மயக்கும் மாநில சுயாட்சியும் தோற்றுப்போன கூட்டாட்சிக் கோட்பாடும்! தோழர் பெ. மணியரசன்.
மயக்கும் மாநில சுயாட்சியும் தோற்றுப்போன கூட்டாட்சிக் கோட்பாடும்! தோழர் பெ. மணியரசன். தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டில் “மாநில சுயாட்சிப்” பருவம் மறுபடியும் தொடங்கியுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மாநில சுயாட்சி பற்றிப் பேசி வருகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மாநில சுயாட்சி மாநாடு போட்டார். அந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் திருநாவுக்கரசரும் மாநில சுயாட்சியை ஆதரித்துப் பேசினார். சிபிஎம், சிபிஐ கட்சிகளின் தமிழ்நாட்டுத் தலைவர்களான ஜி. இராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் மாநில சுயாட்சியை வலியுறுத்திப் பேசிவருகின்றனர்.
தமிழ் இன உணர்ச்சியும் தமிழ்த்தேசியக் கருத்தியலும் இளைஞர்களை ஈர்த்து வரும் இக்காலத்திற்கேற்ற இன்னொரு இடைக்கால முழக்கமாக மாநிலத் தன்னாட்சி இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. 1970களில் திமுக மாநில சுயாட்சி மாநாடு போட்டு தமிழ்நாட்டிற்கென தனிக் கொடி ஏற்றியது. சிபிஎம் கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்டுக் கமுக்கக் கூட்டங்கள் (conclave) பலவற்றில் கலந்து கொண்டது. அதன்பிறகு மாநிலத் தன்னாட்சி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்ற முழக்கங்களை “அம்போ” என்று விட்டுவிட்டு அடுத்தடுத்து வாக்குச் சந்தைக்கு வாய்ப்பான வெவ்வேறு முழக்கங்களை மேற்கண்ட எல்லோரும் முழங்கினர்.
மாநில அதிகாரங்களைத் தொடர்ந்து பறித்து வந்த காங்கிரசு, பாசக கட்சிகளின் தலைமையில் கூட்டணி சேர்ந்து நடுவண் அரசில் அமைச்சர்களைப் பெற்றது திமுக. தமிழினத்திற்கு அதிகாரம் கேட்டவர்கள் தங்களுக்கான கங்காணி அதிகாரம் பெற்றனர். அதிகாரத்தில் பங்கு பெறாமல் காங்கிரசின் ஆட்சியைப் பாதுகாக்கும் கூட்டணியில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் இடையில் சேர்ந்திருந்தன. இப்போது ஒளிவு மறைவற்ற கூட்டணியைக் காங்கிரசுடன் ஏற்படுத்திக் கொள்ள சிபிஎம் ஆராய்ந்து வருகிறது.
பாரதமாதா பக்தியில் பாசக, காங்கிரசுக் கட்சிகளுடன் போட்டி போடும் அளவிற்கு இந்தியத் தேசியவாதிகளாய் உள்ளனர் சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! பாரதமாதாவுக்கோ, எந்நேரமும் அடங்காத அதிகாரப்பசி! அந்த அதிகாரப் பசிக்கான உணவு மாநில உரிமைகள்!
இன்றைக்கும் மாநில அதிகாரப் பறிப்புக் கட்சியான காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. நாளைக்குப் பாசக கூப்பிட்டால் அதன்பக்கம் தாவவும் திமுக அணியம்தான்!
இதுதான் திமுக கூட்டணியின் மாநிலத் தன்னாட்சி மகத்துவம்!
மாநில சுயாட்சியா? தேசியத் தன்னாட்சியா?
இது ஒரு பக்கம் இருக்க, மாநிலத் தன்னாட்சி என்ற சொற்கோவையே, இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடும் இவர்களின் மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. தேசிய இனத் தாயகத்திற்கான தன்னாட்சிதான் கோர வேண்டும். நமது தேசிய இனத்தாயகம் தமிழ்நாடு! தமிழ்நாட்டுத் தன்னாட்சி என்று கூறாமல், மாநிலத் தன்னாட்சி என்று கூறுவதன் பொருள் என்ன?
இந்தியாதான் தேசம், இந்தியர்தான் தேசிய இனம், இந்தியத் தேசியம்தான் ஒரே தேசியம், தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மண்டலம், அல்லது ஒரு பிராந்தியம். அந்தப் பிராந்தியப் பெயர் மாநிலம். மாநில சுயாட்சி என்று நாங்கள் கோருவதுகூட பிராந்திய சுயாட்சிதான்! தமிழ்த் தேசிய இனத்தின் தன்னாட்சியோ, தமிழ்த் தேசியத்தின் தாயகமான தமிழ்நாட்டின் தன்னாட்சியோ அல்ல என்று தில்லி எசமானர்களுக்கு இங்கிதமாக இவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள். அதனால்தான் இவர்கள் தமிழ்நாட்டுத் தன்னாட்சி என்று முழக்கம் வைக்காமல் உள்நோக்கத்துடன் “மாநில சுயாட்சி” என்று கூறுகின்றனர். அனைத்திந்தியாவிற்கும் கேட்பதெனில், தேசிய இனங்களின் தன்னாட்சி என்று கேட்க வேண்டும்.
இந்திய அரசை ஒரு கூட்டாட்சி (Federal State) அரசாக மாற்ற வேண்டும். அதன் காரணமாக மொழிவழி மாநிலங்களாக அமைக்கப்பட்டுள்ள தேசிய இனத் தாயகங்களுக்குத் தன்னாட்சி (Autonomy for Nationality Homelands) வழங்க வேண்டும். படைத்துறை, வெளியுறவுத்துறை, பண அச்சடிப்பு, தகவல்தொடர்பு போன்ற சிலவற்றைத் தவிர மற்ற எல்லா அதிகாரங்களும் தேசிய இனத் தாயகத்திற்கு வரவேண்டும்.
மாநில சுயாட்சி பேசுவோர் இப்படித் தெளிவாக தங்களின் முழக்கத்திற்கு வரையறை தரவில்லை. மாநில சுயாட்சி மாநாடு நடத்திய திருமாவளவன்கூட இவ்வாறு வரையறை செய்து தீர்மானம் நிறைவேற்றவில்லை.
“இந்திய தேசம் வலிமையாக இருக்க வேண்டும், இந்தியத் தேசம் வலிமையாக இருந்தால்தான் தலித்துகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் பாதுகாப்பு” என்று திருமாவளவன் அம்மாநாட்டில் பேசினார். அதே மாநாட்டில் பேசிய மு.க. ஸ்டாலின், இந்திய அரசு வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் எங்களுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்று பேசினார்.
இவர்கள் மாநில சுயாட்சி என்ற முழக்கத்தை நடுவண் அரசிடமிருந்து சில அதிகாரங்களையாவது கூடுதலாகப் பெறுவது என்ற உண்மையான நோக்கத்தில் முன்வைத்துப் போராடினால், தமிழ்த்தேசிய இறையாண்மை இலக்கை அடைவதற்கான ஒருபடி முன்னேற்றம் என்ற அளவில் அதை வரவேற்கலாம். ஆனால் அதிலும் அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதைத்தான் அவர்களின் கடந்தகால வரலாறும், இப்போதையப் பேச்சுகளும் வெளிப்படுத்துகின்றன.
இன்றையப் பருவத்திற்கேற்ப இடைக்கால முழக்கமாகப் போலி மாநில சுயாட்சி பேசுவோரைப் பற்றி இதுவரை பார்த்தோம்.
இனி உண்மையான கூட்டாட்சி பற்றியும் தேசிய இன அடிப்படையில் தன்னாட்சி பெற்ற இனங்கள் நடைமுறையில் உண்மையான சமத்துவம் பெற்றிருந்தனவா என்பது பற்றியும் பார்க்க வேண்டியது மிகமிக முக்கியம்.
உலகநாடுகளின் தன்னாட்சியும் – கூட்டாட்சியும்
உலகத்தில் தேசிய இனத் தன்னாட்சி கொண்ட கூட்டாட்சி அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்குச் சமத்துவம் வழங்காமல் தோற்றுவிட்டன. தேசிய இனங்களின் கூட்டாட்சிக் கோட்பாடு தோற்றுவிட்டதுதான் நடைமுறை உண்மை.
சனநாயக உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் முகாமையான பங்கு வகித்த நாடுகள் பிரித்தானியாவும் பிரான்சும்! இந்த ஆங்கிலேயரும் பிரஞ்சியரும் சேர்ந்து கூட்டாட்சி அமைத்த நாடு கனடா! பழம்பெரும் கூட்டாட்சி அது! கனடாவில் பிரஞ்சு மக்கள் தாயகம் கியுபெக்! இதர மாநிலங்களில் எல்லாம் ஆங்கிலேயர் மிகப் பெரும்பான்மையோர். கனடாவில் ஆங்கிலேயர் மக்கள் தொகை 56.9% பிரஞ்சியர் மக்கள் தொகை 21.3%
ஆங்கிலேயர், ஆங்கில ஆதிக்கம் கனடாவில் மேலோங்கி பிரஞ்சுக்காரர்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கப்பட்டனர். பிரஞ்சு கியுபெக் தனிநாடு கேட்டுப் போராடுகிறது. ஒரு முறை கியுபெக்கில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. கியுபெக் பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் ஒற்றுமைக்கான வாக்குகளை விட சிறிதளவு குறைந்து விட்டது. எனவே கியுபெக் தேசம் அமைவது தள்ளிப் போய்விட்டது. மீண்டும் ஒரு கருத்து வாக்கெடுப்புக்காக காத்திருக்கிறது கியுபெக். பிரஞ்சு மக்கள் நிம்மது இழந்து தவிக்கிறார்கள்.
பிரித்தானியாவில் ஆங்கிலேயர் பெரும்பான்மையினர். அடுத்த நிலையில் ஸ்காட்லாந்தியர், ஐரிஷ், வேல்ஸ் தேசிய இனங்கள்! வடக்கு அயர்லாந்து (ஐரிஷ்) விடுதலை கோரி நீண்டகாலமாகப் போராடி வருகிறது. ஐரிஷ் விடுதலை இயக்கமும் மக்களும் மிகக் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தனர். அந்த ஐரிஷ் மக்களுக்கு மாநில அரசு, நாடாளுமன்றம், அதற்கான சில அதிகாரங்கள் ஆகியவற்றை ஆங்கிலப் பெரும்பான்மை அரசு வழங்கியுள்ளது. ஆனாலும் விடுதலைக் கோரிக்கையை வடக்கு அயர்லாந்து கைவிடவில்லை.
கடந்த பத்தாண்டுகளில் ஸ்காட்லாந்து விடுதலைக் கோரிக்கை வேகம் எடுத்தது. அதன்பிறகு ஸ்காட்லாந்து மக்களுக்கான மாநில அரசு, நாடாளுமன்றம் அமைக்கப்பட்டன. ஆனாலும் தாங்கள் கோரும் சமத்துவம் கிடைக்கவில்லை என்றும் விடுதலை வேண்டும் என்றும் ஸ்காட்லாந்தியர்கள் போராடி வருகிறார்கள். அதற்காகக் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தில் விடுதலை குறித்துக் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குறைவான வாக்கு வேறுபாட்டில் ஸ்காட்லாந்து விடுதலைக்கோரிக்கை வெற்றிவாய்ப்பை இழந்தது. மற்றுமொரு கருத்து வாக்கெடுப்பை நோக்கி ஸ்காட்லாந்து காத்திருக்கிறது.
கியுபெக், ஸ்காட்லாந்து இரண்டும் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோற்றதற்குக் காரணம் அவ்விரு மாநிலங்களிலும் ஆங்கிலேயர்கள் அதிகமாகக் குடியேறியது என்கிறார்கள்.
ஐரோப்பாவின் இன்னொரு வளர்ச்சியடைந்த நாடான ஸ்பெயினிலிருந்து பிரிந்து செல்ல கட்டலோனியத் தேசிய இனமும் பாஸ்க் தேசிய இனமும் விடுதலை கேட்கின்றன. ஸ்பெயின் நாடு கட்டலோனியாவுக்கு 1932 ஆம் ஆண்டே தன்னாட்சி வழங்கிவிட்டது. கட்டலோனியாவில் வலுவான மாநில அரசு இருக்கிறது. அது பிரிந்து போவதற்கான கருத்து வாக்கெடுப்பை அண்மையில் (1.10.2017) நடத்தியது. அக்கருத்து வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று அறிவித்த ஸ்பெயின் நடுவண் அரசு, கட்டலோனியாவில் கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது.
வாக்குப்பெட்டிகளைப் பறித்துச் செல்வது, வாக்களிக்க வரிசையில் நின்ற மக்களை அடித்துக் கலைப்பது, பெண்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது, என வன்முறைகளை ஏவியது ஸ்பெயின் நடுவண் அரசு. அப்படி இருந்தும் வாக்களிக்க வாய்ப்பு கிடைத்த 43 விழுக்காடு கட்டலோனியர்களில் 92 விழுக்காட்டினர் கட்டலோனியாவின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.
இராக்கில் அமெரிக்க உதவியுடன் மாநிலத் தன்னாட்சி பெற்ற குர்தீசு அரசு இருக்கிறது. அது கடந்த செப்டம்பர் 25இல் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்தீசு மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவாகப் பெருவாரியான வாக்குகள் அளித்தனர்.
இவையெல்லாம் முதலாளிய நாடுகள். இவற்றில் இன ஒடுக்குமுறை, இனப் புறக்கணிப்பு இருக்கும். கம்யூனிச நாட்டில் எல்லா வகைச் சமத்துவமும் உண்டு, பாட்டாளி வர்க்க சர்வதேசியச் சமத்துவம் அதன் உயிர்நாடி என்பர் மார்க்சியர்கள்.
கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியம் 1990களில் பதினைந்து நாடுகளாகப் பிரிந்தது ஏன்? அதன்பிறகு கம்யூனிஸ்ட் செக்கஸ்லோவியா இரு நாடுகளாகவும் யுகோஸ்லோவியா ஆறு நாடுகளாகவும் பிரிந்தது ஏன்?
சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் என்பது நாட்டின் பெயர். எந்த இன அடையாளமும் அதில் இல்லை. மாநிலம் என்று இல்லாமல் ஒவ்வொரு தேசிய இனமும் ஒரு குடியரசு என்று அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறியது. ஒற்றை ஆட்சி மொழி கிடையாது. பதினைந்து மொழிகளும் ஆட்சி மொழி என்றது அதன் அரசமைப்புச் சட்டம். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) ஒவ்வொரு குடியரசுக்கும் உண்டு என்று அந்த அரசமைப்புச் சட்டம் கூறியது. முதலாளிகள், நிலக்கிழார்கள் என்று யாருமில்லை அங்கு!
பிரிந்துபோன லித்துவேனியா, லாட்வியா, எஸ்த்தோனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, உக்ரைன், பைலோரசியா, கிர்க்கிஸ்தான், கஜக்கஸ்தான் போன்ற தேசிய இனங்கள் என்ன கூறின, “எங்கள் மீது ரசியமொழி திணிக்கப்பட்டது, இரசிய இனமே மேலாதிக்கம் செலுத்தியது, இரசிய இனம் எங்களைச் சுரண்டியது என்பதுதான் அவர்களின் முதன்மைக் குற்றச்சாட்டு!
இவ்வாறு குற்றஞ்சாட்டியவர்களும் கம்யூனிஸ்ட்டுகள்! ஒரே ஒரு சான்று மட்டும் காட்டுவோம். கனடாவின் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உக்ரைன் ஆய்வு இருக்கையின் ஆய்வாளராக உள்ள ஸ்டீபன் வெளிச்சென்கோ எழுதியுள்ள “உக்ரேனிய மார்க்சியரும் இரசிய ஏகாதிபத்தியமும் 1918-1923 : நிகழ்காலக் கிழக்கு ஐரோப்பாவின் அயர்லாந்திற்கான முகவுரை (Ukrainian Marxists and Russian Imperialism 1918-1923 : Prelude to the Present in Eastern Europe’s Ireland) (http://www.irishleftreview.org – 23 /05 /2014.
உலகத்தில் கூட்டாட்சி சிறப்பாக நடைபெறவே இல்லையா? சிலநாடுகளில் சிறப்பாக நடைபெறுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) செர்மன் கூட்டாட்சிக் குடியரசு போன்றவற்றைச் சொல்லலாம். அவ்விரு நாடுகளும் பல்தேசிய இன நாடுகள் அல்ல. ஓர் இனப் பெரும்பான்மையும் ஒற்றை ஆட்சி மொழியும் கொண்டவை. அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற வட அமெரிக்காவில் மிகப் பெரும்பான்மையோர் ஆங்கிலேயர், ஆங்கிலம் பேசுவோர்! ஆங்கிலம் மட்டுமே அங்கு ஆட்சி மொழி! செர்மனியில் செர்மானியத் தேசிய இனமே மிகப் பெரும்பான்மையினர். அது அவர்களின் தாயகம். செர்மன் (டொயிச்) மொழி அங்கு ஒரே ஆட்சிமொழி.
வடஅமெரிக்கா, செர்மனி ஆகிய நாடுகளில் வரலாற்று அடிப்படையில் தனித்தனியே பல சிற்றரசுகள் இருந்தன. ஆனால் அவை அனைத்திலும் ஒரே மொழி, ஒரே இனம்! அவற்றை ஒருங்கிணைத்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்றும் செர்மனி என்றும் நாடுகள் உருவாக்கப்பட்டபோது அந்தந்த நாட்டுக்குள் ஒரு கூட்டாட்சி தேவைப்பட்டது. அதாவது ஒரே இனத்திற்கான நாட்டிற்குள் உள்கூட்டாட்சி!
வட அமெரிக்காவில் எற்கெனவே மாநிலங்களுக்கு உள்ள உரிமைகள் மைய அரசால் மெல்ல மெல்ல பறிக்கப்படுகின்றன என்ற குறைபாடுகள் எழுந்துள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது,
சுவிட்சர்லாந்தில் கூட்டாட்சி சிறப்பாகச் செயல்படவில்லையா என்று சிலர் கேட்கக் கூடும். அது மிகச் சிறிய நாடு. செர்மன், பிரான்சு, இத்தாலி நாடுகளின் எல்லையோரங்களில் பிரிந்திருந்த அம்மொழி பேசும் மக்கள் உருவாக்கிக் கொண்ட ஒரு புது நாடு. அது சராசரிக் கூட்டாட்சிக்கு எடுத்துக்காட்டாக அமைய முடியாது.
கனடா, பிரித்தானியா, ஸ்பெயின் இராக் முதலிய நாடுகளில் இருப்பவை வெவ்வேறு தேசிய இனங்கள் – வெவ்வேறு தேசிய மொழிகள்! அவற்றை விட அதிக எண்ணிக்கையில் இந்தியாவில் வெவ்வேறு தேசிய இனங்களும் தேசிய மொழிகளும் இருக்கின்றன. கனடா, பிரித்தானியா, ஸ்பெயின் நாடுகளில் இருப்பதைவிட மிகக் கொடிய முறையில் ஆரியச் சார்பில்லாத இனங்களும் மொழிகளும் ஒடுக்கப்படுகின்றன.
இந்தியாவில் மாநில அரசுகளிடம் இருந்த கொஞ்சநஞ்ச உரிமைகளும் அதிகாரங்களும் அன்றாடம் பறிக்கப்படுகின்றன. மொகாலயப் பேரரசில்கூட தில்லி ஆட்சியில் இவ்வளவு அதிகாரங்கள் குவிக்கப்பட்டதில்லை. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் தில்லியில் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மீண்டும் இப்போது குவிக்கப்பட்டுவிட்டன.
இந்தியா என்ற நாட்டை ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனி 1773 இல்தான் பீரங்கி முனையில் உருவாக்கி முடித்தது. ஆங்கிலேயரின் வேட்டையாடலுக்கு முன் இந்தியாவில் இன்றுள்ள தேசிய இனங்கள் தங்களுக்கான சொந்த நாடுகளையும் அரசுகளையும் பெற்றிருந்தன. ஆங்கிலேய வணிக நிறுவனம் உருவாக்கிய இந்தியாவில் அதிகப் பலன் பெற்றது ஆரிய இனத்தவர்கள்!
இன்று ஆரிய இந்தியாவின் அரசியல் பெயர் பாரதம்!
ஏன் கூட்டாட்சி தோற்றது ?
கூட்டாட்சியிலுள்ள பெரும்பான்மை தேசிய இனம் தனது மொழியையும் மேலாதிக்கத்தையும் தனது தனித்த அடையாளத்தையும் திணிக்காமல் – முன்னிலைப்படுத்தாமல் எந்தக் கூட்டரசும் செயல்பட்டதில்லை. ஒரு தேசம் அல்லது நாடு என்றிருந்தால் அதற்கு ஒரு ஒற்றை வரலாற்றுப் பின்னணியும் அதற்குரிய வரலாற்றுத் தத்துவமும்தான் எல்லா இடத்திலும் முன்வைக்கப்படுகின்றன. கூட்டாட்சியிலுள்ள எல்லா தேசிய இனங்களின் அதிகாரமும், மொழியும், அடையாளமும் சமமாக எந்த நாட்டிலும் வைக்கப்பட்டதில்லை. இந்தியா எனில் ஆரிய வரலாறு, ஆரியத் தத்துவமான வேத இதிகாசக் கொள்கைகள், ஆரிய மொழிகளான சமற்கிருதம், இந்தி, ஆரியவர்த்தமான மத்திய இந்தி மாநிலங்கள் ஆகியவைதான் மேலாதிக்கத்திலும் முன்னிலையிலும் வைக்கப்படுகின்றன. இது போல்தான் இரசிய, ஆங்கில, ஸ்பானிஷ் மேலாதிக்கங்கள் அந்தந்தக் கூட்டாட்சியில் நிலவின. இந்த மேலாதிக்கங்களுக்கு முதலாளியம், கம்யூனிசம் என்ற வேறுபாடு இல்லை.
தமிழ்த் தேசிய இறையாண்மை
இந்தியாவில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் இறையாண்மை வேண்டும். மாநில சுயாட்சி அல்ல. தமிழ்நாட்டிற்குத் தமிழ்த் தேசிய இறையாண்மை வேண்டும்.
தமிழ் மொழி, தமிழ் இன உணர்ச்சி இரண்டையும் பதவி அரசியலுக்கும் பண வேட்டை அரசியலுக்கும் பயன்படுத்திக் கொண்ட திமுக இப்போது எழுந்துவரும் தமிழ் இன உணர்ச்சியை மீண்டும் தனது தன்னல அரசியல் பக்கம் திருப்பிவிட மாநில சுயாட்சி பேசுகிறது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்குரிய இலட்சியமில்லாத இந்தியத் தேசிய வாதக் கம்யூனிஸ்ட்டுகளும் மற்றவர்களும் கரைசேர இடைக்கால உத்தியாக மாநில சுயாட்சியைக் கையிலெடுக்கின்றன. இந்திய ஏகாதிபத்தியம் தமிழ்நாட்டில் தனது கடைசிப் பாசறைகளாக திராவிடக் கட்சிகளையும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளையும்தான் நம்பி இருக்கின்றது.
தமிழர்களின் உரிமை முழக்கம் தமிழ்த் தேசிய இறையாண்மை!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment