ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அரசியல் வெற்றிடமா? அடுத்த கட்டத்திற்கான நகர்வா? - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை


அரசியல் வெற்றிடமா? அடுத்த கட்டத்திற்கான நகர்வா? - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்ப தாகவும், அதை நிரப்பிட பா.ச.க. உள்ளிட்ட பல கட்சிகள் முயல்வதாகவும் பேச்சுகள் நடக்கின்றன.

அ.இஅ.தி.மு.க. தலைவி செயலலிதா மறைவாலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி செயலற்ற முதுமை அடைந்ததாலும் இவ்வெற்றிடம் உண்டாகி இருப்பதாகப் பேசப்படுகிறது.

உண்மையில், உருவாகியிருப்பது அரசியல் வெற்றிடம் அன்று; ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்கு மாறும் இடைக்காலம் (Transition Period). இந்த இடைமாறுபாட்டுக் கால நகர்வுகளும் சிக்கல் களும் இப்போது முட்டி மோதுகின்றன. இந்த இடை மாறுபாட்டுக்கால நகர்வுகள் செயலலிதாவும் கருணாநிதியும் உடல் நலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்திலேயே - சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன.

இவ்விரு தலைவர்களும் ஊழல் நாயகர்கள்; இவர்கள் தலைமை தாங்கும் கழகங்கள் தன்னல வெறியர்களின் ஊழல் கூடாரங்கள்; ஏற்கெனவே பறிக்கப்பட்ட தமிழின உரிமைகளை மீட்கவோ, இப்போது நடக்கும் உரிமைப் பறிப்புகளைத் தடுக்கவோ இவர்களுக்கு ஆற்றலும் இல்லை; அக்கறையும் இல்லை என்ற உண்மைகளை தமிழின இளைஞர்கள் நன்கு புரிந்து கொண்டார்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக நம் எதிரிகள் தமிழின இளைஞர்களுக்கு எதிர்வகையில் அன்றாடம் பாடம் கற்பிக்கிறார்கள். ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில் இன அழிப்பு செய்ததில், இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே செயல்பட்டன. தமிழ்நாட்டின் கச்சத்தீவை சிங்கள அரசுக்குக் கொடுத்ததுடன், தமிழின மீனவர்களைச் சிங்களப் படையாட்கள் சுட்டுக் கொன்றதில்,- அடித்துக் கொன்றதில், தமிழ்நாட்டு மீனவர்களின் கடல் உரிமைகளைப் பறித்ததில், சிங்கள அரசுக்கு அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு துணை நிற்கிறது.

காவிரித் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியும், அதைச் செயல்படுத்திட உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டபிறகும் அதைச் செயல்படுத்த, காங்கிரசு நடுவண் அரசும், பா.ச.க. நடுவண் அரசும் முரட்டுத்தனமாக மறுத்துவிட்டன. இருபத்தைந்து இலட்சம் ஏக்கர் சாகுபடி நீரும் இருபது மாவட்டங்களின் குடிநீரும் கன்னட இனவெறி அரசால் தடுக்கப்பட்டுவிட்டன. கன்னட அரசின் இந்த சட்டவிரோதச் செயலுக்கு இந்திய ஆட்சியாளர்கள் தொடர்ந்து தோள் கொடுக்கிறார்கள்.

இது ஒருபுறம் நடக்கும்போதே இன்னொருபுறம், காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைத்து, அது வழங்கிய இறுதித் தீர்ப்பை நீக்கும் வகையில், இந்தியா முழுமைக்குமான புதிய ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவை, இந்திய அரசு மக்களவையில் 14.03.2017 அன்று தாக்கல் செய்து, அது நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது, அதில் முதற்கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம், அவ்வணையின் சிற்றணைப் பகுதியை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்தினால் மொத்த உயரமான 152 அடிக்கும் தண்ணீர் தேக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. 

ஆனால், அத்தீர்ப்புப்படி சிற்றணையைச் செப்பனிடும் பணிக்கான கட்டுமானப் பொருள் எதையும் எடுத்துச் செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதிக்கவில்லை. இந்திய அரசு இதில் தலையிட்டு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தி வைக்கவில்லை. 

எனவே, 152 அடி தண்ணீர் தேக்கும் வாய்ப்பை இந்திய அரசின் துணையுடன் கேரள அரசு தடுத்துக் கொண்டுள்ளது. கேரளத்தில் காங்கிரசு ஆட்சி நடந்தாலும் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் ஆட்சி நடந்தாலும் சிற்றணையைத் தமிழ்நாடு அரசு வலுப்படுத்தும் கட்டுமானப் பணிகளைத் தடுக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்குக் கேரளப் பகுதியில் இருந்துதான் மின்சாரம் வரவேண்டும். கேரள அரசு விலைக்கு மின்சாரம் தர மறுக்கிறது. எப்போதோ ஒரு யானை, மின் கசிவால் இறந்துவிட்டதைக் காரணம் காட்டி இருபதாண்டுகளுக்கு மேல், மின்சாரத்தை நிறுத்திவிட்டது கேரள அரசு! மதகுகளை ஏற்றி இறக்கவும், அணை மற்றும் அலுவலகக் கட்டடங்களுக்கும் தேவைப்படும் மின்சாரத்தை மின்னாக்கி (ஜென ரேட்டர்) மூலம்தான் உற்பத்தி செய்து கொண்டுள்ளது தமிழ்நாடு அரசு!

பாலாற்றில் ஆந்திர அரசும் பவானியில் கேரள அரசும் புதிது புதிதாகத் தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்கு வரும் தமிழ்நாட்டிற்குரியத் தண்ணீரைத் தடுத்து அதைத் தேக்கி வைத்துக் கொள்கின்றன. மிக வளமான மிகப் பழமையான விளை நிலங்களில் பெட்ரோலியம் எடுத்தும், மீத்தேன் - ஐட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயுக்கள் எடுத்தும், நிலக்கரி எடுத்தும், நிலத்தடி நீரை நஞ்சாக்கி நிலத்தின் மேற்பரப்பை வேதிப் பொருட்கள் குவித்து தரிசாக்கி, தமிழ்நாட்டு வேளாண்மையை அழிக்க முயல்கிறது இந்திய அரசு!

கேரளத் துறைமுகத்திலிருந்து கர்நாடகம் செல்லும் எரிவளிக் குழாய் தமிழ்நாட்டில் விளை நிலங்கள் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று இந்திய அரசின் கெய்ல் நிறுவனம், இனப்பாகுபாடான திட்டம் தீட்டிச் செயல்படுத்தியது.

திருவண்ணாமலை, சேலம் மலைகளை அழிக்கும் தனியார் கொள்ளையர்களுக்கு இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் துணை நிற்கின்றன. ஆற்று மணல், தாதுமணல் கொள்ளையர்களின் காவலர்களாகத் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

நடுவணரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் இந்தித் திணிப்பில் தீவிரம் காட்டுகின்றன. அத்தோடு நில்லாமல் ஆரிய மொழியான சமற்கிருதத்
தையும் திணிக்கின்றன. 

இன்னும், இன்னும் எத்தனை எத்தனை உரிமைப் பறிப்புகள்?

செயலலிதாவும் கருணாநிதியும் உடல் நலத்தோடு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தலைவர்களாகச் செயல்பட்ட காலத்திலேயே, அவர்கள் தங்களின் தமிழினத் துரோக அரசியலால், தில்லியின் கங்காணிகளாகச் செயல்பட்டதால், தமிழர்களிடையே அம்பலப்பட்டுப் போனார்கள்!

எந்தத் தன்னலமும் இல்லாமல் தமிழர் நலன் பற்றி மட்டுமே சிந்திக்கும் இளைஞர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டு அரசியல் களத்திலிருந்து செயலலிதாவும் கருணாநிதியும் நீங்கியமை - பெருஞ்சுமை நீக்கமே!

கருணாநிதி _ செயலலிதா ஆதிக்கத்திற்குட்பட்ட மக்களுக்கு வெளியேதான், கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தங்கள் நெருக்கடிகளைத் தீர்க்கவும் உரிமைப் பறிப்புகளைத் தடுக்கவும் வெகுமக்கள் போராடி வருகிறார்கள். இப்போராட்டங்கள் மூலம் ஓரளவு வெற்றியும் பெற்று வருகிறார்கள்.

தமிழீழ விடுதலையை எதிர்த்து வந்தார் செயலலிதா. விடுதலைப்புலிகள் என்று பேச்செழுந்தால், உடம்பெல்லாம் - உள்ளமெல்லாம் எரியும் செயலலிதாவுக்கு! தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை இந்திய இராணுவம் பிடித்து வந்து கொலைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று 2002இல் அவர் முதலமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

சிங்களப்படை தமிழீழத்தில் தமிழ்ப் பொது மக்களைக் கொல்கிறது; உடனே அங்கு போர் நிறுத்தம் வேண்டும் என்று 2008இல் தமிழ்நாட்டில் கோரிக்கைகள் எழுந்தபோது, “போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்று பொன்மொழி உதிர்த்தார் செயலலிதா. அதே செயலலிதா 2009இல் போர் நிறுத்தம் கோரி உண்ணாநிலை மேற்கொண்டார்.

“நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி கொடுத்தால், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தனி ஈழம் அமைத்துத் தர நடுவண் அரசை வலியுறுத்துவோம்” என்று 2009 மக்களவைத் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி கொடுத்தார். இந்தத் தலைகீழ் மாற்றம் செயலலிதாவிடம் எப்படி ஏற்பட்டது?

இளந்தலைமுறைத் தமிழர்களும் பொதுவான தமிழ் மக்களும் தமிழின உணர்வு மேம்பாட்டால், தமிழீழத்தையும் விடுதலைப்புலிகளையும் ஆதரிக்கிறார்கள். ஆட்சியில் உள்ள கருணாநிதி, இனத்துரோகம் செய்வதாகக் கருதுகிறார்கள். இதுவரை கருணாநிதி வளைத்து வைத்திருந்த தமிழின உணர்வாளர் என்ற வாக்கு வங்கியை இத்தருணத்தில் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தந்திரத்துடன் செயலலிதா அடித்த குட்டிக்கரணம் அது!

செயலலிதாவின் இம்மாற்றத்திற்குக் காரணம், அப்போது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழின உணர்வாளர்கள், தமிழ்த் தேசியர்கள் நடத்திய போர் நிறுத்தக் கோரிக்கை, ஈழ ஆதரவுக் கோரிக்கைப் போராட்டங்களே!

நம்மாழ்வார் தொடங்கி வைத்து, காவிரி மாவட்டங்களில் நடந்த மீத்தேன் எதிர்ப்பு உழவர் எழுச்சி காரணமாக மீத்தேன் எடுக்கத் தடை ஆணை போட்டார், அன்றைய முதல்வர் செயலலிதா! முந்தைய ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் பெருங்குழும (கார்ப்பரேட்) நிறுவனம், காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். ஆனால் உழவர் எதிர்ப்பு எழுச்சி ஏற்பட்டவுடன் அவரும் மாறினார்; மீத்தேன் திட்டத்தை எதிர்த்தார்.

கொங்கு மண்டலத்தில் விளை நிலங்களில் கெய்ல் நிறுவனம் எரிவளிக் குழாய் பதிப்பதை உழவர்களும், இயக்கங்களும் தடுத்து நிறுத்தினர்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்கள் தூக்கிற்கு தில்லி அரசு நாள் குறித்தது. முதலில், இதைத் தடுத்து நிறுத்தத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறிய அன்றைய முதல்வர் செயலலிதா, தமிழ்நாடு தழுவிய மக்கள் எழுச்சியைப் பார்த்து, அத்தூக்கைக் கைவிட வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டார். தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட அத்தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை!

2011ஆம் ஆண்டு, முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலையொட்டி கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தேனி மாவட்டத்தில் பல நாட்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்சி கொடிகள் இன்றி கேரள எல்லை நோக்கி நடத்திய, போர்க்குணமிக்கப் பேரணி தன்னெழுச்சியாக நடந்ததே!

அதே போல் நடைபெற்ற தன்னெழுச்சியான தைப்புரட்சியால்தான், சல்லிக்கட்டை அனுமதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. நெடுவாசல் போராட்டம், காவிரி உரிமை மீட்புப் போராட்டம், டாஸ்மாக் கடை மூடும் மக்கள் போராட்டம் என எத்தனையோ மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் _- குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு வெளியே பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு வெளியே நடந்து கொண்டே உள்ளன.

இந்தத் தன்னெழுச்சி மற்றும் தற்சார்பு மக்கள் போராட்டங்கள், தமிழின உரிமைப் போராட்டங்கள் கருணாநிதியும் செயலலிதாவும் செல்வாக்கோடு ஆட்சியில் இருந்தபோது தொடங்கித் தொடர்கின்றன.

ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்திற்குத் தமிழ்ச்சமூகம் மாறிச் செல்லும் சமூக இயக்கம் நடந்து கொண்டுள்ளது. இந்த இடைமாற்றச் சமூகநகர்வு, அதனால் எழும் முட்டல் _ மோதல்கள் மேலும் சில ஆண்டுகள் தொடரலாம்!

இந்த இடைமாற்றக் காலத்தில், அரசியல்- - சமூக அரங்கத்தில் தோன்றியுள்ள புதிய முழக்கம் “தமிழ்த் தேசியம்’’!

தமிழ்த்தேச விடுதலையுடன் இணைக்கப்பட்ட தமிழ்த்தேசிய சிந்தாந்த வரையறை _- அதற்கான செயல்முறை - பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சியவாதிகளின் பாசறை என்ற கட்டுக்கோப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்த் தேசிய அமைப்பு வளர்ச்சி பெற்று, மாற்று ஆற்றலாக உருவாகவேண்டும்.

தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ அல்லது இவை போன்ற வேறொரு அமைப்போ மக்களை ஏமாற்றும் வகையில், தனக்கு மறு ஒப்பனை செய்து கொண்டு, தலைமை தாங்கும் ஆற்றல் பெறுமா என்ற வினாவும் இருக்கிறது.

இந்த இடைமாற்றக் கட்டத்தில், நடுவண் ஆட்சியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பா.ச.க.வை வளர்த்திட ஆரியத்துவா வாதிகள் துடிக்கின்றனர். அவர்கள் பல்வேறு குறுக்குவழிகளையும், அறக்கேடான கொல்லைப் புற வழிகளையும் நாடுகிறார்கள். பா.ச.க.வின் பாசிச ஆரியத்துவாவை தடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் மீண்டும் தி.மு.க. அல்லது அ.தி.மு.கவை ஆதரிக்கூடாது. அப்படிச் செய்வது கொள்ளிக் கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்வதுபோல் ஆகும்.

ஏற்கெனவே இவ்விரு கழகங்களும் பா.ச.கவுடன் கூட்டணி சேர்ந்தவைதான்; இனியும் சேர காத்திருப்பவைதான்! சிறிது காலம் பிடித்தாலும் சித்தாந்த வலிமையுடனும், செயல் வலிமையுடனும் உருவாகும் தமிழ்த் தேசியமே ஆரியாத்துவாக் கட்சியை ஓரங்கட்டி ஒதுக்கும்.

தெளிவான சித்தாந்த வரையறுப்பு, உண்மை, நேர்மை, மக்களுக்கான ஒப்படைப்பு ஆகியவை கொண்ட ஆற்றல்மிகு தமிழ்த்தேசிய அமைப்பை வளர்ப்பதையே இந்த இடைமாற்றக் காலத்தில், தங்கள் நீங்காக் கடமையாக விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும், தமிழர்களும் கைக்கொள்ள வேண்டும்!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 சூன் 16-30 இதழில் வெளியானது)


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.