ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழர் இனமுழக்கம் - பெ. மணியரசன் - சிறப்பு கட்டுரை!

 தமிழர் இனமுழக்கம் - பெ. மணியரசன் -  சிறப்பு கட்டுரை!
தமிழ்ச்சமூகம் இன்று முட்டுச்சந்தில் நிற்கவில்லை; முன்னேறிச் சென்று கொண்டுள்ளது; “காவிய நாயகர்களின்’’ வருகைக்காக அது காத்திருக்கவில்லை; களப் போராட்டங்கள் நடத்திக் கொண்டுள்ளது.

இன விடுதலை இலட்சியவாதிகள் போல் எக்காள மிட்டு வந்த திராவிடத் திரிபுவாதிகள், உண்மையில் தில்லிக்குக் கங்காணிகளே என்பதை வரலாறு அடையாளம் காட்டிவிட்டது. தில்லி ஏகாதிபத்தியம், அவர்களை நோக்கி ஆட்காட்டி விரலை உயர்த்தினாலே போதும், திராவிடத் திரிபுவாதிகள் தங்கள் அரிதாரத்தைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள்!

ஊழலோ ஊழல், ஒற்றை அதிகார சர்வாதிகாரத் தலைமை, குடும்ப வாரிசுத் தலைமை - இவையெல்லாம் தான் திராவிட அரசியலின் விழுதுகள்! எழுந்து வரும் இளந்தறைமுறைத் தமிழர்கள் அருவருக்கும் அரசியல் திராவிட அரசியல்!

“தமிழின உரிமை’’ என்று பேசினாலே நாஜிசம், பாசிசம் என்று நாத்தழும்பேற ஏசிவந்த இடதுசாரிகள், உண்மையில் “பாரத மாதாவின் பாதந்தாங்கிகள் - தில்லி ஆரியத்துவாவின் பங்காளிகள்’’ என்பதைப் பாமரத் தமிழரும் புரிந்து கொண்டார். கரையேறத் துடிக்கும் கடைசிக் கட்டத் தவிப்புடன் அவர்கள் இப்போது “தமிழர் உரிமை’’ மாநாடு நடத்துகின்றனர். போர்ப்பறையைத் திருப்பிப் பிடித்து பிச்சை கேட்பது போல் உள்ளது அவர்களின் இச்செயல்! இங்கு பிச்சை என்பது வாக்குப் பிச்சை!

இலங்கைச் சிறைகளில் அடைக்கிறார்கள். தமிழ் மீனவர்களின் படகுகளைக் களவாடிக் கொள்கிறார்கள்.

இத்தனை தமிழர் உரிமைப் பறிப்பு, உயிர்ப் பறிப்பு அட்டூழியங்கள் அனைத்தையும் தட்டிக் கேட்டுத் தடுத்து நிறுத்த இந்தியத்தேசிய ஆட்சியாளர்கள் முன் வரவில்லை. மாறாக மறைமுகமாக அந்த சிங்களர்களின் அட்டூழியங்களுக்குத் துணை நிற்கிறார்கள். இந்தியக் கடலோரக் காவல்படை தலையிட்டு ஒரு நாளும் சிங்களர் அட்டூழியங்களைத் தடுக்கவில்லை.

வெள்ளையராட்சியில் சிங்களர்கள் தமிழர்களுக்கெதிராக இத்தனை அட்டூழியங்கள், ஆக்கிரமிப்புகள் செய்தால், வெள்ளையராட்சி சிங்களர் வாலை ஒட்ட நறுக்கி இருக்கும்! தமிழ் மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கும். நடுநிலையான நீதியை நிலைநாட்டியிருக்கும்.

இவ்வாறு நாம் கூறுவது வெறும் கற்பனையன்று; காவிரிச்சிக்கலில் வெள்ளையராட்சி எப்படி நடந்து கொண்டது என்பதை வைத்து நாம் இம்முடிவுக்கு வருகிறோம்.

இந்தியத்தேசிய ஆட்சியாளர்கள் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களர் அட்டூழியங்களுக்கு ஆதரவாகவும் நடுநிலை தவறி நடந்து கொள்வது ஏன்? சிங்களர்களும் இந்தியத்தேசிய ஆட்சியாளர்களும் ஒரே ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்! ஒரே ஆரியத்துவாவின் மக்கள்! இந்தியத்தேசியம் சிங்களரைப் பங்காளியாகப் பார்க்கிறது; தமிழரைப் பகையாளியாகப் பார்க்கிறது!

வெள்ளையராட்சியின் கீழ் தமிழ்நாடு இருந்தபோது, காவிரி உரிமையைத் தமிழ்நாட்டிற்குத் தக்க வைக்க ஆங்கிலேய அதிகாரிகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள், அதற்கான அவர்களின் அறிவு உழைப்பு ஆகியவை மகத்தானவை! மனம் நெகிழ்ந்து பாராட்டத்தக்கவை!

காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக - தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே 1924இல் போடப்பட்ட ஒப்பந்தம் மிகமிக அருமையானது. இரு தரப்பிலும் ஆங்கிலேய வல்லுநர்கள் வாதிட்டார்கள்.

இந்தியா விடுதலை பெற்ற பின் - இந்தியத்தேசிய ஆட்சியாளர்கள் காவிரி தமிழ்நாட்டிற்கு இல்லை என்று ஆக்கிவிட்டார்களே! இந்தியத்தேசியம் தமிழர்களுக்குக் கொடுத்த “பரிசு” இதுதான்!

வெள்ளையரை விரட்டி அடிக்கப் போரிட்டு, வீரச்சாவடைந்த பூலித்தேவன், வீரமங்கை வேலு நாச்சியார், மருதுபாண்டியர், வீரபாண்டிய கட்டபொம்மன், தளபதி சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, வீரன் அழகுமுத்துக் கோன், ஒண்டிவீரன், செக்கிழுத்த சிதம்பரனார், மூவண்ணக் கொடி காக்க மூச்சை விட்ட குமரன் முதலிய தமிழ் மண்ணின் வரலாற்று நாயகர்களுக்கும், விடுதலைப்போரில் பங்கேற்று இந்தியச் சிறைகளிலும், அந்தமான் சிறையிலும் ஆண்டுக் கணக்கில் அடைபட்டுக் கிடந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் விடுதலை பெற்ற இந்தியத்தேசியம் வழங்கிய “பரிசு’’, காவிரி உரிமையைப் பறித்தது _ வெள்ளையர்கள் கட்டித் தந்த முல்லைப் பெரியாறு அணை உரிமையைச் சீர்குலைத்தது போன்றவை தான்!

முல்லைப் பெரியாறு அணை - எவ்வளவு அருமையான திட்டம்! வெள்ளையர்கள் வணிக வேட்டைக்காக, வன்முறையில் நாடு பிடித்தாலும் _- ஆட்சியில் அமர்ந்த பின் மக்கள் பணி ஆற்றினார்கள்! முல்லைப் பெரியாறு அணைக் கட்டமைப்பு அறிவாற்றலின் அடையாளம் மட்டுமல்ல - ஆங்கிலேய அரசு மக்களின் மீது கொண்ட அக்கறையின் வடிவமும் ஆகும்! வெள்ளையர் அரசு முறைப்படி திருவிதாங்கூர் ஆட்சியாளருடன் பேசி 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் போட்டுத்தான் அணை கட்டியது!

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட முல்லைப் பெரியாறு சிற்றணையைச் செப்பனிட சிமெண்ட் கொண்டு போக முடியவில்லை. அதனால் முழுக் கொள்ளளவு தண்ணீர் தேக்க முடியவில்லை. கேரளம் முல்லைப் பெரியாறு அணைக்கு விலைக்கு மின்சாரம் தர மறுக்கிறது. எனவே மின்னாக்கி (ஜெனரேட்டர்) மூலம்தான் அவ்வளவு பெரிய முல்லைப் பெரியாறு அணைக்கும் அலுவலகங்களுக்கும் மின்சாரம் உற்பத்தியாகிறது.

தில்லியிலும் இந்தியத்தேசிய ஆட்சி - கேரளத்திலும் இந்தியத்தேசியக் கட்சிகளான காங்கிரசும் கம்யூனிஸ்டும் மாறிமாறி ஆட்சி நடத்துகின்றன. ஆனால், தமிழர்களுக்கெதிரான இனப்பாகுபாட்டை, இனவஞ்சகத்தை அவை அன்றாடம் அரங்கேற்றுகின்றன!

வெள்ளையராட்சி வெளியேறிய பிறகு, அவர்கள் கட்டிக் கொடுத்த மேட்டூர் அணையும், முல்லைப் பெரியாறு அணையும், நீரின்றி வறண்டும் வற்றியும் கிடக்கும்போது, எந்தத் தமிழன் நெஞ்சில், எந்தத் தமிழச்சி நெஞ்சில் இந்தியத்தேசியம் குறித்து ஈரம் சுரக்கும்? நெருப்புதான் எரிகிறது!

வெள்ளையராட்சி நடந்தபோது, பாலாறு - தென்பெண்ணை ஆறுகளில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் ஓடிவந்தது. “காவிரி, தென்பெண்ணை, பாலாறு- தமிழ் கண்டதோர் வைகை பொருநைநதி, என மேவிய ஆறுபல ஓடத் திரு மேனி செழித்த தமிழ்நாடு’’ என்று களிகூர்ந்தார் பாரதியார்! இந்தியத் தேசிய ஆட்சி வந்தபின் என்ன நிலை?

கன்னடர்களும் தெலுங்கர்களும் அவற்றில் அணைகள் கட்டித் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைக் களவாடிக் கொண்டனர். அந்தக் களவாடலுக்கு உறுதுணையாய் நிற்கிறது இந்தியத்தேசிய ஆதிக்கம்!

தமிழர்களின் உரிமைகளைப் பறித்த இந்த இந்தியத் தேசிய ஆதிக்கத்தின் தலைமைகளாகக் காங்கிரசுக் கட்சியினரும், பா.ச.க. கட்சியினரும் இருக்கின்றனர்.

இவர்களின் இளைய பங்காளிகளாகக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியினர் இருக்கிறார்கள்! தமிழர் உரிமைகளைப் பணயம் வைத்து, பதவிச் சூதாட்டம் நடத்திக் கொள்ளையர் கூட்டமாகவும், கங்காணிக் கும்பலாகவும் திராவிடக் கட்சிகள் சீரழிந்துவிட்டன.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, தென் பெண்ணை முதலியவற்றில் தமிழர் உரிமைகளைப் பிற மாநில அரசுகள் பறிக்கும்போது, தீர்ப்புகளை செயல்படுத்த மறுக்கும்போது, நடுவண் அரசு என்ன செய்ய முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். நீட் நுழைவுத் தேர்வை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மாநில அரசுகள் எதிர்த்தன. அதற்காக அவற்றைச் செயல்படுத்தாமல் இந்திய அரசு கைவிட்டு விட்டதா?

தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்காதே என்று மாநில அரசு சொன்னால் இந்திய அரசு இந்தித் திணிப்பைக் கைவிட்டு விடுகிறதா?

பக்ரா நங்கல் அணை நீர், பஞ்சாப், அரியானா, இராசஸ்தான் மாநிலங்களிடையே ஓடுகிறது. அதற்கான தீர்ப்பையும் மேலாண்மை வாரியத்தையும் அங்கே இந்திய அரசு செயல்படுத்துகிறது.

நர்மதை ஆறு குசராத், இராசஸ்தான், மராட்டியம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களுக்கிடையும், கோதாவரி ஆறு மராட்டியம், ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் இடையேயும், கிருஷ்ணா ஆறு மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா இடையேயும் அமைதியாக ஓடிக் கொண்டுள்ளன. அவற்றிற்கான தீர்ப்புகளை செயல்படுத்தும் அமைப்புகளை அங்கே இந்திய அரசு நிறுவியுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் கங்கை ஆறு வங்காள தேசத்தில் பாய்ந்து பாசனம் தந்து கடலில் கலக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் சிந்து, சீலம், செனாப் ஆறுகள் பாக்கித்தான் நாட்டில் பாய்ந்து பாசனம் தருகின்றன. இவற்றிற்கான ஒப்பந்தங்களை இந்தியா செயல்படுத்துகிறது.

ஆனால் குடகில் உற்பத்தியாகிக் கர்நாடகம் வழியாகத் தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் காவிரி ஆற்றை மட்டும் கர்நாடகம் தடுத்துக் கொள்ளும், அதை இந்தியத்தேசியம் அனுமதிக்கும் என்றால் அதற்கு என்ன பொருள்? அதைத்தான் தமிழர்களுக்கு எதிரான இந்தியத்தேசியத்தின் இனப்பகைக் கொள்கை என்கிறோம்.

இந்தியாவை ஆள்வதும் இந்தியத்தேசியக் கட்சிகள்; கர்நாடகம், கேரளம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஆள்வதும் இந்தியத்தேசியக் கட்சிகள் அல்லது இந்தியத்தேசியத்தை ஏற்றுக் கொண்ட கட்சி!

காவிரித் தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பளித்தபின், அதை உச்ச நீதிமன்றம் ஏற்று, அரசிதழில் வெளியிடக் கட்டளையிட்டது. அதன்பிறகு அத்தீர்ப்பு இந்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்குக் கெடு விதித்துக் கட்டளையிட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு மறுத்துவிட்டது. இதன் பொருள் என்ன? இந்தியத் தேசியம் தமிழர்களுக்கெதிரான இனப்பகை கொண்டு செயல்படுகிறது என்பதுதான்!

இப்போது, பவானி ஆற்றைக் காலி செய்ய, மலையாளிகள் ஆறு இடங்களில் தடுப்பணை கட்டு கிறார்கள்; சிறுவாணியில் தடுப்பணை கட்டுகிறார்கள். பாலாற்றிலும் தெலுங்கர்கள் புதிதாகஅணை கட்டுகிறார்கள்.

கிருஷ்ணா ஆற்றிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வர ஆந்திராவுக்குத் தமிழ்நாடு அரசு பணம் கொடுத்து, தெலுங்கு கங்கை கால்வாய் வெட்டப்பட்டது. ஆண்டுக்கு 12 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் அங்கிருந்து சென்னைக்கு வர வேண்டும். அதிக அளவாக 3. 5 ஆ.மி.க. மட்டுமே ஓர் ஆண்டுக்கு ஆந்திரம் திறந்து விடுகிறது. எஞ்சிய 8. 5 ஆ.மி.க. தண்ணீரைத் தருவதில்லை.

வரலாற்றுக் காலந்தொட்டு தமிழ்நாட்டை வளப்படுத்திய ஆறுகளின் நீரோட்டத்தைத் தடுத்து, விளைந்த நிலங்களை வெறுந்தரையாக்கி விட்டவர்கள், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் குலை காய வைத்தவர்கள், இந்தியத்தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்குமாறு தமிழர்களை அழைக்கிறார்கள். இந்தியத்தேசிய நீரோட்டம் என்ற கானல் நீர் எங்கள் வயல்களில் பாயுமா? வாய்க்குள் செல்லுமா? இந்தியத்தேசியம் தமிழர்களைத் தண்டிப்பதேன்?

மீத்தேன்

வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனி, பீரங்கி முனையில், துப்பாக்கி முனையில் உழவர்களிடமிருந்து நிலங்களைப் பறித்து வெள்ளைக்காரக் கம்பெனிகளுக்குக் கொடுத்தது போல் இப்போது இந்தியத்தேசிய அரசு துப்பாக்கி முனையில் _- குண்டாந்தடி முனையில் தமிழ்நாட்டு உழவர்களின் நிலங்களை பெட்ரோலியம், எரிவளி, மீத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன் எடுக்கக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுக்கிறது.

பெட்ரோலியமும், எரிவளியும் ஏற்கெனவே எடுத்து வரும் ஊர்களில், நிலத்தடி நீர் பாழ்பட்டு, குடிநீருக்கும் வேளாண்மைக்கும் பயன்படாமல் கெட்டுப்போன, நஞ்சாகிப் போன நடைமுறை உண்மைகள் ஏராளமாக இருக்கின்றன.

கொடுக்கப்படாத விலை

இந்தியா முழுவதிலும் உழவர்களை வஞ்சித்து, ஓரங்கட்டி, அவர்களின் நிலங்களில் பெருங்குழும (கார்ப்பரேட்) நிறுவனங்களை ஆக்கரமிக்க விடுவதுதான் இந்திய அரசின் தொழில் கொள்கை!

உழவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு இலாப விலை மறுத்து, அவற்றை சந்தை மதிப்பற்ற, எடுபடாத சரக்காக மாற்றி வைத்துள்ளது இந்திய அரசு. இன்றியமையா அன்றாடத் தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை கூட எடுபடாத சரக்காக்கப் பட்டுள்ளன.

இதனால் கடனாளியான உழவர்கள் இலட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டிலும் உழவர்கள் தற்கொலை தொடர்கிறது.

உழவர்களின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்வது இந்தியத்தேசிய அரசின் வேலை இல்லை; அது மாநில அரசுகளின் வேலை என்கிறார் நடுவண் அரசின் நிதியமைச்சர் அருண்சேட்லி.

உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு - சந்தை மதிப்பற்ற குறைந்த விலையைத் தீர்மானிப்பது - பன்னாட்டு உர நிறுவனங்கள், பூச்சி மருந்து நிறுவனங்கள் பல மடங்கு _- பல மடங்கு தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கு விலையை உயர்த்திக் கொள்ள அனுமதிப்பது _ பன்னாட்டு நிறுவனங்களின் மறுபடி முளைக்காத விதைகள், மரபீனி மாற்று விதைகள், முட்டை இடாத கோழிகள், குஞ்சு பொறிக்காத முட்டைகள், காளை இல்லாமல் ஊசி மூலம் கருத்தரிக்கும் அயல் நாட்டுப் பசுக்கள் முதலியவற்றை மாநிலங்களில்

திணிப்பது போன்றவை மட்டும் இந்தியத்தேசிய அரசின் வேளாண் கடமைகளா? இவற்றிலெல்லாம் மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாதா?

உழவர்களின் வேளாண் கடன் தள்ளுபடி என்பது உழவர்களின் விளைபொருட்களுக்குக் கொடுக்கப்படாத விலையின் (Deffered Price) ஒரு பகுதிதான்; எந்த அரசின் கருணையுமில்லை; போடும் பிச்சையும் இல்லை! உழவர்களின் உரிமைத்தொகை!

இன ஒதுக்கல் நுகத்தடி

இந்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள உழவர்களின் கழுத்தில் பெருங்குழுமச் சுரண்டல், பெருங்குழும வேட்டை என்ற நுகத்தடியை மாட்டியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டு உழவர்களின் கழுத்தில் மேற்படி பெருங்குழும நுகத்தடியுடன் இன ஒதுக்கல் (Apartheid) என்ற இன்னொரு நுகத்தடியையும் இந்தியத்தேசிய அரசு மாட்டியுள்ளது.

பாலூட்டும் தாய்போல் பாசன நீர் ஊட்டி வந்த தமிழ்நாட்டு ஆறுகளின் மார்பகங்களை அறுத்துள்ளது இந்திய அரசு. விளை நிலங்களின் நெஞ்சைப் பிளந்து பெட்ரோலியம், எரிவளி, மீத்தேன் குழாய்களை இறக்குகிறது; கெய்ல் நிறுவனம் வேளாண் நிலங்களைப் பிளந்து எரிவளிக் குழாய்களைக் கொண்டு செல்கிறது.

இவையெல்லாம் தமிழர்களுக்கெதிரான இனப்பாகு பாட்டு, இன ஒதுக்கல் கொள்கைகள்!

வெள்ளையரை வெளியேற்றிய பிறகு இந்தியத் தேசியம் தமிழர்களுக்கு வழங்கிய பரிசு, இந்த இன ஒதுக்கல் அரசியல், பொருளியல் திட்டம்தான்!

தமிழ்நாட்டு மாநில அரசில் ஐம்பதாண்டுகளாகக் கோலோச்சும் திராவிடக் கங்காணிக் கட்சிகள் தில்லியிலிருந்து, கீழ்ப்படிதலுடன் இறக்குமதி செய்தவை இந்த இன ஒதுக்கல் அரசியல் _- பொருளியல் திட்டங்கள்தான்!

ஆரியத்துவாவும் இந்தியத்தேசியமும்

இந்தியத்தேசியம் என்பது இந்து மத அடித்தளத்தின் மீதுதான் நிற்கிறது. வடநாட்டு ஆரியப் பார்ப்பனர், ஆரிய சத்திரியர், ஆரிய வைசியர் ஆகியோர் தங்களை இந்து மதத்தின் தலைமை அதிகாரிகளாகக் கருதிக் கொள்கிறார்கள்.

பல காலமாக அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆரிய வேதகாலம் - பொற்காலம் என்பர்.

பாரதப் பழைமை - பாரதப் பண்பாடு என்றெல்லாம் அவர்கள் பேசுவது பழங்கால ஆரிய வேத - வைதீகக் காலத்தையும் பண்பாட்டையும்தான்! அவர்கள் கூறும் பாரதப்பழம் பெருமையில் சங்ககாலத் தமிழர் வாழ்வு, திருக்குறள் முதலிய தமிழினப் பெருமிதங்களைச் சேர்க்க மாட்டார்கள்.

ஆரியத்துவாவைத்தான் இந்துத்துவா என்று பா.ச.க.வினர் பேசுகின்றனர்.

மத அடிப்படையில் தங்களை இந்து என்று கருதிக் கொள்ளும் ஆரியரல்லாத பிற இன மக்களை ஏமாற்றி இணைத்துக் கொள்வதற்காகவே, “இந்துத்துவா” என்று ஆர்.எஸ்.எஸ். _- பா.ச.க. அமைப்புகள் முகமூடிப் பெயர் வைத்தன!

ஆரியத்துவாவை எதிர்ப்பதுதான் - உண்மையில் பா.ச.க. பாசிசத்தை எதிர்ப்பதாக அமையும்! இந்தியத் தேசியமும் ஆரியத்துவாவும் பிரிக்க முடியாதவை என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வெளியார் ஆக்கிரமிப்பு

தமிழ்நாட்டில் பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்கள் பெருகியுள்ளன. அவை உழவர்களின் விளை நிலங்களைக் காலி செய்து எழுப்பப்பட்டவை! அவை நிலத்தடி நீரை உறிஞ்சிக் காலி செய்கின்றன. சுற்றுச் சூழலை 24 மணி நேரமும் மாசுபடுத்துகின்றன.

அவற்றில் வேலை செய்பவர்களோ பெரிதும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். அவற்றில் வேலை செய்யக் கல்வித் தகுதியிருந்தும், தொழில்நுட்பப் பயிற்சி இருந்தும், பட்டம் இருந்தும் தமிழ் இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் வேலையின்றி வீதியில் அலைகிறார்கள்.

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசின் தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல். - நெய்வேலி போன்ற தொழிலகங்கள், படைத்துறை தொழிற்சாலைகள், நடுவண் வரி வசூல் அலுவலகங்கள், வங்கிகள், அஞ்சலகங்கள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தலைமைக் கணக்காயர் அலுவலகங்கள் முதலியவை அனைத்திலும் திட்டமிட்டு வஞ்சகமாகவும் சூதாகவும் வட மாநிலங்கள் மற்றும் வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலையில் சேர்க்கிறார்கள்.

அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வந்து குவிந்து பற்பல தொழில்களில் ஈடுபடுகிறார்கள்; தனியார் தொழில் நிறுவனங்களிலும் நடுவண் அரசு நிறுவனங்களிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்களைவிட மிகை விகிதத்தில் அவர்கள் வேலையில் சேர்க்கிறார்கள். இங்கே ஒரு கேள்வி! இதே விகிதத்தில் தமிழர்கள் வெளி மாநிலங்களில் நடுவண் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் வேலையில் சேர்க்கப்படுகிறார்களா? இப்போது பணியில் உள்ளார்களா? இல்லை, இல்லை!

தமிழ் இனத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக- தமிழ் நாட்டிலேயே நடுவண் அரசு தனது நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை தர மறுக்கிறது. அன்னையின் மடியில் அனாதையாகிப் போவதுண்டா? இந்தியத் தேசியத்தின் இனப்பாகுபாட்டால் சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அனாதை ஆக்கப்படுகிறார்கள்; வேலை மறுக்கப்பட்டு விரட்டப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் செயல்படும் நடுவண் அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். பத்து விழுக்காட்டிற்கு மேல் அந்நிறுவனங்களில் பணியில் உள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

இந்திய அரசு அவ்வாறு வெளியேற்றாவிட்டால், தமிழ்நாட்டு இளைஞர்கள் அந்த அலுவலகங்களை முற்றுகையிட்டு பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள அயலாரை வெளியேற்ற வேண்டும் என்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

உடைப்பெடுத்த வெள்ளம் போல் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓடிவரும் வெளியாரைத் தடுக்க வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து தமிழ் நாட்டில் குடியேறுவதற்கு, நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள உள் அனுமதிச் சீட்டு (Inner Line Permit) முறையைக் கொண்டு வர வேண்டும்.

மார்வாடி _- குசராத்தி சேட்டுகள் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் வணிகத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அடுத்த நிலையில் மலையாளிகள் தமிழர் தொழில் வணிகத்தை ஆக்கிரமித்து வருகிறார்கள். மார்வாடி _ குசராத்தி சேட்டுகளும், மலையாளிகளும் மக்கள் தொகையில் தமிழ்நாட்டில் பெருகி வருகிறார்கள். இவர்கள் ஏராளமான வீடுகளையும், கட்டடங்களையும் கட்டிக் கொண்டு செல்வப் பெருக்கோடும், சமூகச் செல்வாக்கோடும் தமிழ்ச்சமூகத்தின் தாயக உரிமைகளில் குறுக்கிடுகிறார்கள்.

மொழிவழித் தாயகமாகத் தமிழ்நாடு நிறுவப்பட்ட 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறியோர் அனைவரும் வெளியாரே என்று வரையறுக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம். அதற்கு முன் வந்து பல நூறு ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் வாழும் பிற மொழி பேசும் மக்கள் அனைவரும் தமிழ்நாட்டு மக்கள்_- மண்ணின் மக்கள் என்று ஏற்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

1956 நவம்பர் 1-க்குப் பின் வந்த வெளியார்க்குத் தமிழ் நாட்டில் குடியுரிமை வழங்கக் கூடாது; இவர்களில் வெளியேற்ற வேண்டியவர்களை வெளியேற்ற வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் தமிழ்நாட்டிற்குள் வந்து தங்கிய வெளியார்க்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை எதுவும் வழங்கக் கூடாது.

இவ்வாறு செய்யவில்லை என்றால், தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக நீடிக்காது. அயலார் மாநிலமாகவோ அல்லது கலப்பின மாநிலமாகவோ மாறிவிடும்.

மேற்கண்ட நமது நிலைபாட்டை எதிர்ப்பவர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ தமிழினத் துரோகிகள் ஆவர்! அல்லது தமிழினப் பகைவர்கள் ஆவர்!

ஆட்சிமொழி - கல்விமொழி தமிழே

தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டப் பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும். நடுவண் அரசின் பாடத் திட்டப் பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத் தரத்தை உயர்த்த வேண்டும்.

தொடக்கக் கல்வியிலிருந்து ஆய்வுக்கல்வி வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். எல்லா நிலையிலும் தமிழ் கட்டாய மொழிப்பாடமாகவும் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும். ஆங்கிலம் மொழிப்பாடமாக மட்டும் இருக்க வேண்டும். மொழிச் சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழியை விருப்பப்பாடமாக கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

ஆரிய மொழிகளான இந்தி, சமற்கிருதம் ஆகியவை தமிழ்நாட்டில் மொழிப்பாடமாக இருக்கக் கூடாது!

தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் தண்டம் விதிக்கும் அல்லது தண்டனை தரும் கல்வி நிலையம் எதுவாக இருந்தாலும், அதற்கான அனுமதியை நீக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எல்லாத்துறையிலும் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே என்றாதல் வேண்டும்.

தமிழர்களே, உலகின் முதல் செம்மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம்; நம் தாய்த் தமிழ் வேறு எந்த மொழியிலிருந்தும் பிறந்ததில்லை. தமிழ் மொழியிலிருந்துதான் வேறு பல மொழிகள் பிரிந்து சென்றன. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் நம் தாய்மொழி தமிழ்தான்; இன்றும் நம்தாய் மொழி தமிழ்தான்!

தமிழ் இன அடிப்படையில் சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் நடத்தியவர்கள் தமிழர்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் பன்னாட்டு வணிகம் செய்தவர்கள் நம் முன்னோர். அயலார் ஆக்கிரமிப்புகள் நம்மைச் சீரழித்துவிட்டன!

ஆரியத்தால் வீழ்ந்தோம்; திராவிடத்தால் திசை மாறிச் சீரழிந்தோம்! ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் தமிழர்களின் போர் சங்க காலத்திலிருந்து தொடர்கிறது. இன்று ஆரியத்துவாவை எதிர்க்கிறோம்.

இன்று இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் முன்னெப்போதையும்விட, ஒளிபடைத்த கண்களோடு தமிழ்த்தேசியச் சுடரேந்தி முன் செல்கிறார்கள்! இனி அவர்களை ஏமாற்ற முடியாது.

தமிழ்த்தேசிய இலட்சியச் சுடர் ஏந்துவோம்! அது நாம் அடையவேண்டிய இலக்குகிற்கு வழிகாட்டும்.

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 ஜூலை 1-15 இதழில் வெளியானது)


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.