மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆதாய அரசியல் அணுகுமுறை கூடாது! அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!
மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆதாய அரசியல் அணுகுமுறை கூடாது! அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 85 விழுக்காட்டு இடங்கள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை இன்று (14.07.2017) சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி இரவிச்சந்திர பாபு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது பேரதிர்ச்சி தருகிறது. மாநில உரிமையின் மீது சம்மட்டி கொண்டு தாக்கியதாக உள்ளது!
இந்த அநீதியிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு அரசு ஆணைப்படி மாநிலப் பாடத்திட்டத்தைச் சேர்ந்த 85 விழுக்காட்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடம் கிடைக்கச் செய்வது எப்படி என்றுதான் ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மற்றும் அனைத்து அமைப்புகளும் சிந்திக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு துரோகமிழைத்துவிட்டது என்று கண்டனம் தெரிவிக்கும் எதிர்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இந்த சிக்கலிலிருந்து விடுபட்டு தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 விழுக்காட்டு இடங்கள் கிடைக்க என்ன செய்யலாம் என்று அறிவுரை கூற வேண்டுமே தவிர, ஆளுங்கட்சியை சாடுவதற்கான ஒரு வாய்ப்பாக கருதிச் செயல்படக் கூடாது!
பா.ச.க. தலைமையிலான நடுவண் அரசு, மாநிலங்களுக்கு இருக்கக்கூடிய மிகக் குறைந்த சில அதிகாரங்களையும் பறித்து தில்லியில் குவித்துக் கொள்வதில் தீவிரமாக உள்ளது. அந்த ஒற்றை அதிகாரக்குவிப்பின் ஒரு ஆக்கிரமிப்புதான், மாநிலத்தின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்!
அடுத்து, மாவட்ட அளவிலான நீதிபதிகளை தேர்வு செய்யவும் அனைத்திந்தியத் தேர்வு நடத்த பா.ச.க. அரசு திட்டமிடுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக சொந்த அரசு நடத்திய தமிழினம், புதுதில்லியின் ஒரு பாளையப்பட்டாக – ஒரு சமசுதானமாக மாற்றப்படுவதை கண்டு, அனைத்துத் தமிழர்களும் நெஞ்சு கொதிக்க வேண்டும். கூடிப்பேசி ஒருமித்த சட்டப்போராட்ட வடிவங்களையும், மக்கள் போராட்ட வடிவங்களையும் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு அரசுக்குள்ள அதிகாரத்தை மீட்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment