வேளாண் கடன் தள்ளுபடி கருணையல்ல, கொடுக்கப்படாத விலையின் பகுதியே!
வேளாண் கடன் தள்ளுபடி கருணையல்ல, கொடுக்கப்படாத விலையின் பகுதியே!
உழவு உற்பத்தியில் உருவான உபரிச் செல்வம்தான், ஒரு காலத்தில் தொழில் உற்பத்தியைப் பெருக்கியது. ஆனால் வளர்ந்தபின் தொழில் உற்பத்தியானது உழவு உற்பத்தியை ஒழித்துக் கட்டத் தீவிரம் காட்டுகிறது. பால் குடித்த மார்பறுக்கும் பாதகர்களைப் போன்றவர்கள்தாம் பன்னாட்டுப் பெருங்குழும முதலாளிகள். அவர்களின் அடியாட்கள்தாம் நரேந்திர மோடி போன்ற அரசியல் தலைவர்கள்!
எவ்வளவு நிலமிருந்தாலும் எவ்வளவு விளைந்தாலும் எல்லா உழவர்களும் நிரந்தரக் கடனாளிகளாக இருக்கிறார்களே,அது எப்படி? குதிரைப் பந்தயத்தில் பணம் கட்டி குபேர விளையாட்டு விளையாடிப் பொருள் இழந்தனரா? நள்ளிரவு நட்சத்திர விடுதிகளில் குடித்துக் கும்மாளமிட்டுப் பணம் இழந்தனரா? இல்லை! இந்த மேட்டுக்குடிப் பொழுதுபோக்கு, மேற்கத்திய பாணி ஊதாரித்தனம் எல்லாம் நம் உழவர்களுக்குப் பழக்கமில்லை!
பிள்ளைகளைப் படிக்க வைக்க, பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தார்க்கு மருத்துவச் செலவு செய்ய, திருமணச் செலவுகள் செய்ய, அன்றாடம் விலை ஏறிவரும் தொழிற்சாலை உற்பத்தி - நுகர்வுப் பொருட்களை வாங்கிட உழவர்களுக்குப் பணம் வேண்டும். ஆனால் அவர்கள் விளைவித்தப் பொருட்களை விற்றால், அவர்கள் செய்த உற்பத்திச் செலவை ஈடுகட்டும்
அளவிற்குக்கூட பணம் கிடைப்பதில்லை.
வேளாண் உற்பத்திச் செலவில், மிக அதிக விகிதம் போவது, தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களான உரம், பூச்சி மருந்து போன்றவற்றிற்கு செய்யும் செலவுதான்! யூரியா விலை 1991-92லிருந்து 2015-2016இல் 96 விழுக்காடு உயர்ந்துள்ளது; டி.ஏ.பி. 325% உயர்ந்துள்ளது; பொட்டாஷ் 625% உயர்ந்துள்ளது. பூச்சி மருந்துகளின் விலை இதைவிடப் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவையெல்லாம் பன்னாட்டுப் பெருங்குழும முதலாளிள் உற்பத்தி செய்பவை. நெல் விலை ஓராண்டுக்கு அதிக அளவாக 3.3 % மட்டுமே உயர்த்தப்படுகிறது. 2014-2015ஆம் ஆண்டில் 1 குவிண்டால் நெல் 1450 ரூபாய். 2016-2017இல் அது 1500 ரூபாய் - அதாவது 3.4% உயர்வு!
இந்தியாவில் எந்தத் தொழிற்சாலைப் பொருள் விலை, ஓர் ஆண்டில் 100 ரூபாய்க்கு மூன்று ரூபாய் நாற்பது காசு மட்டுமே உயர்கிறது? வேளாண்மையில், தொழில் முதலாளிகள் தயாரிக்கும் இடுபொருட்களின் விலை உயர்வு இரயில் வேகத்தில் ஓடுகிறது; உழவர்கள் உற்பத்தி செய்யும் நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, பயறு வகைகள் ஆகியவற்றின் விலை மட்டும் ஆமை வேகத்தில் நகர்கிறது. இதற்கப்பால் சந்தைப் பொருளாதாரம் என்பது இருக்கிறது. அங்கு விலைவிகிதச் சமன்பாடு இருக்கும்; இருக்க வேண்டும். உலகம் முழுவதும் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு, அதன் விலையுடன் மற்ற பண்டங்களின் விலையை ஒப்பிட்டு, சந்தைச் சமன்பாட்டின் நிலவரத்தைக் கணக்கிடுகிறார்கள்.
1960இல் 58 கிலோ நெல் மூட்டை ஒன்றின் விலை ரூ. 20 முதல் 22 வரை இருந்தது. அப்போது 1 பவுன் அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 60 முதல் 65 வரை இருந்தது. அப்போது மூன்று மூட்டை (58 கிலோ மூட்டை) நெல் விற்றால், 1 பவுன் தங்கம் வாங்கலாம். இப்போது 1 பவுன் தங்கத்தின் விலை ரூ. 24,000.00.
இப்போது 58 கிலோ நெல் விலை ரூ. 870. 58 கிலோ நெல் மூட்டை 27லு மூட்டை விற்றால்தான் 1 பவுன் தங்கம் இப்போது வாங்கலாம். ஊசி, பாசி, உயிர் காக்கும் மருந்துகள், மானம் காக்கும் ஆடைகள், தொலைப்பேசி, சோப்பு, சீப்பு,
பவுடர் என எல்லாவற்றின் விலையும் பன்மடங்கு உயர்ந்து விட்டது. சந்தைப் பொருளாதாரத்தின் - தன்மைக்கேற்ப வேளாண் விளை பொருள் தவிர மற்ற பொருட்கள் விலையெலல்லாம் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. இலஞ்சத் தொகைகூட சந்தை நிலவரத்திற்கேற்ப பன்மடங்கு உயர்ந்து விட்டது.
ஆரிய பவன் உணவு விடுதியில் 1970இல் 2 இட்லி, 1 தோசை, 1 குளம்பி (காப்பி) - இரண்டு ரூபாய்க்குள் சாப்பிட முடிந்தது. இன்று அவற்றின் விலை என்ன? ஆனால் அரிசியும், உளுந்தும் அந்த விகிதத்தில் விலை உயர்வு அடைந்தனவா? இந்த அறமற்ற அநியாயமான ஏற்றத்தாழ்வு தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களுக்கும் வேளாண் விளை பொருட்களுக்கும் இடையே நிலவுவது ஏன்? எப்படி?
நெல், கோதுமை, கரும்பு ஆகியவற்றுக்கு அரசு ஆதரவு விலை நிர்ணயிக்காவிட்டால், அதன்படி கொள்முதல் செய்யாவிட்டால் - இன்று இருப்பதைவிடவும் பலமடங்கு மோசமான கீழ்நிலை நிலை விலைக்குத்தான் இவை விற்பனையாகும். இன்றியமையாத உணவுப் பொருள்களின் விலை வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
1960களின் தொடக்கத்தில் முழுவதும் உணவுப் பற்றாக்குறை! நெல்லும், கோதுமையும் கட்டாயமாக அரசிடம் விற்க வேண்டும் என்ற கட்டாயக் கொள்முதல் சட்டம் இருந்தது. ஓர் உழவர் தன் வயலில் விளைந்த நெல்லைத் தன் வீட்டில் மூட்டையாக அடுக்கி வைத்திருந்தால் - அதை அரசுக்குத் தெரிவிக்காவிட்டால் குற்றம்; சட்டப்படி அவரைத் தளைப்படுத்தி, அந்த நெல்லை அரசு பறிமுதல் செய்யும். தனியார் வணிகர் யாரிடமும் நெல்லை விற்கக் கூடாது. அப்படி விற்றால் அது கள்ள வாணிகம் என்று சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்!
1965இல் இந்தியா பாக்கித்தான் போர் நடந்தது. உணவுப் பற்றாக்குறை அதிகமானது. அன்றையத் தலைமை அமைச்சர் லால்பகதூர் சாத்திரி, புதன் - சனி இருநாள் இரவும் உணவகங்களை - சாலையோரக் கடையிலிருந்து பெரிய விடுதிகள் வரை மூட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். இப்போது, உணவு உற்பத்தி பெருகி - இந்தியாவின் தேவைக்கு அதிகமாக விளைகிறது. உள்நாட்டுச் சந்தையைத் தவிர, வெளிநாட்டுச் சந்தையில் விளைபொருள் விற்க இந்திய அரசு வாய்ப்பளிக்கவில்லை. இந்த மிகை விளைச்சலில் அரசுக்குப் பங்கு இருக்கிறது; ஆனால் மிகை உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்போர் உழவர்கள் மற்றும் உழவுத் தொழிலாளிகள்!
பெரும் முதலாளிகளின் தொழிற்சாலைகளில் மிகையாக உற்பத்தி ஆகும் மோட்டார் ஊர்திகள், துணிகள், உயிர்காக்கும் மருந்துகள் முதல் ஊறுகாய் டப்பாக்கள் வரை உள்நாட்டில் தேங்கி விலை வீழ்ச்சியைச் சந்திக்காமல் இருப்பதற்காக அவற்றை வெளிநாடுகளில் விற்க இந்திய அரசு ஏற்பாடு செய்கிறது. தலைமை அமைச்சர் நரேந்திர மோடி தமது வெளிநாட்டுப் பயணங்களில் தம்முடன் அம்பானி, அதானி, டாட்டா போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு போய் ஒப்பந்தம் போடுகிறார். மிகையாக விளையும் வேளாண் விளை பொருட்களுக்கு அவ்வாறு வெளிநாட்டு விற்பனை ஏற்பாட்டை ஏன் செய்வதில்லை? சந்தைப் பொருளாதார விகிதத்திற்கேற்ப வேளாண் விளை பொருட்களின் விலை உயரக் கூடாது என்பதில் காங்கிரசு, பா.ச.க. ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் உற்பத்தி செய்யும் மற்றும் விற்கும் பொருட்கள் விலை அநியாயமாகப் பலமடங்கு உயரும்போது, அந்தச் சுமையைத் தாங்கும் மக்கள், அன்றாட அடிப்படைத் தேவையான உணவுப் பெருட்கள் ஞாயமான இலாப விலையில் விற்றால் பொங்கி எழுவார்கள்; போராடுவார்கள்; புரட்சியாளராய் மாறுவார்கள் என்ற
அச்சத்தில்தான் வேளாண் விளை பொருள்கள் மட்டும் அடிமாட்டு விலைக்கும் கீழே விற்கும்படி ஆட்சியாளர்கள, சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் யாரும் இலவச அரிசி கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் செயலலிதாவும் கருணாநிதியும் இலவச அரிசி போட்டார்கள். இலவச அரிசி போடும் அரசியல்வாதி, நெல்லுக்கு இலாப விலை நிர்ணயிக்க முன்வருவாரா? மாட்டார்! ஆதரவற்றவர்களுக்கு இலவச அரிசி வழங்கலாம். குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் தரமான அரிசி வழங்கலாம். உயர் வருமானம் உள்ளவர்கள், விலை வாசிப் புள்ளி உயர்வுக்கேற்ப சம்பள உயர்வு பெறுவோர், பணக்காரர்கள் என எல்லோருக்கும் இலவச அரிசி போடுவதன் நோக்கமென்ன?
கடைத்தெருவில் கிலோ 45 ரூபாய்க்கு பொன்னி அரிசி வாங்குவோர் ஏராளம்! அவர்களுக்கும் இலவச அரிசி கணக்கிடப்படுகிறது. அரசியல்வாதிகள், தாங்கள் வாக்கு வாங்கிட உழவர்களின் உழைப்பைத் திருடிக் கொடுக்கும் கையூட்டாக இலவச அரிசித் திட்டம் உள்ளது. வெளிநாடுகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை விற்பனை செய்ய இந்திய அரசு சந்தை ஏற்பாடு செய்து தர வேண்டும். இந்தியாவுக்குள் இலாப விலையில் விற்க சந்தை உறுதி ஏற்படுத்த வேண்டும்.
பெரும் முதலாளிகளின் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்யும்போது, வெளிநாடுகளுடன் போட்டியிடுவதற்காக விலையைக் குறைத்து விற்க நேரிட்டால் - அந்த விலைக் குறைப்புத் தொகையை ஏற்றுமதி மானியம் என்ற பெயரில் இந்திய அரசு அந்த முதலாளி நிறுவனங்களுக்கு வழங்குகிறது. அதே போன்ற ஏற்பாடு உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கும் வெளிநாட்டுச் சந்தையில் வேண்டும்.
உழவர்களே, வேளாண் விளை பொருட்களுக்குக் கட்டுப்படியான, ஆதரவு விலை கேட்க வேண்டாம். இலாப விலை கேளுங்கள்! வெளிநாடுகளில் விற்பனை செய்ய வாய்ப்புகள் கேளுங்கள்! உற்பத்திச் செலவில் 50 விழுக்காடு சேர்த்து, வேளாண் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எம்.எஸ். சுவாமிநாதன் சூழ்ச்சி வலையில் விழாதீர்கள்! அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா மற்றும் துணி ஆலைப் பெரு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அவற்றின் உற்பத்தி விலையில் 50 விழுக்காடு மட்டும் சேர்த்து விற்க வேண்டும் என்று எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை செய்வாரா? உற்பத்திச் செலவைப்போல் பலமடங்கு சேர்த்து ஆலை அரசர்கள் விலை வைக்கிறார்கள்.
உழவர்களே, கடன் தள்ளுபடி என்பது ஆட்சியாளர்களின் கருணையல்ல; அவர்கள் போடும் பிச்சையல்ல; உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்குக் கொடுக்கப்படாத விலையில் (ஞிமீயீமீக்ஷீக்ள்பீ றிக்ஷீவீநீமீ) ஒரு பகுதியே! ஆலை அரசர்களுக்கு அண்மை ஆண்டுகளில் மட்டும் பல இலட்சம் கோடி ரூபாய் அண்மையில் கடன் தள்ளுபடி செய்துள்ளார்கள்; அவர்களின் ஆறு இலட்சம் கோடி ரூபாய் கடன் பாக்கியை வாராக் கடன் என்று வசூலுக்குப் போகாத பட்டியலில் சேர்த்துள்ளார்கள்.
உழவர்களே, உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்! உரிமையோடு, அதிகாரத்தோடு கடன் தள்ளுபடி கேட்போம்! உரிமையோடு அதிகாரத்தோடு இலாப விலை கேட்போம்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் - 16-30 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் - 16-30 இதழில், இதழாசிரியரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் எழுதிய ஆசிரியவுரை இது)
Leave a Comment