ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாடு தமிழர்களுக்கா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்கா?

தமிழ்நாடு தமிழர்களுக்கா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்கா?

இந்திய அரசு நிறுவனங்களில்
90% வேலை தமிழர்களுக்கு ஒதுக்கு!
10%க்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்று!

வேலை தரும் வரை வாழ்வூதியம் வழங்கு!

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பரப்புரை மற்றும் காத்திருப்புப் போராட்டம்
2017 அக்டோபர் 25 முதல் 31 வரை



வேலை இல்லாத் திண்டாட்ட வெங்கொடுமை ஒவ்வொரு தமிழ் இளைஞர் நெஞ்சத்திலும் தீயாய் எரிகிறது. உரிய கல்வியும் உயர் தொழில்நுட்பப் படிப்பும் இருந்தும் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது.

உயர்கல்வி கற்றும் அதற்குரிய வேலை கிடைக்காமல் அடிமாட்டு சம்பளத்திற்கு அகப்பட்ட வேலை பார்ப்போர் ஏராளம்!

வெள்ளப் பெருக்கு போல் வெளி மாநிலத்தவர் புகுந்து தமிழ்நாட்டு வேலைகளை வேட்டையாடிக் கொள்கிறார்கள்! இந்திய அரசு நிறுவனங்கள் - தனியார் துறை நிறுவனங்கள் அனைத்திலும் வெளி மாநிலத்தவர் 70லிருந்து 90 விழுக்காடு வரை வேலைகளை ஆக்கிரமித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களான தொடர்வண்டி(இரயில்வே)த் துறை, பி.எச்.இ.எல்., நெய்வேலி அனல்மின் நிலையம், ஆவடி - திருச்சி - அரவங்காடு படைத்துறைத் தொழிற்சாலைகள், அஞ்சல்துறை அலுவலகங்கள், எண்ணூர் - நரிமணம் - பனங்குடி பெட்ரோலிய ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், வங்கிகள், வருமான வரி - உற்பத்தி வரி - சுங்க வரி அலுவலகங்கள், தொழிற் பாதுகாப்புப் படை, சென்னை சாஸ்திரி பவன் - இராசாசி பவன் என அனைத்திலும் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்களே வேலை பார்க்கிறார்கள்.

பணி நியமனத்திற்காக நடைபெறும் அனைத்திந்தியத் தேர்வுகளில் ஏராளமான மோசடிகள்! இந்தியில் தேர்வெழுதுவோர்க்குச் சாதகமான பாகுபாடுகள்! கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டு அஞ்சல் அலுவலகங்களின் பணிக்காக நடந்த அனைத்திந்தியத் தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தோர் தமிழ்ப்பாடத்தில் 25க்கு 25 மதிப்பெண் பெற்றனர். இந்த மோசடிக்கு எதிராகக் குரல் கொடுத்த பின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2016 ஏப்ரலில் தமிழ்நாட்டு ஸ்டேட் பாங்கின் (SBI) 1,420 பணிகளுக்காக நடந்த தேர்வில் தமிழ்த்தேர்வு எழுதத் தேவை இல்லை என்று இந்திய அரசு அறிவித்தது. 2017 செப்டம்பரில் தமிழ்நாட்டில் 1,217 வங்கிப் பணியிடங்களுக்காக நடந்த தேர்வின்போது, பணியில் அமர்ந்த பின் 6 மாதங்களுக்குள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்த நிபந்தனையை இந்திய அரசு நீக்கியது.

2017 ஆகத்தில் தமிழ்நாட்டில் வருமான வரித்துறைக்குத் தேர்வான 208 பேரில் 10 பேர் மட்டுமே தமிழர்கள்! அதேகாலத்தில் வருமான வரி ஆய்வாளர் பணிக்குத் தேர்வான 86 பேரில் ஒருவர் மட்டுமே தமிழர்!

பெரம்பூர் இரயில்வே இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) பயிற்சி முடித்த 7,000 தமிழ் இளைஞர்கள் இரயில்வேயில் பல்லாண்டுகளாக பணி மறுக்கப்பட்டு வறுமையில் வாடுகிறார்கள். அவர்களில் 23 பேர் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆனால் தமிழ்நாட்டின் இரயில்வே தொழிற்சாலைகளிலும், இரயில் நிலையங்களிலும் இந்திக்காரர்களும் இன்னபிற வெளியாரும் பணி நியமனங்களில் 90 விழுக்காடு அளவுக்குச் சேர்க்கப்படுகிறார்கள்!

வெளி மாநிலங்களில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைக்கிறதா? இல்லை! தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதுதான் இந்தியத்தேசியத்தின் வேலைத் திட்டமா? தமிழர்களின் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கமே சிதைக்கப்பட்டு விட்டது.

மண்ணின் மக்களுக்கே வேலை வெளியாரை வெளியேற்று
 
இந்திய அரசே,
 
1. தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கு! அவற்றில் பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை உடனே வெளியேற்று!

2. பணி நியமனத்திற்கு அனைத்திந்தியத் தேர்வு நடத்தாதே! அந்தந்த மாநில வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் வேலைக்குத் தேர்வு செய்!
 
தமிழ்நாடு அரசே,
 
3. கர்நாடகத்தில் மண்ணின் மக்களுக்கு வேலை கொடுக்க சரோஜினி மகிசி அறிக்கைத் திட்டம் இருப்பதுபோல், தமிழ்நாட்டில் இந்திய அரசு - தனியார் துறை பணிகளில் மண்ணின் மக்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்க சட்டம் கொண்டு வா!

4. வெளி மாநிலத்தவர்களுக்குக் குடும்ப அட்டை வழங்காதே! வெளி மாநிலத்தவர் போலியாகத் தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று பெற அனுமதிக்காதே!

5. வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறாத தமிழ் இளைஞர்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை மாத வாழ்வூதியம் வழங்கு!

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை நடத்தும் பரப்புரைகளிலும், நடுவண் அரசு நிறுவனங்களின் முன் நடத்தும் காத்திருப்புப் போராட்டங்களிலும் கலந்து கொள்ள வாருங்கள் தமிழர்களே!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.