ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“பா.ச.க.வை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்!” தஞ்சையில் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் பங்கேற்போடு நடந்த காவிரிக் காப்பு மாநாட்டில் தீர்மானம்!

“பா.ச.க.வை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்!” தஞ்சையில் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் பங்கேற்போடு நடந்த காவிரிக் காப்பு மாநாட்டில் தீர்மானம்!
காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை காலி செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடி வரும் மத்திய பா.ச.க. அரசைக் கண்டித்தும், ஆறுகள் இணைப்பு மோசடி நாடகத்தைப் புறந்தள்ளக் கோரியும் - காவிரி உரிமைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் “காவிரி உரிமை மீட்புக் குழு” சார்பில், தஞ்சையில் நேற்று (06.10.2017) மாலை, “வஞ்சக வலையறுக்கும் காவிரிக் காப்பு மாநாடு” பல்லாயிரக்கணக்கான உழவர்கள் பங்கேற்புடன் எழுச்சியுடன் நடைபெற்றது.

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை காவேரி திருமண மண்டபத்தில், பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கி நடைபெற்ற மாநாட்டிற்கு, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாபுரம் சி. முருகேசன் தலைமை தாங்கினார்.

மாநாட்டின் தொடக்கத்தில், பாடகர்கள் செங்கிப்பட்டி பால்ராசு, அம்மன்பேட்டை இளையராசா ஆகியோர் உழவர் எழுச்சிப் பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து, முருகன்குடி தென்றல் கலைக் குழுவினரின் எழுச்சிமிகு பறையாட்ட நிகழ்வும், மாணவர்கள் தஞ்சை மூ. அனிருத்தன், சிதம்பரம் அரண் ஆகியோரின் சிறப்புமிகு சிலம்பாட்டமும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இதனையடுத்து, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன் தொடக்கவுரையாற்றினார். முன்னதாக, த.வி.ச. தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. ப. செகதீசன் வரவேற்புரையாற்றினார்.

அதன்பிறகு நடைபெற்ற கருத்தரங்கில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் போராசிரியர் த. செயராமன் அவர்கள், “கனிம வேட்டையிலிருந்து காவிரிப்படுகையைக் காப்பது எப்படி?” என்ற தலைப்பிலும், “காவிரி இறுதித் தீர்ப்பும் உச்ச நீதிமன்ற வழக்கும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் பொறியாளர் இரெ. பரந்தாமன் அவர்களும், “கட்டுப்படியான விலையா? இலாப விலையா?” என்ற தலைப்பில் தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ. திருநாவுக்கரசு அவர்களும், “பன்னாட்டு ஆற்றுநீர்த் தீர்வுகளும் காவிரி நீர் மறுப்பும்” என்ற தலைப்பில் சமவெளி விவசாயிகள் சங்கத் தலைவர் பொறியாளர் சு. பழனிராசன் அவர்களும் கருத்துரையாற்றினர்.

அதன்பின், ஓ.என்.ஜி.சி.யின் கொடுங்கரங்களிலிருந்து கதிராமங்கலத்தைக் காப்பதற்கான மக்கள் போராட்டத்தில் சிறை சென்ற பேரா. த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. க. விடுதலைச்சுடர், திரு. தர்மராசன் உள்ளிட்ட 18 பேருக்கும், கதிராமங்கலம் பெண் போராளிகளுக்கும் மாநாட்டு மேடையில் துண்டணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. காவிரிக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி மன்னார்குடி விக்னேசின் பெற்றோர் திரு. வி. பாண்டியன் – திருமதி. பா. செண்பகலட்சுமி ஆகியோர்க்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் துண்டணிவித்து சிறப்பு செய்தார். மூத்த வழக்கறிஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள் மாநாட்டிற்கு நேரில் வருகை தந்து வாழ்த்துரை வழங்கினார்.

அதன்பின் தொடங்கிய நிறைவரங்கில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைமை ஆலோசகர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவர் வழக்கறிஞர் த.சு. கார்த்திகேயன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. குழ. பால்ராசு, இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, மீத்தேன் திட்ட எதிர்ப்பியக்கம் திரு. கோ. ஜெய்சங்கர், வேதாரணியம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி.வி. இராசன், மனிதநேய சனநாயகக் கட்சி கொள்கை விளக்க அணிச் செயலாளர் திரு. காதர் பாட்சா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காவிரிச் சிக்கலில் இந்திய அரசு தமிழர்களுக்கு இனப்பாகுபாடு காட்டுகிறது – அதற்குக் காரணமாக உள்ள பா.ச.க.வைவிட்டு தமிழ் மக்கள் வெளியேறுவது குறித்த சிந்திக்க வேண்டுமென்ற மாநாட்டின் முதன்மைத் தீர்மானத்தை தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு. கி. வெங்கட்ராமன் முன்மொழிந்தார்.

காவிரி நீரைப் பெறுவதில் அக்கறையற்று இருக்கும் தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும், ஆறுகள் இணைப்பு மோசடி நாடகத்தை தமிழ் மக்கள் புறந்தள்ள வேண்டுமென்றும், காவிரிப் படுகையை விட்டு ஓ.என்.ஜி.சி. வெளியேற வேண்டும் – கடலூர், நாகை மாவட்டங்களை அழிக்கும் பெட்ரோலிய மண்டலத்திட்டத்தைக் கைவிட வேண்டும், எவ்வித பாகுபாடும் வரம்புமின்றி உழவர்களின் அனைத்து வேளாண் கடன்களையும் தள்ளுபடி செய்வதோடு உழவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும், இச்சிக்கல்களுக்கான தீர்வு கோரி நடக்கும் மக்கள் அறப்போராட்டங்களை தமிழ்நாடெங்கும் பரவலாக்க வேண்டுமென்றும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. ச. கலைச்செல்வன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் திரு. மூ.த. கவித்துவன், மகளிர் ஆயம் செயல்பாட்டாளர் திருமதி. செம்மலர் ஆகியோர் இத்தீர்மானங்களை முன்மொழிந்தனர். பலத்த கையொலி எழுப்பி உழவர்களும் உணர்வாளர்களும் தீர்மானங்களை வரவேற்றனர்.

நிறைவில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன் அவர்கள் நிறைவுரையாற்றினார். திரு. இலெ. இராமசாமி நன்றி கூறினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன் ஆகியோர் மாநாட்டு நிகழ்வுகளை நெறிப்படுத்தினர்.

மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து உழவர்களும் உணர்வாளர்களும் ஊர்திகளில் திரண்டு வந்திருந்தனர். மாநாட்டு நிகழ்வுகள் காவிரி உரிமை மீட்புக் குழுவின் முகநூல் பக்கமான Facebook.com/KaveriUrimai தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.