவ்வாறு திரு. பெ. மணியரசன் கூறினார்.

இன்றையப் போராட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு திருவாரூர் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, இந்திய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை, மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டத் தலைவர் திரு. அகமது கபீர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. செய்னுல்லாபுதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சை வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று வேலை நிறுத்தம் செய்தனர். சங்கத் தலைவர் சுரேசு, செயலாளர் பாலமுரளி ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் போராட்டப் பந்தலுக்கு வந்து, ஆதரவு நல்கினர்.

காங்கிரசுக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. து. கிருஷ்ணசாமி வாண்டையார், மன்னையின் மைந்தர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு. இராசசேகரன், தமிழர் தேசிய முன்னணி இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தோழர் மாறன், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புரவலர் பூ. விசுவநாதன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கோ. செயசங்கர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. சதா. சிவகுமார், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், புலவர் இரத்தினவேலவன் ஆகியோர் நேரில் வந்து காவிரி உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பாடகர் சமர்ப்பா குமரன் எழுச்சிப் பாடல்கள் பாடினார்.

முன்னதாக, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் உழவர்கள் இருவர், ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கக் கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மனு அளித்து, அவர்கள் காதில் கூறுவது போலவும், அதை நரேந்திர மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் சித்தரித்து அமைதி நாடகத்தை இளைஞர்களும் மாணவர்களும் நடத்திக் காட்டினர்.

மன்னார்குடியிலிருந்து மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் இளைஞர்கள் ஊர்திகளில் திரளாக வந்து கலந்து கொண்டனர். குடந்தையிலிருந்து ஐம்பது இரு சக்கர ஊர்திகளில் பரப்புரைப் பேரணியாகப் போராட்டப் பந்தலுக்கு இளைஞர்கள் வந்தார்கள்.

முன்னதாக, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் உழவர்கள் இருவர், ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கக் கூடாது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் மனு அளித்து, அவர்கள் காதில் கூறுவது போலவும், அதை நரேந்திர மோடியும் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் சித்தரித்து அமைதி நாடகத்தை இளைஞர்கள் நடத்திக் காட்டினர்.

போராட்டம் பதினோராம் நாள் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டச் செய்திகள், காவிரி உரிமை மீட்புக் குழுவின் முகநூல் பக்கமான FB.COM/KaveriUrimai என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. #SaveMotherCauvery என்ற குறிச்சொல்லை (Hashtag) இளைஞர்கள் உருவாக்கி, இப்போராட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.








































No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.