ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பதஞ்சலியும் - பிளாஸ்டிக் அரிசியும் - வெற்றிவேல் சந்திரசேகர்

பதஞ்சலியும் - பிளாஸ்டிக் அரிசியும் - வெற்றிவேல் சந்திரசேகர்
கடந்த 2015 சூன் மாதம், சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்சுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம், மேகி நூடுல்சில் அளவுக்கு அதிகமாக காரீயம் இருப்பதாகப் புகார் கூறியது. நூடுல்சு தடை விதிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் பாபா இராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தனது ஆட்டா நூடுல்சை அறிமுகம் செய்தது. பிற நிறுவன நூடுல்சை ஒப்பிடும்போது மிகக்குறைந்த விலையில் பதஞ்சலி நூடுல்சு விற்பனைக்கு வந்தது.

சில மாதங்களில் மேகி நூடுல்சு மீதான தடையும் நீக்கப்பட்டது. ஆனால், நூடுல்சு அறிமுகத்துக்குப் பின் பதஞ்சலியின் வளர்ச்சி அசுர வேகம் எடுத்தது. பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பாலகிருட்டிணா, தற்போது இந்தியாவிலுள்ள நூறு பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரது சொத்து மதிப்பு 16 ஆயிரம் கோடி ரூபாய்! அப்படியென்றால் பதஞ்சலியின் வருமானத்தையும் இராம்தேவின் சொத்து மதிப்புகளையும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

கடந்த காங்கிரசு ஆட்சியில் ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் மோடிக்கு ஆதரவாக திசை மாற்றிவிடப்பட்டது. அதில் இராம்தேவ் பெரும் பங்கு ஆற்றினார்.

அதற்கான பிரதிபலனை இராம்தேவ் இன்று அனுபவித்து வருகிறார். கடந்த வாரம் உத்தரகாண்டில் நடந்த இராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தை, இந்தியத் தலைமையமைச்சர் மோடி திறந்து வைத்தார். 

பதஞ்சலி நூடுல்சு, பதஞ்சலி சோப்பு, பதஞ்சலி சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய், முகப்பூச்சு, கரும்புள்ளிகளை நீக்கும் க்ரீம், கருப்பு நிறத் தோலை வெள்ளையாக்கும் க்ரீம் முதல், பற்பசை, தேன் என சற்றொப்ப 500 விதமான பொருட்களை பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது.

உச்சகட்டமாக, மாட்டு மூத்திரத்தில் இருந்து “கொனாயில்” என்ற பெயரில் பினாயில் தயாரிக்கிறது.

இரசாயனம் கலக்காத, இயற்கை முறையில் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்டவை என்ற பெயரில் விற்பனைக்கு வரும் பதஞ்சலி பொருட்களுக்கு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. பிஸ்கட், ஜாம், சாக்லெட் என எதை எடுத்தாலும் ஆயுர்வேத முறையில் தயாரிக்கிறோம் என பதஞ்சலி சொல்லிக் கொள்கிறது.

குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் கருத்தரிக்க உதவும் பதஞ்சலியின் “புத்ரஜீவிக்” என்ற மருந்து அபாயகரமானது என உத்தரகாண்ட் அரசின் சுகாதாரத் துறை அண்மையில் அறிவித்துள்ளது.

பதஞ்சலி நிறுவனம், வேறொரு நிறுவனத்திடம் இருந்து தேனை வாங்கி அதன் மீது தன் ஸ்டிக்கரை ஒட்டி விற்பனைக்கு விடுகிறது என்ற குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தேன் மட்டுமல்ல பதஞ்சலியின் பல பொருட்கள் இப்படித்தான் விற்பனைக்கு வருகின்றன. இதற்காக அரித்வார் நீதிமன்றம் பதஞ்சலிக்கு 11 இலட்சம் ரூபாய் தண்டத்தொகை விதித்திருக்கிறது.

கொல்கத்தாவின் உணவு ஆய்வு மையம், பதஞ்சலியின் நெல்லிச்சாறு குடிப்பதற்கு உகந்தது அல்ல என மெய்ப்பித்துள்ளது. இதனால் இராணுவ வீரர்களுக்கு மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளில் பதஞ்சலி நெல்லிச் சாறுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தனைப் புகார்களை தாங்கிவரும் பதஞ்சலி நிறுவனம் இந்திய அரசின் ஆசியுடன் தங்குதடையின்றி செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு இந்திய அரசின் வருமான வரித் தீர்ப்பாயம், வருமான வரி விலக்கும் அளித்திருக்கிறது. பதஞ்சலி தொழிற்சாலைகள் அமைக்கத் தேவையான பல இலட்சம் ஏக்கர் நிலங்கள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊடகங்களுக்கு பதஞ்சலி நிறுவனம் விளம்பரங்களை வாரி வழங்கி வருகின்றன. இதனால், பதஞ்சலி தயாரிப்புகள் குறித்து வரும் எதிர்மறையான செய்திகள் ஊடங்களில் இடம்பெறுவதே இல்லை!

தற்போது, நெகிழி (பிளாஸ்டிக்) அரிசி பற்றிய செய்திகளால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் பதஞ்சலி நிறுவனம் பதஞ்சலி அரிசியை அறிமுகம் செய்துள்ளது. இதிலிருந்தே, நெகிழி அரிசி குறித்த பரபரப்புக்குப் பின்னால் இருக்கும் வணிக அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது.

தற்சார்பு வேளாண்மை மற்றம் தற்சார்பு பொருளியலை நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்த, வேளாண் அறிவியலாளர் ஐயா நம்மாழ்வார் வழியில், நம் மண்ணில் எளிய முறையில் எளியவர்கள் விற்கும் பொருட்களை வாங்குவதும், இயற்கைத் தயாரிப்பு என்ற பெயரில் மோசடி செய்து வரும் பாபா இராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகளை புறக்கணிப்பதும், அதற்கு எதிராகப் பரப்புரை செய்ய வேண்டியதும், அவசரமும் அவசியமும் ஆகும்!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)


தலைமைச் செயலகம், 

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.