ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு: தமிழ்நாடு முதலமைச்சர் வல்லுநர் குழுவுடன் தில்லி சென்று தமிழ்நாட்டுத் தரப்பு வழக்கறிஞர்களுடன் விவாதிக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கு: தமிழ்நாடு முதலமைச்சர் வல்லுநர் குழுவுடன் தில்லி சென்று தமிழ்நாட்டுத் தரப்பு வழக்கறிஞர்களுடன் விவாதிக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வில் நேற்று (11.07.2017) தொடங்கிய காவிரி வழக்கு வாதத்தில். கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் – மூத்த சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன், தமது மதிப்பிற்கு ஊனம் ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் மலிவான, தவறான வாதங்கள் முன்வைத்துள்ளார்.

“ஆங்கிலேய ஆட்சியில் 1924இல் சென்னை மாகாணம் – மைசூர் அரசு ஆகியவற்றிற்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம், மைசூர் அரசின் மீது ஆங்கிலேய அரசு மேலாதிக்கம் செலுத்திப் போடப்பட்ட ஒப்பந்தம்; விடுதலை பெற்ற இந்தியாவில் அது செல்லாது” என்கிறார்.

1910ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகள் சென்னை மாகாண அரசு சார்பில் மைசூர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இலண்டன் நீதிமன்றம் வரை வழக்கு நடத்தியும், இறுதியில் இரு தரப்பும் இணங்கி போட்டுக் கொண்ட ஒப்பந்தமே, “சென்னை மாகாண அரசு – மைசூர் அரசு” ஒப்பந்தம் ஆகும்.

நாடுகள், அரசுகள் உருவாகும் முன்னே ஆறுகள் உருவாகி, மொழிச் சமுதாயம் உள்ளிட்ட எல்லா எல்லைகளையும் கடந்து நில அமைப்பிற்கேற்ப ஓடிப் பயன் தந்து வருகின்றன. நாடுகள், அரசுகள் உருவானபின் வரலாற்று வழியெங்கும் ஓடி வந்த ஆறுகுளை – அந்த மரபுக்கேற்ப பகிர்ந்து கொள்ளும் உலக நீதிகளும் சட்டங்களும் உருவாகின. அப்படியே இன்றும் உலக நாடுகளுக்கிடையிலும் இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையிலும் சட்ட ஏற்பாடுகளுடன் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இந்த இயற்கை நீதியின்படி காவிரி ஆற்று நீரைத் தமிழ்நாட்டுடன் கர்நாடகம் பகிர்ந்து கொள்ள வேண்டியது சட்டக்கட்டாயம் ஆகும்.

அடுத்து, 1956இல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு முன் உருவான 1924 ஒப்பந்தம், அதன்பிறகு செல்லாது என்கிறார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால், இந்தியாவில் பல மாநிலங்களுக்கிடையே இன்று தண்ணீர்ப் பகிர்வுக்கேற்ப ஓடிக் கொண்டிருக்கும் நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் ஓட முடியாது!

நாடறிந்த சட்ட வல்லுநரான நாரிமன் தமது தன்னலத்திற்காக சட்ட நெறிகளிலிருந்து (Legal Ethics) வழுவுகிறார். நாரிமன் உச்ச நீதிமன்றத்தில் தர்க்கங்களுக்கு அப்பால் செல்வாக்கு செலுத்தும் ஆளுமை மிக்கவர். அவரை அவ்வப்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா – வல்லுநர் குழுவுடன் சென்று தில்லியில் சந்தித்து வழக்கிற்கான கூடுதல் செய்திகளையும் உத்திகளையும் கூறி வலுப்படுத்தி வருகிறார். அவ்வாறான நடைமுறை தமிழ்நாட்டு முதலமைச்சர் தரப்பில் இன்றும் இல்லை; என்றும் இல்லை!

வழக்கறிஞர்களை அமர்த்துவது, வழக்குப்போட்ட “சாதனையை” செய்தி ஊடகங்களுக்குத் தெரிவிப்பது, அத்துடன் ஒதுங்கிக் கொள்வது என்ற நடைமுறையைத்தான் இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர்கள் கடைபிடித்து வந்துள்ளார்கள். இந்த ஏனோ தானோ அணுகுமுறையால், காவிரியில் தமிழ்நாடு இழந்தது ஏராளம்!

இனியும் அந்த அணுகுமுறையைத் தொடராமல், தமிழ்நாடு முதலமச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பாசனப் பொறியியல் துறையில் பணியாற்றிக் கொண்டுள்ள மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்ற வல்லுநர்களையும். சட்ட வல்லுநர்களையும் அழைத்துக் கொண்டு தில்லி சென்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடும் வழக்கறிஞர்கள் குழுவிற்கு, செய்திகளையும் உத்திகளையும் கூறி அவர்களை வலுப்படுத்த வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்களின் நீதிமன்றப் பணிகளையும் கண்காணிக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
www.kannotam.com
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.