ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கதிராமங்கலம் பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறைக்கு மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் ஆகியோரே காரணம்! பெ. மணியரசன் குற்றச்சாட்டு!

கதிராமங்கலம் பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறைக்கு மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் ஆகியோரே காரணம்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் குற்றச்சாட்டு!
தஞ்சை மாவட்டம் – கதிராமங்கலத்தில், வனதுர்க்கையம்மன் கோயில் அருகே, இன்று (30.06.2017) காலை, நிலத்தடியில் சென்று கொண்டிருந்த ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் எரிவளிக் குழாய்கள் நான்கு இடங்களில் வெடித்து, கச்சா எண்ணெயும் எரிவளியும் வயல்களில் வெளியேறின. அவ்வப்போது தீப்பற்றியும் எரிந்தன.

இதனால் அச்சமடைந்த மக்கள், வீடுகளைவிட்டு வெளியே வந்து கூடி விட்டார்கள். அங்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம், “இதுபோன்ற ஓ.என்.ஜி.சி. குழாய் விபத்துகள் கதிராமங்கலத்தில் அடிக்கடி நடக்கின்றன. இதனால் எங்களுக்குப் பெரும் அச்சமாக உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, நிரந்தரமாக இதற்கொரு முடிவு தேடித்தரும் வகையில் உறுதியளிக்க வேண்டும். அதுவரை வேறு எந்த அதிகாரிகளையும் அந்த இடத்தில், பழுது பார்க்க அனுமதிக்க மாட்டோம்” என்று கூறிவிட்டார்கள்.
விடியற்காலையிலிருந்து இச்செய்தி வெளிவந்தும், மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அண்ணாத்துரை அங்கு வரவில்லை. மாறாக, மாவட்ட வருவாய்த்துறை அலுவலரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் அந்த இடங்களைப் பார்க்கப் போவதாகக் கூறியுள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் வர மறுக்கிறார், இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று சந்தேகப்பட்ட மக்கள் தங்களின் பீதியின் காரணமாக, மாவட்ட வருவாய்த்துறை அலுவலரையும், மாவட்டக் கண்காணிப்பாளரையும், “கலெக்டர் இல்லாமல், நீங்கள் மட்டும் அங்கு போக வேண்டாம்” என்று கூறியுள்ளார்கள்.

மீறி அந்த அதிகாரிகள் சென்றபோது, கூச்சல் எழுந்துள்ளது. அடுத்து, சாலையில் கிடந்த குப்பைகளும் விறகுகளும் எரிந்துள்ளன. போராடும் மக்கள் தாங்கள் தீ வைக்கவில்லை என்றும், நேரடியாகத்தான் அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தோம் என்றும் கூறுகிறார்கள். காவல்துறையினரே வைத்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். காவல்துறையினரோ போராடுபவர்கள்தான் தீ வைத்தனர் என்று கூறுகிறார்கள். இதில் எது உண்மை என்று கண்டறிய வேண்டும்.

ஆனால், உடனடியாகக் காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, அந்த கிராம மக்கள் மீது கடுமையாகத் தடியடி நடத்தித் தாக்கி விரட்டியுள்ளார்கள். இதில், சாந்தி, தேன்மொழி, பழனியம்மாள், சசி ஆகிய பெண்களை சாலை மையத்தில் வைத்து, கடுமையாகக் காவல்துறையினர் தாக்கியுள்ளார்கள். இக்காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர் ஆகியோர் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. தோழர் விடுதலைச்சுடருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. நல்லதுரை அவர்கள் கல்லடிபட்டு இரத்தக்காயம் அடைந்துள்ளார். காவலர் ஒருவரும் தலையில் இரத்தக்காயம் காயம்பட்டுள்ளார்.

பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர், கதிராமங்கலம் பிரமுகர் திரு. க. தர்மராசன், தோழர்கள் செந்தில், முருகன், சாமிநாதன், ரமேஷ், சிலம்பரசன், சந்தோஷ் மற்றும் மகளிர் - சாந்தி, தேன்மொழி, பழனியம்மாள், சசி உள்ளிட்ட 13 பேரைக் காவல்துறையினர் கைது செய்தார்கள். பின்னர், நான்கு பெண்களை காவல் நிலையத்திலேயே விடுவித்து, 9 ஆடவர்கள் மீது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, சிறைக்கு அனுப்புகிறார்கள்.

கடந்த சூன் 2ஆம் நாள் விடியற்காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், கதிராமங்கலத்தை முற்றுகையிட்டு, கிராம மக்களின் மனித உரிமைகளைப் பறித்துக் கொண்டு, ஓ.என்.ஜி.சி.யினர் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கத் துணை நின்றனர். அதை மக்கள் எதிர்த்தனர். அப்பொழுதும் பேராசிரியர் செயராமன் உள்ளிட்ட 10 பேரை பிணை மறுப்புப் பிரிவுடன் வழக்குப் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

தொடர்ந்து, சிக்கல்களும் நெருக்கடிகளும் சூழ்ந்துள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெயும் எரிவளியும் வெளியேறுகிறது. மக்கள் பீதியடைந்து வீதிக்கு வந்து போராடுகிறார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன், தஞ்சை மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலகமும் மிகவும் பொறுப்புடன் இதில் தலையிட்டு பிரச்சினையை சமூகமாகத் தீர்க்க முனைந்திருக்க வேண்டும்.

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்கள் வெடித்ததால், மக்கள் பதற்றத்துடன் போராடுவதை ஊடகங்கள் நேரடிக் காட்சிகள் மூலம் உலகத்திற்குத் தெரிவித்துக் கொண்டிருந்தன. சமூக வலைத்தளங்களில் தீப்பரவுவது போல் இச்செய்தி பரவி பல இலட்சம் மக்கள் பார்த்த விவரம் வந்து கொண்டிருந்தது.

ஏற்கெனவே போராட்டக்களமாக உள்ள கிராமத்தில் இவ்வளவு பரபரப்பான நிகழ்வுகள் தொடங்கிய போதே, ஊடகங்கள் வழியாக செய்தி வெளியான நிலையில், அம்மக்கள் கூறியபடி தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த கிராமத்திற்குப் போய் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்புக்கான உறுதியும் தந்திருக்க வேண்டும்.

மக்கள் மாவட்ட ஆட்சியரை அவமரியாதையாக நடத்தி விடுவார்களோ என்று மாவட்ட நிர்வாகம் ஐயப்பட்டிருந்தால், முன்கூட்டியே மக்கள் பிரதிநிதிகள் சிலரை (ஆண்களையும் பெண்களையும்) மாவட்ட ஆட்சியரை சந்திக்க வைத்து, அவர்கள் மூலம் கிராமத்திற்குள் மாவட்ட ஆட்சியர் வரும்போது, எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்படாத நிலையை உருவாக்கியிருக்கலாம்.

அதற்கான ஒரு முயற்சியும் எடுக்காமல், காவல்துறை தடியடி நடத்தி, வன்முறையால் அந்த மக்களை ஓரங்கட்டி வைத்தபின், மாவட்ட ஆட்சியர் மன்னர் கால தர்பாரில் வருவதுபோல், விபத்துப் பகுதியைப் பார்க்க வந்தது கண்டனத்திற்குரிய செயல்! அவருடைய பிடிவாதம் அல்லது செயலற்றத்தன்மை இந்தப் பிரச்சினையை வளரவிட்டது என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

இன்னொருபக்கம், தொடர்ந்து போராட்டக்களமாக ஓ.என்.ஜி.சி.யால் மாற்றப்பட்டுள்ள கதிராமங்கலத்தில் குழாய்கள் வெடித்து கச்சா எண்ணெயும் எரிவளியும் வெள்ளம் போல் வெளியேறி, விபத்து ஏற்பட்டு, அதனால் மக்கள் அறவழிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், தலைமைச் செயலகம் கவனித்ததா இல்லையா?

குறிப்பாக, தமிழ்நாடு உள்துறைச் செயலாளரும், தலைமைச் செயலாளரும் இதில் கவனம் செலுத்தினார்களா இல்லையா? அவர்கள் இது தொடர்பாக இன்று (30.06.2017) தஞ்சை மாவட்ட ஆட்சியருக்குக் கொடுத்த வழிகாட்டல் என்ன? அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் குற்றம் - தஞ்சை மாவட்ட ஆட்சியருக்குத் தவறாக வழிகாட்டியிருந்தாலும் குற்றம்!

“கதிராமங்கலம் மக்கள் நம்முடைய மக்கள்” என்ற உறவும் உரிமையும் முதலில் அதிகாரிகளுக்கும் அரசுக்கும் வேண்டும். அவர்களில் சிலர் அத்துமீறி நடந்து கொண்டாலும் அதைக் கட்டுப்படுத்தக்கூடிய உளவியல் உத்திகள், மக்கள் மீதான அன்பு, சிக்கலைக் கையாளும் செயல் திறன் ஆகியவை நம்முடைய அதிகாரிகளுக்கு இல்லையோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.

அடக்குமுறையும், சிறையில் அடைப்பதும்தான் ஒரே தீர்வு என்ற நிலை தமிழ்நாடு அரசுக்கு இருந்தால், மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நந்திகிராமத்திலும், சிங்கூரிலும் அடக்குமுறையும் துப்பாக்கிச்சூடும் நடத்தி, உயிர்ப்பலி வாங்கி ஆட்சியை இழந்த அதேநிலைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும். அங்கு மக்கள் தோற்கவில்லை, ஆட்சியாளர்கள்தான் தோற்றார்கள்! கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நந்திகிராம், சிங்கூரில் எடுக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் உழவர்களுக்கே வழங்கப்பட்டன என்ற படிப்பினையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இன்று கதிராமங்கலம் சிக்கலை இந்தளவுக்கு வளரவிட்டதற்குப் பொறுப்பாய் உள்ள அதிகாரிகள் மீதும், மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் உடனடியாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கதிராமங்கலத்தில் மக்களின் அச்சத்தைப் போக்கக்கூடிய வகையில் உடனடியாக அங்குள்ள ஏழு ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளையும் இயங்காமல் முடக்கி வைக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
www.kannotam.com
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.