ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!

”கதிராமங்கலத்தில் இதுதான் நடக்கிறது?" ஒ.என்.ஜி சி-யை அதிரவைத்த ஆவணப்படம்! விகடன் இணையதளத்தில் வெளியான செய்தி!
தஞ்சை மாவட்டம் - கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் பாதிப்புகளை விளக்கும் “கதிராமங்கலம் கதறல்” ஆவணப்படத்தை கடந்த 20.06.2017 அன்று குடந்தையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பன்மைவெளி வெளியீட்டகம் வெளியிட்டது. அது குறித்த செய்தி விகடன் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அது வருமாறு : 

கதிராமங்கலத்தில், ஓ.என்.ஜி.சி செயல்படுத்தி வரும் எண்ணெய் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான ஆவணப்படம் ஒன்று வெளியாகி இருப்பது மத்திய அரசை அதிர வைத்துள்ளது.அந்தப் படத்தைப் பார்த்து மக்கள் கிளர்ந்தெழுந்து விடுவார்கள் என எண்ணிய ஓ.என்.ஜி.சி நிறுவனம்,ஆவணப்படம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்களை சாமாதானப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கதிராமங்கலம் கிராமம். கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல், நெற்கதிரை கூரையில் வேய்ந்து கொடுத்த காரணத்தால், கதிர் வேய்ந்த மங்கலம் என்ற பெயர் வந்ததாக வரலாறு. காவிரி ஆறு மற்றும் விக்கிரமனாறு நடுவில் அமைந்துள்ள இந்தக் கிராமம் ஒருகாலத்தில், பசுமைக்குப் பஞ்சம் இல்லா ஊராக இருந்தது.நெல் சொரிந்த வயல்வெளிகள், வரப்பை மறைத்த கரும்புக் காடுகள், குருவிகளும் காக்கைளும் தின்று மிச்சம் வைத்த சோளத் தோட்டங்கள் எனப் பல்வேறு பசுமை அடையாளங்களைத் தாங்கி நின்றிருந்தது கதிராமங்கலம்.

இப்படி தழைத்தோங்கிய விவசாய நிலத்தில்,கடந்த 2002 -ம் ஆண்டு மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி.சி எண்ணை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் படம் பிடித்துக் காட்டும் ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளது பன்மைவெளி வெளியீட்டகம்.

மக்கள் போராட்டம் 

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, கதிராமங்கல கிராம மக்களுடன் சேர்ந்து "கதிராமங்கலம் கதறல்" என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார். 47 நிமிடம் ஓடக் கூடிய இந்த ஆவணப்படம் ஊர் மக்களின் போராட்டக் காட்சிகளுடன் தொடங்குகிறது. மக்கள் போராட்டம் அரசின் அடக்குமுறை ஆகியவற்றைக் குறித்த செய்திகளை விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.15 ஆண்டுகளுக்கு முன்பு செழிப்பாக இருந்த கதிராமங்கலம் தற்போது அதன் பசுமைத் தன்மையில் இருந்து எப்படியெல்லாம் சிதைந்துள்ளது என்பதைக் காட்சிகள் எடுத்துரைக்கின்றன. ஊர் பெரியவர்கள்,படித்தவர்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கிராமத்தின் கடந்த கால நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் விரிவாக அதில் பேசுகின்றனர்.அப்படி பசுமைப் போர்த்தியக் கிராமம் தற்போது குடிதண்ணீருக்கே தள்ளாடி நிற்கிறது என நீள்கிறது இந்தப் படம்.

இப்படியான அவல நிலை வருவதற்கு மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நடைமுறைப்படுத்தியுள்ள திட்டமே காரணம் எனக் காட்சிகளை ஆங்காங்கே அம்பலப்படுத்துகிறது.மத்திய அரசின் கோர முகத்தைக் கிழித்துக் காட்டும் இந்த ஆவணப்படத்துக்குத்தான் தற்போது ஓ.என்.ஜி .சி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'இந்த ஆவணப்படத்தை மக்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது' என விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்த ஆவணப்படத்தை இயக்கிய தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதியிடம் பேசியபோது, " 2002 -ல் மத்திய அரசின் நிறுவனமான ஓ.என். ஜி. சி, எண்ணெய் எடுக்கும் இந்தத் திட்டத்தை கதிராமங்கலத்தில் செயல்படுத்தியது.9 இடங்களில் இதற்கான பைப் லைன்கள் அமைத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

பூமியில் துளை போட்டு இங்கிருந்துதான் குத்தாலத்தில் உள்ள ஆயில் ஃபீல்டு கிடங்குக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளில் இருந்து நீர் ஆதாரம் முற்றிலுமாகக் குறைந்து பாலைவனமாகி விட்டது. அதுமட்டுமன்றி நீரில் ஆயில் கலந்துவருவதும் அவ்வப்போது பூமியில் புதைக்கப்பட்டுள்ள பைப் லைன்கள் வெடித்து விபத்து ஏற்படுவதுமான சம்பவங்களும் நடந்துள்ளன. இதில் ஜெயலட்சுமி என்ற பெண்ணின் முகம் பாதிக்கப்பட்டுள்ளது.இப்படியான பல பிரச்னைகளை அனுபவித்து வந்த நிலையில்தான் போராட்டத்தை அந்தக் கிராமத்து மக்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டத்தையும் கிராமத்தின் நிலையையும் பதிவு செய்துதான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். இந்த ஆவணப்படத்தை கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக, கும்பகோணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வெளியிட்டுள்ளோம்.

இந்த ஆவணப்படத்துக்குத்தான் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'எண்ணெய் எடுக்கும் திட்டம் குறித்து ஆவணப்படங்கள், செய்திகள் அறிக்கைகள் வந்தால் அவற்றை மக்கள் நம்ப வேண்டாம்' என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் போன்றத் திட்டங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்துதான் இதுவரை ஆவணப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த ஆவணப்படும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள திட்டத்தால், எப்படி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்குகிறது.இந்த ஆவணப்படத்தைப் பார்த்து மக்கள் எங்கே திட்டத்தை நிறுத்தி விடுவார்களோ எனப் பயந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது" என்கிறார்.

நன்றி: விகடன் 
http://www.vikatan.com/news/tamilnadu/93126-this-is-what-happening-in-kathiramangalam.html

ஆவணப்படத்தைப் பெற : 
https://www.facebook.com/panmaiveli/photos/a.1461988764024142.1073741828.1460639837492368/1907244619498552/?type=3&theater

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச : 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannotam.com 
இணையம் : www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.