பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம்! தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் நேரடிப் பொறுப்பிலுள்ள “நிதி ஆயோக்” என்ற இந்திய மறுசீரமைப்பு ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் இரமேஷ் சந்த், வேளாண்மையை மாநில அதிகாரப் பட்டியலிலிருந்து நடுவண் அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவ்வாறு மாற்றுவதன் மூலம் அனைத்திந்திய அளவில் பல மாநிலங்களுக்கிடையே வேளாண் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைக்கும், வேளாண் பொருட்களின் விலையை சீராக வைத்திருக்கலாம், கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உருவாகும், பன்னாட்டுத் தொழில் நுட்பங்களை நடுவண் அரசின் மூலம் வேளாண்மையில் பயன்படுத்தலாம், வேளாண்மையை நவீனப்படுத்தலாம் என்றெல்லாம் அவர் கூறியுள்ளார்.
இப்பொழுதுள்ள சட்டப்படி, இந்தியா முழுவதும் ஒரே உணவு மண்டலம்! வேளாண் விளை பொருட்களை இந்தியா முழுவதும் விற்பதற்கு தடைச் சட்டம் எதுவுமில்லை. எனவே, இந்தியா முழுவதும் வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக நடுவணரசிடம் வேளாண்மையைக் கொண்டு செல்ல புதிய தேவை எழவில்லை!
வேளாண் உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும், இந்திய அரசு இலாப விலைக்குக் கொள்முதல் செய்யும் திட்டம் எதையும் இரமேஷ் சந்த் கூறவில்லை. நடுவணரசிடம் வேளாண்மை போனால், வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு இப்பொழுதுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையைவிடக் கூடுதல் விலை கிடைக்கும் என்று இரமேஷ் சந்த் கூறுகிறாரே தவிர, அதற்கான வழிவகைகள் எதையும் அவர் கூறவில்லை!
வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஏற்கெனவே இந்திய அரசின் கையில்தான் இருக்கிறது. இந்திய அரசு அடிமாட்டு விலைக்கு வேளாண் விளை பொட்களுக்கு விலை நிர்ணயிக்கிறது. இதனால்தான், உழவர்கள் கடனாளியாகி இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இப்பொழுது விலை உயர்வுக்குப் பரிந்து பேசுவதைப்போல் பாசாங்கு செய்கிறார் நடுவண் அரசு அதிகாரி! நடுவண் அரசு வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை நிர்ணயிக்க மாநில அரசுகள் தடுத்தனவா? அனைத்திந்திய சந்தையில் விலை கூடுதலாகக் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைக் காட்டுகிறார் - அறுக்கப் போகும் ஆட்டிற்குத் தழையைக் கொடுத்து அழைத்துச் செல்வதைப் போல!
முதலில், வேளாண்மையை தில்லி அதிகாரத்திற்குக் கொண்டு போக வேண்டும். அடுத்ததாக, விளை நிலங்களை தில்லி அதிகாரத்தின்கீழ் கொண்டு போக வேண்டும். தனிநபர் நிலம் விற்று வாங்குவதையும் தில்லி அதிகாரத்தின்கீழ் கொண்டு செல்ல வேண்டும். அதன்பிறகு, வேளாண் உற்பத்தியில் வணிகக் கொள்ளைக்காக பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கும் மரபீனி மாற்று விதை, மறுபடியும் முளைக்காத விதை போன்ற பல்வேறு விதைகளையும், பூச்சி மருந்துகளையும், நவீன சாகுபடி முறைகளையும் தாராளமாகத் திணிக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக, விளை நிலங்களை பெருங்குழும நிறுவனங்கள் வாங்குவதற்கும் ஓ.என்.ஜி.சி. போன்ற இந்திய அரசு நிறுவனங்கள் தங்குதடையின்றி வேட்டையாடுவதற்கும் தாராளமாகக் கதவு திறந்துவிடும் வகையில் – நிலத்தின் மீதான அதிகாரத்தையும் நடுவணரசுக்குக் கொண்டு போக வேண்டும். இதுதான் இந்திய அரசு மறைத்து வைத்துள்ளத் திட்டம்!
இப்பொழுது நடுவண் அரசு திணிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் மரபீனி மாற்று விதைகளை, சில மாநில அரசுகள் தடுத்து வைத்துள்ளன. அதேபோல், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதிலும் சில மாநில அரசுகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. இவற்றையெல்லாம் முறியடித்து, ஒற்றை அதிகாரத்தை தில்லியில் வைத்துக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களையும், சாகுபடியையும் திறந்துவிட மோடி அரசு கடும் முயற்சி செய்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய நாட்டு நிறுவனங்களும் தங்கள் தொழிலுக்காக விளை நிலங்களை வாங்குவதற்கு நிலம் கையகப்படுத்தித் தரும் பொறுப்பு அரசிடமிருக்க வேண்டியதில்லை, அந்தந்த நிறுவனங்களே உழவர்களிடம் நேரடியாக விலை பேசி வாங்கிக் கொள்ளலாம் என்ற திட்டத்தை அண்மையில் வெளியிட்டார்கள்.
இதன் தொடர்ச்சியாகத்தான் வேளாண்மையை நடுவணரசு அதிகாரத்திற்குக் கொண்டு போகும் ஆலோசனையை, நரேந்திர மோடியின் குரலாக செயலாற்றி வரும் இரமேஷ் சந்த் கூறியுள்ளார். இப்பொழுது இரமேஷ் சந்த் கூறியுள்ள ஆலோசனை சட்டமானால், இந்தியா முழுவதுமுள்ள வேளாண்மையும் உழவர்களும் காலப்போக்கில் பன்னாட்டு நிறுவனங்களிடம் தங்கள் நிலங்களை ஒப்படைத்துவிட்டு, ஊரைவிட்டு வெளியேறி நகரங்களில் கூலி வேலை தேடும் அவலம்தான் மிஞ்சும்!
எனவே, வேளாண்மையை நடுவணரசு அதிகாரத்திற்குக் கொண்டு செல்லும் ஆலோசனையை கருத்தளவில் இருக்கும்போதே தடுக்க வேண்டிய பொறுப்பு, உழவர்களுக்கு மட்டுமல்ல, உணவு உண்ணும் அனைத்து மக்களுக்கும் தாயக மண்ணை நேசிக்கும் அனைவருக்கும் இருக்கிறது!
இந்தத் திட்டம் செயலுக்கு வந்தால், இந்தியா முழுவதும் உழவர் போராட்டங்களை மோடி அரசு எதிர் கொள்ள வேண்டியிருக்கும். ஏற்கெனவே பணமதிப்புமாற்றம், ஜி.எஸ்.டி. போன்றவற்றால் ஓட்டாண்டியாகியுள்ள அனைத்துப் பகுதி மக்களும், உழவர்களும் ஒன்றுசேர்ந்து மோடி அரசுக்கு எதிரான உரிமைப் போரை நடத்துவார்கள் என்பதை புரிந்து கொண்டு, மோடி அரசு இந்த ஆலோசனையை ஏற்கக் கூடாது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment