இனி வரும், களப்போராட்டங்களில் - கருத்தரங்குகளில் வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும்! பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!
இனி வரும், களப்போராட்டங்களில் - கருத்தரங்குகளில் வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!
தமிழ் கூறும் நல்லுலகின் மகத்தான ஓவியராகவும், தமிழின உரிமைப் போராளியாகவும் விளங்கிய ஓவியர் வீரசந்தானம் அவர்கள் நேற்று (13.07.2017) இரவு, மாரடைப்பால் திடீரென இறப்பெய்தினார் என்ற செய்தி, தமிழ் உணர்வாளர் நெஞ்சில் பேரிடியாய் தாக்கியது!
அவர் நடுவண் அரசில் தலைச்சிறந்த ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி, அதில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியாக உயர்ந்தார். அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, 1980களிலிருந்து ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகளை அறிந்து துன்புற்று துடித்தெழுந்து ஈழ விடுதலை ஆதரவாளராகச் செயல்பட்டார்.
பணி நிறைவுக்குப் பிறகு தமிழீழம் – தமிழ்நாடு – தமிழ்மொழி – சமூக மாறுதல் ஆகியவற்றிற்கான களப்போராட்டங்களில் உணர்ச்சிப் பொங்க பங்கேற்று, உரை நிகழ்த்துவதுடன் அவ்வப்போது தளைப்படுத்தவும்பட்டார்.
தமிழின விடுதலை, தமிழர் மேம்பாடு தவிர வேறெதுவும் நெஞ்சில் சுமக்காத மெய்யான தமிழ்த்தேசியர் தோழர் வீரசந்தானம்!
தமிழீழ விடுதலைப்போரின் தலைச்சிறந்த நினைவுச் சின்னமாக தஞ்சையில் எழுந்து நிற்கும் “முள்ளிவாய்க்கால் முற்ற” சிற்பங்களுக்கான வரைவு ஓவியங்களை தீட்டித் தந்தவர், தோழர் வீரசந்தானம் அவர்கள்! நவீன ஓவியத்துறையில் புதிய பங்களிப்புகள் வழங்கியவர் அவர்!
சில ஆண்டுகளுக்கு முன் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்களின் உதவியினால் மறுபிறவி போல் உயிர்த்தெழுந்தார். அதன் பிறகும் அவர் போராட்டங்களில் கலந்து கொண்டார். அண்மையில் இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து சென்னையில் இந்திப் பிரச்சார சபை முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்திய நகல் எரிப்புப் போராட்டத்தில், தோழர் சந்தானம் கலந்து கொண்டார்.
இனி, தமிழின – தமிழ்மொழி உரிமைகளுக்காக நடக்கும் களப்போராட்டங்களிலும் கருத்தரங்க மன்றங்களிலும் ஓவியர் சந்தானம் இல்லாத வெறுமை உணர்வாளர்களின் நெஞ்சத்தை உலுக்கும்! கள்ளம் கபடமற்ற அவருடைய சிரிப்பும், இடியோசைப் பேச்சும், எதிர்காலம் குறித்த கவலைச் சொற்களும், ஒவ்வொருவர் நெஞ்சிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்! இளம் தலைமுறைக்கு அவை வழிகாட்டிகளாக விளங்கும்.
நெஞ்சு நிறைந்த, நெஞ்சு நிமிர்ந்த தமிழ்த்தேசியப் போராளி – ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment