ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

குமரியைப் புயல் மட்டுமா தாக்கியது?

குமரியைப் புயல் மட்டுமா தாக்கியது?
பார்த்த இடமெல்லாம் பச்சைப்பசேல் என்று போர்த்திக் கிடக்கும் எழிலார்ந்த தொன்மைத் தமிழ் மண் குமரி மாவட்டம். வளமானநிலம், ஆழமானகடல்! எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள்!

ஒக்கிப்புயல் தலை கீழாகப் புரட்டிப் போட்டு விட்டது அம்மாவட்டத்தை! 30.11.2017 விடியற்காலை 6.30 மணி அளவில் பெரும் சூறைக் காற்றும் மழையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பேயாட்டம் ஆடி விட்டது.

தென்னை, வாழை, இரப்பர் எனப் பலன்தரும் மரங்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டு தரையில் கிடக்கின்றன. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் குளச்சல், சின்னமுட்டம், தேங்காய்ப்பட்டணம், ஜேப்பியார் மீன்பிடித் துறைமுகங்கள் சிதைந்து, சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன. காற்றை விட வேகமாகக் கடலில் ஓடிய படகுகள் தகர்ந்து, மரக்கட்டைகளாகிவிட்டன. முழுவதும் மூழ்கிப்போன படகுகள் பல.

அலை அடக்கி, காற்றடக்கி, மனித ஆற்றலின் மகத்துவங்களாக அரபிக்கடலில் ஆயிரம் கடல்மைல்களுக்கு அப்பால் கூட மிதந்து மீன்குவித்துத் திரும்பும் மீனவர்கள் பலரை, பிணங்களாக அலைகள் அடித்துவந்தன. மாலத்தீவு, இலட்சத்தீவு, மராட்டியம், குசராத் என தொலை தூரக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் பலரைப்புயல் அடித்துச் சென்றது. அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கதி என்ன என்றே தெரியவில்லை. குமரிக் கடற்கரையெங்கும் அழு குரல்கள்; பெண்களின் ஒப்பாரி ஓசைகள்!

கல் நெஞ்சத்தாரையும் கலங்கவைக்கும் மனித ஓலங்கள்; அங்கங்கே கூட்டம் கூட்டமாகத் துக்கப் பகிர்வுகள்! ஆனால் இந்தியாவின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் நெஞ்சத்தில் குமரிமாவட்டப் பேரழிவுகளும் மீனவர் அவலங்களும் சிறுதாக்கத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. ஓர் இரங்கல் செய்தி, ஓர் ஆறுதல் செய்தி அவரிடமிருந்து வரவில்லை. அவரது கட்செவி (டுவிட்டர்) கூட குமரிப் பேரழிவைக் காணாமல் முகம் திருப்பிக் கொண்டது.

தொடக்கத்தில் வந்து படம் காட்டி விட்டுப் போய்விட்டார் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

தேசியப் பேரிடர் என்று அறிவித்திட, குமரியில் இப்பொழுது ஏற்பட்டுள்ள அழிவுகள் போதாது, இன்னும் அதிகமாகப் பேரழிவுகள் நடந்திருக்க வேண்டும் என்கின்றனர் இந்திய அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும்! எவ்வளவு பெரிய மனிதநேயம்! இதில் கூடவா இனப்பாகுபாடு!

முப்பத்தாறு மணிநேரத்திற்கும் முன்பாகவே புயல் முன்னறிவிப்பு செய்யக் கூடிய அளவிற்கு தொழில்நுட்ப ஆற்றல் வளர்ந்துள்ளது. இந்தியாவிடம் அக்கருவிகள் இருந்தும் 29.11.2017 மாலை தான் மறு நாள் காலையில் வரப்போகும் புயல் பற்றி எச்சரிக்கை செய்தார்கள் இந்தியவானிலை ஆய்வகத்தினர். ஆனால் தமிழ்நாட்டின் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப்ஜான், இந்தியவானிலை ஆய்வக எச்சரிக்கைக்கு முன்னதாகவே குமரிப்புயலின் பேரழிவு ஆற்றல் பற்றி எச்சரித்தார். அது எல்லாமக்களுக்கும் போய்ச் சேரவில்லை.

ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலும் சென்று தேடக்கூடிய புதிய கப்பல்கள் இருந்தும் அவற்றை அனுப்பவில்லை. அறுபது கிலோமீட்டர் வரை சென்று தேடிவிட்டு, மீனவர்களைக் காணவில்லை என்று திரும்பின நடுவண் அரசின் படகுகள்.  நாகர்கோயில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நடுவண் அரசில் அமைச்சராகவும் உள்ள பொன். இராதாகிருட்டிணன், புயல் தாக்கியபோது வெளி நாட்டில் இருந்தார். விரைந்து திரும்பவில்லை. தாமதமாக வந்தும் மனிதப் பேரழிவுக்குள்ளான மீனவர் கிராமங்களுக்குச் செல்லவில்லை. ஏன் இந்தப் புறக்கணிப்பு?

கடலோர மீனவ மக்கள் அதானிப் பெருங்குழுமத்தின் வேட்டைக்காக உருவாக்கப்பட்ட இனையம் துறைமுகத்திட்டத்தை எதிர்த்துப் போராடினார்கள் என்பதற்கு எதிரான பழிவாங்கலா? அல்லது அவர்கள் கிறித்துவ மக்கள் என்பதால் ஏற்பட்ட மனக்கசப்பா?  நடுவண் ஆட்சியாளர்கள் குமரிப் புயல் துயர் துடைப்பில், மீட்புப் பணியில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பதை தமிழர்களுக்கு எதிரான அவர்களின் நெஞ்சக வஞ்சத்தின் தொடர்ச்சி என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் பேரழிவு நடந்து 12 நாள்வரை அசையாமல் இருந்துவிட்டு 12.12.2017 அன்று தான் குமரி அழிவுகளைப் பார்வையிட வந்தார். அதுவும் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் கிராமங்களில் சந்திக்காமல் தூத்தூர் கல்லூரி வளாகத்திற்குள் பிரதிநிதிகளை வரவழைத்து மனுக்கள் வாங்கினார்.

கடலுக்குள் வெறும் உப்புத் தண்ணீரைக் குடித்துக்கொண்டு நான்கு நாட்களுக்கு மேல் ஒருவர் உயிர் வாழ முடியாது என்ற நிலையில், புயல் கடந்து பத்துநாட்களுக்குப் பிறகு தனது போர்க்கப்பலை அனுப்பி மீனவர்களை மீட்போம் என்கிறார்கள் இந்திய - தமிழக ஆட்சியாளர்கள்! பொன். இராதாகிருட்டிணன் அதற்காக இந்திய அரசுக்கு நன்றி வேறு தெரிவிக்கிறார்.

சாதாரணமாக 250 கடல் மைலுக்கு மேல் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களைத் தேடுவதற்காகச் சென்ற இந்திய அரசின் கடலோரக் காவல்படையினர் மற்றும் கப்பல்படையினர் 60 கடல்மைலுக்கு மேல் செல்ல முடியாது என்று திரும்பிவிட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். கடலில் படகு மூழ்கித் தத்தளித்துக்கொண்டிருந்த போது, அந்தப் பக்கம் வந்த இந்திய அரசின் கப்பற் படை தங்களை பார்த்து விட்டும் கண்டுகொள்ளாமல் சென்றது என தப்பிவந்த தமிழ்நாட்டு மீனவர்கள் ஊடகங்களிடம் கூறியது பெரும்அதிர்ச்சியளித்தது.

புயல் அறிவிப்பில் தாமதம், துயர் துடைப்பில் தாமதம் என நடக்கின்ற ஒவ்வொன்றும் இந்திய அரசின் வெறும் அலட்சிய செயல்பாடுகளாக மட்டும் தெரியவில்லை - தமிழினத்தின் மீதான இனப்பாகுபாட்டு வன்மத்தின் கோரமான வெளிப்பாடாகவே தெரிகிறது!

உழவர்களை வேளாண்மையிலிருந்து அப்புறப்படுத்துவது தான் இந்திய அரசின் வேளாண் கொள்கை! வகுப்பறைகளை விட்டு பெரும்பான்மை மாணவர்களை வெளியேற்றுவது தான், அதன் புதிய கல்விக் கொள்கை! தொழில் துறையிலிருந்து சிறு தொழில்களையும் நடுத்தர தொழில் முனைவோரையும் வெளியேற்றுவது தான் அதன் தொழில் கொள்கை! வணிகத்திலிருந்து சில்லறை வணிகர்களையும் சிறு வணிகர்களையும் வெளியேற்றுவதுதான் அதன் வணிகக் கொள்கை! அதுபோல், கடல் தொழிலிலிருந்து கடலோடி மக்களை வெளியேற்றிவிட்டு - பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கடல் பரப்பைத் தாரைவார்ப்பது தான் இந்திய அரசின் கடல் கொள்கை!

அதற்கேற்பவே வங்கக் கடலை ஒட்டியுள்ள நாடுகளைக் கொண்ட “பிம்ஸ்டெக்” என்ற நாடுகளின் புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தி, திட்டம் தீட்டி வருகிறது இந்தியஅரசு! இக்கூட்டமைப்பின் நோக்கத்திற்காகவே, பல இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் துறைமுகங்களையும், கடற்கரையோரங்களையும் தனியார்மயமாக்கி, மீனவர்களை விரட்ட “சாகர்மாலா” திட்டத்தை செயல்படுத்திக் கொண்டுள்ளது.

எண்ணெய் - எரிவளி போன்ற இயற்கை வளங்களை மட்டுமின்றி, மின்சார உற்பத்திக் கருவிகள் முதல் மகிழுந்து வரையிலான பொருட்களை ஏற்றுமதி செய்யும் வணிக மண்டலங்களாகக் கடலோரப் பகுதிகளை உருவாக்குவதும், அதைப் பாதுகாக்க இராணுவ மண்டலங்களை உருவாக்குவதும் இத்திட்டத்தின் அடிப்படை இலக்குகள்! தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரத்தில் படை வானூர்திகள் தரையிறங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டதும் இத்திட்டத்தின் அடிப்படையில் தான்!

தமிழ்நாட்டு மீனவர்களை மீன்பிடித் தொழிலிலிருந்து வெளியேற்றிவிட்டு தான் இவற்றை செய்ய முடியும் என்பதால், இந்திய அரசு ஒக்கிப் புயலைப் பயன்படுத்திக்கொள்கிறதோ என்பது நம் வலுவான ஐயம்!

சாகர் மாலாத் திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் பொதுவானதே என்பது உண்மைதான்! ஆனால், கடலோடி மக்கள் எல்லோருக்குமா இந்திய அரசு பாகுபாடு காட்டுகிறது? குசராத், மகாராட்டிரக் கடலோரங்களில் வாழும் கடலோடி மக்களுக்கு மட்டும் பல நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்து காப்பாற்றியது இந்திய அரசு. கேரள மீனவர்களை மீட்பதில் இந்திய அரசுக் கப்பற்படை முக்கியப் பங்காற்றியது. இவையெல்லாம் ஏன் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இல்லை என்பதே நம் கேள்வி!

கடந்தமாதம் (நவம்பர் 2017), நடுக்கடலில் தனது சொந்த நாட்டுக் குடிமக்களான தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, இந்திப் பேசத் தெரியாதா என ஏளனப்படுத்தி அடித்தார்கள் இந்தியக் கடலோரக் காவல்படையினர், தமிழர் மீதான இனப்பாகுபாட்டு வன்மம் - இந்திய அரசின் எல்லாத் துறையிலும் பரவிக் கிடப்பதையே இந்நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன!

குமரி மீனவர்களுக்குத் துயர் துடைப்பு நிதி வழங்கும் போது, “மாற்றுத் தொழில் செய்வதற்கு நிதி உதவி” என்றும், வீட்டுக்கு ஒருவருக்கு வேறொரு பணி அளிப்போம் என்றும் வெளிப்படையாக அறிவித்து நிதி வழங்குகிறது தமிழ்நாடுஅரசு! 

மீனவர்கள் திரும்பவும் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிடக் கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருக்கின்றனர் என்று தெரிகிறது. 

குமரி மாவட்டத்தைப் புயல் மட்டுமா தாக்கியது? இந்திய அரசின் பாகுபாடும் தமிழ்நாடு அரசின் அலட்சியமும் சேர்ந்து தாக்கின. இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அலட்சிய அணுகு முறையும், தமிழ்நாடு அரசின் அக்கறையற்ற மந்த நிலையும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மீனவர்களை உரிய நேரத்தில் காப்பாற்றாமல் சாகடித்துவிட்டன.

குமரி மாவட்டத்தின் துயரமாக மட்டும் இதைக் கருதாமல் ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தின்து யரமாகக் கருதி தமிழ்நாட்டு மக்கள் செயல்பட வேண்டியகாலம் இது!  மீனவர் மீட்பு, மீனவர் இழப்பீடு, வேளாண் இழப்புக்கு ஈட்டுதவி என அனைத்தும் விரைந்து நடைபெறத் தமிழ்நாடு அரசு வேகமாகச் செயல்பட வேண்டும்.


“தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - தமிழ்த்தேசிய மாதமிருமுறை இதழின் திசம்பர் 16-31 இதழின் தலையங்கம் இது!


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.