துரோகத் திட்டங்களைத் தூக்கியெறிந்து காவிரி காக்கும் மாநாடு! தஞ்சைக்குத் திரளுங்கள் தமிழர்களே! காவிரி உரிமை மீட்புக் குழு அழைப்பு!
துரோகத் திட்டங்களைத் தூக்கியெறிந்து காவிரி காக்கும் மாநாடு! தஞ்சைக்குத் திரளுங்கள் தமிழர்களே!
காவிரி உரிமை மீட்புக் குழு அழைப்பு!
நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் சராசரி அளவைவிடக் கூடுதலாகப் பொழிந்து, கர்நாடக அணைகளில் கடந்த சூன் மாதம் முதல் கணிசமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்த போதும், கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்து விடவில்லை.
சூன் - 10 ஆ.மி.க. (டி.எம்.சி.), சூலை – 34 ஆ.மி.க., ஆகத்து 50 ஆ.மி.க., செப்டம்பர் 40 ஆ.மி.க. என 134 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் 38 ஆ.மி.க. மட்டுமே கர்நாடகம் திறந்து விட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வில் காவிரி வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இந்த அவலம் நிகழ்கிறது. இதனால் 6ஆவது ஆண்டாகத் தொடர்ந்து குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் தண்ணீர் திறக்கவில்லை. சம்பா சாகுபடிக்கும் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கவில்லை. வீராணம் ஏரி வறண்டு, சென்னைக்குக் குடிநீரும் கொண்டு போக முடியவில்லை.
கர்நாடக அணைகள் நிரம்பி, அணைகளுக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டபோது, மிகை வெள்ள நீரை வேறு வழியின்றிக் கர்நாடகம் இப்போது திறந்துவிட்டது. அக்டோபர் 2-ஆம் நாள் மேட்டூர் அணை திறக்கும் அவலம் ஏற்பட்டது.
மத்திய அரசுடன் மிகவும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் செயல்படும் தமிழ்நாடு அரசு, காவிரியில் சட்டப்படி கர்நாடகம் திறக்க வேண்டிய தண்ணீரைத் திறந்துவிட நடுவண் அரசு மூலம் உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை. நேரடியாகக் கர்நாடக அரசுடன் பேசி அழுத்தம் கொடுத்துத் தண்ணீர் பெறவும் முடியவில்லை.
தமிழ்நாட்டிற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாப்புமில்லை; அரசியல் பாதுகாப்பும் இல்லை. அனாதைபோல் உள்ளோம்!
கொடுமைகளின் கொடுமுடிபோல், இந்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரஞ்சித்குமார் 20.09.2017 அன்று காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பேசிய வாதங்கள் அமைந்தன.
“காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அப்படியே செயல்படுத்த முடியாது. அதில் நடுவண் அரசுக்கு 12 சந்தேகங்கள் இருக்கின்றன; மேலும் பல குழப்பங்கள் இருக்கின்றன. அந்த இறுதித் தீர்ப்பில் நீக்க வேண்டியவற்றை நீக்கி, சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து, திருத்தங்கள் பல செய்துதான் செயல்படுத்த முடியும். அந்த வேலையை நாடாளுமன்றம் பார்த்துக் கொள்ளும்” என்றார் ரஞ்சித் குமார்.
இந்திய அரசு வெளிப்படையாகவே காவிரித் தீர்ப்பைக் காலி செய்யும் முடிவில் இருப்பதைத் தெரிவித்த பிறகும், தமிழ்நாடு அரசு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை; தற்காப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கர்நாடக அரசின் வழக்கறிஞர் பாலி நாரிமன் உச்ச நீதிமன்றத்தில், “தமிழ்நாட்டிற்கு 192 ஆ.மி.க. தண்ணீர் தர முடியாது; 100 அல்லது 102 ஆ.மி.க. தண்ணீர்தான் தர முடியும்; அதையும் மாதாமாதம் தர முடியாது. ஆண்டுக்கு ஒரு தடவைதான் தர முடியும்” என்று வாதிட்டார்.
காவிரி வழக்கில் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைக்காதோ, வெட்டிச் சிதைக்கப்பட்ட கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புதான் கிடைக்குமோ என்ற அச்சம் தமிழ் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில், “வஞ்சக வலையறுக்கும் காவிரிக் காப்பு மாநாடு” – தஞ்சை காவேரி திருமண மண்டபத்தில் 06.10.2017 வெள்ளி பிற்பகல் 3 மணியிலிருந்து 8.30 மணி வரை நடக்கிறது.
12 மாவட்டங்களில் 24,50,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் – 20 மாவட்டங்களில் நான்கரை கோடி மக்களுக்குக் குடிநீர் – காவிரி நீர்தான்!
எல்லா அதிகாரங்களையும் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுகிறது; காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் அதைச் செயல்படுத்த மறுக்கிறது. தமிழ்நாடு அரசோ, காவிரி உரிமையைக் காப்பதில் கவலை அற்று, அக்கறையற்று, செயலற்று காலத்தை ஓட்டுகிறது.
காவிரி உரிமைப் போராட்டத்தில் கடைசி விளிம்பில் நிற்கிறோம். புதிய உத்திகளையும் போராட்டத் திட்டங்களையும் வகுக்க வேண்டும். தஞ்சை மாநாட்டில் எந்த அளவு அதிகம் மக்கள் திரள்கிறார்களோ, அந்த அளவு இந்திய அரசின் கவனமும், தமிழ்நாடு அரசின் கவனமும் ஈர்க்கப்படும்! திருப்பங்கள் உண்டாக்கலாம்! வாருங்கள், வாருங்கள் என்று காவிரி உரிமை மீட்புக் குழு உங்களை அழைக்கிறது!
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kannottam.com
Leave a Comment