ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மாணவி அனிதா தற்கொலை: எடப்பாடியும் நிர்மலா சீத்தாராமனும் பதவி விலக வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

மாணவி அனிதா தற்கொலை: எடப்பாடியும் நிர்மலா சீத்தாராமனும் பதவி விலக வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 
ஏகாதிபத்திய மனப்போக்குடன் இந்திய அரசு திணித்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு, தமிழ்நாட்டு பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவி அனிதாவின் உயிரைப் பலிவாங்கிவிட்டது!

அன்றாடம் மூட்டைத் தூக்கி உழைத்துக் குடும்பம் நடத்தும் அரியலூர் மாவட்டம் - குழுமூர் சண்முகத்தின் மகளான அனிதா, “மருத்துவராக வேண்டும்” என்ற நேர்மையான கனவுடன் கடுமையாக உழைத்து, +2 தேர்வில் 1176 மதிப்பெண் வாங்கினார். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான அவரது கட்ஆப் மதிப்பெண் 196.75 ஆகும்.

தமிழ்நாட்டில் வழக்கமாக +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை இவ்வாண்டு நடந்திருந்தால், எடுத்த எடுப்பிலேயே மாணவி அனிதா மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டிருப்பார்.

“நீட்” தேர்வில், அனிதா படித்த பாடத்திட்டத்திற்கு வெளியே நடுவண் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்ட கேள்விகள் கேட்கப்பட்டதால், மிகக்குறைவான மதிப்பெண்ணே அனிதாவால் வாங்க முடிந்தது.

தன் குடும்பத்தின் வறுமை நிலையை - அன்றாடம் கண்டு மனம் நொந்து தான் மருத்துவராகி அந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற உறுதியில் - ஊக்கமுடன் படித்து முதல் தரமான மதிப்பெண் வாங்கினார், அந்த ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவி!

இவ்வாண்டுக்கு “நீட்” தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசுத் தரப்பில் தன்னையும் இணைத்துக் கொண்டு அவ்வழக்கை வலுப்படுத்தினார். இந்த முயற்சிகளெல்லாம் பலன் அளிக்காத நிலையில், தனது குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய கனவு நொறுங்கியதும், மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களிலும் ஈட்டி பாய்ச்சியதைப் போல், அனிதாவின் தற்கொலை சொல்லொண்ணா துன்பம் தருகிறது!

இளம் மாணவி அனிதாவின் உயிரைக் காவு கொண்டவர்கள் இந்திய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சியாளர்களும் ஆவர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பொது அதிகாரப் பட்டியலில் “கல்வி” சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பொது அதிகாரப் பட்டியல் என்பது, மாநில அரசுக்கும் – நடுவண் அரசுக்கும் பொதுவான அதிகாரப் பட்டியலாகும். இதில் மாநில அரசும் சட்டம் இயற்றலாம், நடுவண் அரசும் சட்டம் இயற்றலாம்.

நீட் தேர்வு தமிழ்நாட்டில் தேவையில்லை என்றும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே கடைபிடித்து வரும் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையைத் தொடர வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை 2017 பிப்ரவரி மாதம், ஒரு மனதாக சட்ட முன்வடிவு நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தில்லிக்கு அனுப்பி வைத்தது. இதுவரை அந்த சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் தராமலும், நேரடியாக மறுப்புத் தெரிவிக்காமலும் கிடப்பில் போட்டு விட்டது இந்திய அரசு!

இதுபோல் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து, “பொதுப்பட்டியல்” தொடர்பாக, பல்வேறு துறைகள் சார்பாக நிறைவேற்றப்பட்ட 95 சட்ட முன் வடிவுகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. இவற்றில் தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்த 5 சட்ட முன் வடிவுகளும் அடங்கும்!

நடைமுறையில் “பொதுப்பட்டியல்” என்ற ஒன்று இல்லை என்ற நிலையை நரேந்திர மோடி அரசும், ஏற்கெனவே காங்கிரசு அரசும் ஏற்படுத்திவிட்டன.

“நீட்” தேர்வு குறித்து நாடாளுமன்றக் குழு வழங்கிய 92ஆவது பரிந்துரையில், “நீட்” தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று கூறியுள்ளது. நாடாளுமன்றக் குழுவின் இந்தப் பரிந்துரைப்படி, தமிழ்நாட்டின் சட்ட முன்வடிவுக்கு மோடி அரசு ஒப்புதல் வழங்காதது ஏன்?

தமிழ்நாடு அரசு இது தொடர்பாக சட்ட முன்வடிவை இயற்றி அனுப்பிவிட்டு, ஓர் அரசாணை இயற்றும் நிலைக்கு மாறியது ஏன்? இந்தக் கேள்வியை இவ்வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி ஏற்கெனவே கேட்டுள்ளார். அவ்வப்போது நரேந்திர மோடியுடன் கூடிக் குலாவிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் அவர்களது அமைச்சர்களும், “நீட்” தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வடிவை சட்டமாக்கித்தர வலியுறுத்தவே இல்லையா?

நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழ்நாட்டிற்கு இந்த ஓராண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க நடுவண் அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று உறுதியளித்தார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இயற்றிய அரசாணை குறித்த வழக்கு வந்தபோது, இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தமிழ்நாடு அரசின் சட்ட முடிவை நாங்கள் ஏற்கவில்லை என்று மனுத்தாக்கல் செய்தார்.

நரேந்திர மோடி அரசு, ஆதரவளிப்பது போல் நாடகமாடி கடைசியில் கழுத்தறுத்துவிட்டது! இதில் நிர்மலா சீத்தாராமன் பாத்திரம் எப்படிப்பட்டது என்று கண்டறிய வேண்டியுள்ளது.

வாக்குறுதி கொடுத்துவிட்டு - காலை வாரி விட்ட இந்திய அரசின் இந்த ஏமாற்று வேலையை விமர்சித்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்?

ஊர் ஊராக விழாக் கொண்டாடிக் கொண்டு, வாண வேடிக்கை நடத்தி வாய்ச்சவடால் அடித்துக் கொண்டு வருகிறார். “நீட்” தேர்வில் தமிழ்நாட்டை பலியிட்டதைப் போலவே, மாநில அரசின் வணிக வரி உரிமையைப் பறித்துக் கொண்ட ஜி.எஸ்.டி. வரியையும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார். அடுத்து, காவிரியில் தமிழ்நாட்டுக்கு பாதகம் செய்யும் வகையில் நடுவண் அரசு முன்வைக்கும் கட்டப்பஞ்சாயத்து குறித்தும் அனுசரனையாக இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அரசு, இன்னும் என்னென்ன தமிழ்நாட்டு உரிமைகளைப் பலியிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மாணவி அனிதாவின் சாவிற்கு முதன்மைப் பொறுப்பாளி இந்திய அரசு - இரண்டாவது பொறுப்பாளி தமிழ்நாடு அரசு! வாக்குறுதி கொடுத்து மோசடி செய்த நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், அந்த மோசடி நாடகத்தை அனுமதித்து தமிழ்நாட்டு உரிமையை பலியிட்ட எடப்பாடி பழனிச்சாமியும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்!

இன்றைக்குள்ள இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் போக்குகள், இதே நிலையில் நீடித்தால் தமிழ்நாட்டு மக்கள் குடியிருக்கும் உரிமையைக் கூட இழக்க வேண்டிய அவலம் ஏற்படலாம்! எனவே, எடப்பாடி பழனிச்சாமியும் நிர்மலா சீத்தாராமனும் பதவி விலகி தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய நம்பிக்கை அளிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் தங்களின் பழியைத் துடைத்துக் கொள்ளும் வகையில், போர்க்கால அவசரத்துடன் தமிழ்நாட்டிற்கு “நீட்” தேர்விலிருந்து நிரந்தர விலக்களிக்கக்கூடிய சட்டத்தை இயற்ற வேண்டும்.

மாணவி அனிதாவின் இழப்பு அவருடைய பெற்றோருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான பெரும் துயரம்! அனிதாவின் நினைவைப் போற்றும் அதே வேளையில், மாணவ மாணவிகள் மனம் உடைந்து விடாமல் இந்த நிலையை மாற்றிட - “நீட்” தேர்வை விரட்டியடிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்றும், மாணவர்கள் மட்டுமின்றி, ஒட்டு மொத்தத் தமிழ் மக்களும் “நீட்” தேர்வை விரட்டியடிக்கும் அறப்போராட்டத்தில் இறங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.