ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மேகேத்தாட்டில் அணை கட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் - ஆட்சியாளர்கள் விலைபோய்விட்டார்களோ? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!

மேகேத்தாட்டில் அணை கட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் - ஆட்சியாளர்கள் விலைபோய்விட்டார்களோ? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கண்டனம்!
உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் காவிரி வழக்கில், இன்று (17.08.2017) தமிழ்நாடு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் கர்நாடகம் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை தந்துவிட்டால், அம்மாநிலம் காவிரியில் புதிய அணைகள் கட்டுவதை தமிழ்நாடு எதிர்க்காது என்று உறுதி கூறியுள்ளார்கள்.
உடனே நீதிபதிகள் கர்நாடகத் தரப்பைக் கேட்டிருக்கிறார்கள். கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர்கள் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை சேமித்துத் தருவதற்காகத்தான் புதிய அணையை கட்ட வேண்டும் என்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அதற்குப்பின் நீதிபதிகள், கர்நாடக அரசு அணை கட்டிக் கொள்ளலாம், ஆனால் தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரைத் தருவதற்கு மூன்றாவது நபரைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
கர்நாடகம் புதிய அணை கட்டிக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ள செய்தி, தமிழர்கள் தலையில் இடி விழுந்ததுபோல் வலியை உண்டாக்குகிறது! தமிழ்நாடு அரசின் இச்செயலை, காவிரி உரிமை மீட்புக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது!
கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் கபினி அணையிலிருந்தும் தண்ணீர் வெளியேறினால், அது தங்கு தடையின்றி நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். ஆனால், 1974ஆம் ஆண்டிலிருந்து 43 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குரியத் தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிடாமல் அட்டூழியம் செய்கிறது!
இப்பொழுது, கிருட்டிணராஜசாகர் மிகை நீர், கபினி மிகை நீர் அனைத்தையும் தமிழ்நாட்டின் எல்லைக்கு அருகே கர்நாடகம் மேகேத்தாட்டில் அணை கட்டித் தேக்கிக் கொண்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு விடமாட்டார்கள்!
இப்பொழுது காவிரியிலிருந்து கடலுக்குத் தண்ணீர் போவதே இல்லை. எப்பொழுதாவது பத்தாண்டுக்கு ஒருமுறை மிகை வெள்ளம் வரும் போது, மேட்டூர் அணை நிரம்பி கடலுக்குப் போகிறதே தவிர மற்ற காலங்களில் காவிரியிலிருந்து கடலுக்குத் தண்ணீர் போவதில்லை. கடலுக்கு போகும் காவிரி நீரைத் சேமிக்கத்தான் மேக்கேத்தாட்டு அணை என்று கர்நாடகம் கூறுவது பொய்! 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று காவிரித் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அதை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த கர்நாடக அரசும், அதை அமைக்க மறுத்த இந்திய அரசும், மேக்கேத்தாட்டு அணைக்கு மட்டும் கண்காணிப்புக் குழு அமைக்கும் என்றால், இது எவ்வளவு ஏமாற்று வாக்குறுதி என்பது புரியும்!

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கானது, மேகேத்தாட்டில் அணை கட்டலாமா வேண்டாமா என்ற வழக்காக மாற்றப்பட்டுள்ளது! அதுவும், இந்த மாற்றம் தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு நடந்துள்ளது!
தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் விலை போய் விட்டார்களோ என்ற ஐயப்பாடு வலுவாக எழுகிறது!
காவிரி டெல்டா மண்டலத்தை ஐட்ரோகார்பன் மற்றும் நிலக்கரி எடுக்கும் நிலமாக மாற்றிட தமிழ்நாடு அரசின் துணையோடு இந்திய அரசு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள பின்னணியில், புதிய அணை கட்ட உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் பெறும் முயற்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, காவிரி நஞ்சையை, வானம் பார்த்த புஞ்சையாக மாற்றுவது அவர்களது முதல் திட்டம் என்று தெரிகிறது! 
நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக மக்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கடலூர் – நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அறிவிக்கும் நடுவண் அரசின் திட்டத்தை, தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அண்மையில் அரசிதழில் வெளியிட்ட செயல், இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் கூட்டாகச் சேர்ந்துதான் காவிரி டெல்டாவை காலி செய்து, பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாற்ற முயல்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது!
தமிழ் மக்கள், தங்கள் தாயகத்தையும் வேளாண்மையையும் மண்ணோடு இணைந்த வாழ்வுரிமையையும் பாதுகாக்க அனைத்து ஊர்களிலும், வீதிக்கு வந்து மாபெரும் அறப்போராட்டங்கள் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொண்டு, வந்துள்ள பேராபத்தை முறியடிக்க அணியமாகுமாறு தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
www.kannotam.com
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.