ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவல்துறையின் கதிராமங்கலம் முற்றுகை பேரா. த. செயராமன் உள்ளிட்டோர் சிறையடைப்பு: குடந்தையில் - சூன் 20 - செவ்வாய் மாலையில்.. காவிரி உரிமை மீட்புக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்!

காவல்துறையின் கதிராமங்கலம் முற்றுகை பேரா. த. செயராமன் உள்ளிட்டோர் சிறையடைப்பு: குடந்தையில் - சூன் 20 - செவ்வாய் மாலையில்.. காவிரி உரிமை மீட்புக் குழு கண்டன ஆர்ப்பாட்டம்!
தஞ்சை மாவட்டம் - திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலத்தில் இருபதாண்டுகளாகப் பதினோரு பெட்ரோலிய ஆழ்குழாய்க் கிணறுகள் செயல்படுகின்றன. இவற்றால் நிலத்தடி நீர் மேலும் மேலும் கீழே இறங்கிப் போய்விட்டது. நிலத்தடி நீர் மஞ்சளாகி நஞ்சாகிவிட்டது. நிலத்தடி நீர் குடிநீருக்கும் வேளாண்மைக்கும் பயன்படாமல் போய்விட்டது.

பெட்ரோலியக் குழாய்கள் செயல்படும் வட்டாரத்தில் நெற்பயிர்கள் கருகிப்போகின்றன. அக் குழாய்களின் கழிவுநீரைக் குடிக்கும் கால்நடைகள் இறந்துவிட்டன. மனிதர்களுக்குத் தீக்காயங்களும் ஏற்பட்டன.

கடந்த மே மாதம் (2017) மேலும் புதிதாக ஆழ்குழாய்க் கிணறுகள் இறக்க வந்த இந்திய எண்ணெய் - எரிவளிக் கழக (ஓ.என்.ஜி.சி.) அதிகாரிகளையும், தொழிலாளர்களையும் ஊர் மக்கள் ஒன்றுகூடித் தடுத்தனர். அன்று திரும்பிப் போய்விட்டனர்.

ஆனால், 2.6.2017 வெள்ளிக்கிழமை விடியற்காலை, பாகிஸ்தான் படையாட்கள் புகுந்துள்ள எல்லைக் கிராமத்தை இந்தியப்படை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்துவது போல், கதிராமங்கலம் கிராமத்தைத் தமிழ்நாடு காவல்துறையினர் ஆயிரம் பேர் சுற்றி வளைத்து - யாரும் ஊருக்குள் போகாமலும் ஊருக்குள்ளிருந்து வெளியே வராமலும் தடுத்தனர். ஊருக்குள் வீடுகள், தெருக்கள், திடல்கள் அனைத்திலும் காவல்துறையினரை நிரப்பினர்.
இவ்வாறான முற்றுகை ஆக்கிரமிப்பை நடத்திக் கொண்டு புதிய ஆழ்குழாய்க் கிணறு இறக்கும் வேலையை ஓ.என்.ஜி.சி. செய்யவிட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஊர் மக்கள் 500 பேரையும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். இந்த நால்வருடன் கதிராமங்கலம் உழவர்கள் ஆறு பேரையும் சேர்த்து பத்துப்பேர் மீது பிணை மறுப்புப் பிரிவையும் இணைத்து வழக்குப்போட்டு, குடந்தைக் கிளைச் சிறையில் அடைத்தனர்.

காவல்துறையின் முற்றுகை ஆக்கிரமிப்புக்குள் வைக்கப்பட்டிருந்த கதிராமங்கலம் மக்கள் வீரத்துடன் உரிமைப் போராட்டம் நடத்தினர். மொத்தமுள்ள 93 கடைகளையும் முழு அடைப்புச் செய்தனர்; வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றினர்.

குடிமை உரிமை மறுக்கப்பட்டு, கொடுமையான காவல்துறை முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட கதிராமங்கலம் மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்வதற்காக, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தோழர்கள் பெ. மணியரசன், அய்யனாபுரம் சி. முருகேசன், த. மணிமொழியன், மருத்துவர் பாரதிச்செல்வன், சு. பழனிராசன், குழ. பால்ராசு, ச. கலைச்செல்வம், க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோர் 4.6.2017 மாலை இரு ஊர்திகளில் சென்றனர். அவர்களை குடந்தை அருகே கருப்பூர் ரவுண்டானாவில் காவல்துறையினர் மறித்துக் கைது செய்தனர்.

கதிராமங்கலம் மக்கள் 5.6.2017 அன்று குடியிருப்புக்கு வெளியே ஒரு திடலில், “அனைவரும் கூடி ஊரைக் காலி செய்துவிட்டு வெளியேறுகிறோம், எங்களுக்கு வழிவிடுங்கள்” என்று காவல் துறையினரிடம் கேட்டனர்.

அன்று மாலையே வருவாய்த்துறை அதிகாரிகள், “ஓ.என்.ஜி.சி. வேலை முடிந்துவிட்டது; காவல் முற்றுகையை விலக்கிக் கொள்கிறோம்; உங்கள் வீடுகளுக்குப் போங்கள்” என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்தனர். இந்த அளவு முதற்கட்ட வெற்றியுடன் மக்கள் வீடு திரும்பினர். ஓ.என்.ஜி.சி. வேலை பார்த்த இடத்தில் போய்ப் பார்த்தால், புதிதாக ஓர் ஆழ்குழாய்க் கிணறு மண்ணுக்குள் இறக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் த. செயராமன், வழக்கறிஞர் கரிகாலன் உள்ளிட்ட பத்து பேர்க்கும் 6.6.2017 அன்று முன்னிரவில் குடந்தை குற்றவியல் நீதிமன்ற நடுவர் பொறுப்பு வகித்த பாபநாசம் நீதிபதி பிணை வழங்கினார். மறுநாள் 7.6.2017 காலை வெளியே வந்தனர். ஆனால் பேராசிரியர் த. செயராமன் மீது புதிது புதிதாக வழக்குகள் போட்டுக் கொண்டுள்ளது காவல்துறை!

கதிராமங்கலம் காவல்துறை முற்றுகை என்பது மற்ற ஊர்களில் செயல்படுத்துவதற்கான வெள்ளோட்டமே என்று புரிந்து கொண்டு, இந்த சனநாயகப் பறிப்பை முறியடிக்க வரும் 20.06.2017 - செவ்வாய் மாலை 4 மணிக்கு, குடந்தையில் காந்தி பூங்கா அருகில், காவிரி உரிமை மீட்புக் குழு நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரண்டு வர வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
www.kannotam.com
www.Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.