ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கமலகாசன் கணிப்பின்படி தமிழ்நாட்டில் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா? தோழர் பெ. மணியரசன்!

கமலகாசன் கணிப்பின்படி தமிழ்நாட்டில் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா? தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தி.மு.க.வின் “முரசொலி” நாளிதழின் பவள விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் 10.08.2017 அன்று நடந்த போது அதில் பேசிய நடிகர் கமலகாசன், “ஜனகணமன பாடல் இருக்கும்வரை “திராவிடம்” இருக்கும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஜனகணமன பாடல் பாடப்படும் வரை தான் திராவிடம் இருக்குமோ” என்ற கவலையோடு இவ்வாறு பேசியிருப்பாரோ?

அடுத்து, “திராவிடம் என்பது தமிழகத்தோடு தென்னகத்தோடு முடிந்து விடுவதில்லை; அது நாடு தழுவியது. திராவிடம் என்பது பரந்த இந்தியன் (Pan Indian). இது தொல்லியல், மாந்தவியல் அறிந்தவர்களுக்குத் தெரியும். திராவிடம், சிந்துச் சமவெளியில் தொடங்கி, மெதுவாகத் தள்ளிக் கொள்ளப்பட்டு வந்து, தேநீரில் தேயிலைச் சாறு போல் தமிழ்நாட்டில் இருக்கிறது” என்றார் கமலகாசன்.

அப்படி அவர் பேசிய போது மேடையில் வீற்றிருந்த, மு.க. ஸ்டாலின் பூரித்துப் புன்னகைத்தார். ஒரு காலத்தில் தி.மு.க. தலைவர்கள் முழங்கிய ஆரிய - திராவிட இனப் போராட்டங்களின் வரலாறு, இக்காலத்தில் கழகத்திற்குப் பழங்கால சுமையாகி விட்டது. அந்த “வரலாற்றுக் கழிவு மூட்டைகள்” கமலகாசன் கையால் இறக்கி வீசப்படுவது, இந்திய தேசிய நீரோட்டத்தில் புனித நீராடிக் கொண்டிருக்கும் தி.மு.க.விற்கு ஓர் அங்கீகாரம்தான்!

“திராவிடம் அனைத்திந்தியத் தன்மை வாய்ந்தது” என்று கமலகாசன் கூறுவது சரிதான்! திராவிடப் பெயரை வடநாட்டில் உருவாக்கியவர்கள் ஆரியர்கள். தென்னாட்டுப் பிராமணர்களைப் பஞ்ச திராவிடர்கள் என்றார்கள் அவர்கள்! தமிழர்களைத் “திராவிடர்கள்” என்று குறிப்பதைத்தான் நாம் தவறு என்று கூறுகிறோம். மற்றவர்கள் தங்களைத் திராவிடர்கள் என்றுக் கூறிக் கொண்டால், அதில் நாம் தலையிடவில்லை.

தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் தற்காப்பு அடிப்படையில் இன உணர்ச்சி கொள்ளும் போதெல்லாம் அதை மடைமாற்றிப் பேசுவது கமலகாசனுக்கு வாடிக்கை!

இயக்குநர் பாரதிராசா தலைமையில், காவிரி உரிமைக்காகத் தமிழ்த்திரை உலகினர் நெய்வேலி அனல் மின் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்திய போது, “போராட்டத்தினால் காவிரியில் தண்ணீர் வர வேண்டும். இரத்தம் வரக்கூடாது” என்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரைத் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று தமிழ் நடிகர்கள் கோரிக்கை வைத்த போது, “அனைத்திந்திய நடிகர் சங்கம்” என்று மாற்றலாம் என்று கருத்து மாற்றம் கூறினார் கமலகாசன்.

இந்திய அடையாளமும் திராவிட அடையாளமும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன! சபாஷ் கமலகாசன், பூணூல் அணியாமலும் பிராமணியம் பேசலாம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.