ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"தமிழ்த்தேசியர்கள் சாதிவெறியர்களா?" தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

"தமிழ்த்தேசியர்கள் சாதிவெறியர்களா?" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை!

பண்டைக் காலத்தில் நம் தமிழர்களிடையே சாதி கிடையாது. ஆனால் நம் கண்முன் உள்ள இக்காலத் தமிழ்ச்சமூகம் சாதிச் சமூகமாக இருக்கிறது! 

நமது அனுபவத்தில் சாதி என்பது பிறப்பு அடிப்படையில், உயர்வு தாழ்வு கற்பிப்பதுதான்; சாதி மாறித் திருமண உறவு கொள்ள மறுப்பதுதான். ஆனால் சாதியின் மூலவேர்களாக இருந்தவை - தொழில் அடிப்படை சமூகப் பிரிவுகள். அக்காலத்தில் அவற்றில் உயர்வு தாழ்வில்லை. ஒரு தொழிலிலிருந்து இன்னொரு தொழிலுக்கு மாறிக் கொள்ளத் தடையுமில்லை. 

கடந்த இருபதாண்டுகளாகத் தமிழ்நாட்டில் சாதி உணர்வு தீவிரப்பட்டு வருகிறது. பொது இடங்களில் சாதி கேட்க அல்லது சாதி சொல்ல கூச்சப்பட்ட நிலை இப்போது மாறிவிட்டது. 

திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தோர், கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளைச் சேர்ந்தோர், தங்கள் குடும்ப திருமண அழைப்பிதழில் சாதி போட்டுக் கொள்ள மறுத்த, தயங்கிய காலம் 1960களில் 70களில் இருந்தது. இப்போது இந்த இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பெற்றோர் பெயரில், தாத்தா பெயரில் சாதியை அச்சிட்டுக் கொள்கிறார்கள். 

பள்ளிப் பிள்ளைகள், கல்லூரி மாணவர்கள் சாதிக் கயிறு கட்டிக் கொள்கிறார்கள். சாதி பார்த்து நட்புக் கொள்கிறார்கள். ஊர்களுக்குள் நுழைந்தால் சாதி உறுமும் பதாகைகள். அப்பதாகைகளில் சாதி வீரம் பேசும் சிறுவர்கள், இளைஞர்களின் படங்கள்! அப்பதாகையில் ஏதோ ஒரு சாதி அமைப்பின் பெயர்!

ஒடுக்கப்பட்ட வகுப்பு ஆணுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மேல் சாதிப் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தால், அந்த ஆணைக் கொலை செய்கிறார்கள். சில இடங்களில் அந்தப் பெண்ணைக் கொலை செய்கிறார்கள். தருமபுரி நாயக்கன்கொட்டாயில், மூன்று பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்து நாசமாக்கினார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்ணைக் காதலித்து, ஊரை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்ட இளவரசன் கொல்லப்பட்டு, தண்டவாளத்தின் அருகே பிணம் கிடந்தது. கொலையா, தற்கொலையா என்ற விவாதம் தான் மிஞ்சியது!

திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் கொலை! கோகுல்ராஜ் ஒடுக்கப்பட்ட வகுப்புப் பொறியியல் பட்டதாரி. பிற்படுத்தப்பட்ட மேல் சாதிப் பெண்ணுடன் காதல்! விளைவு - கொலை! 

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை! கடந்த சில ஆண்டுகளாகப் பரவலாக சாதிச் சிக்கல்கள் - பதற்றங்கள் சமூகத்தின் கொந்தளிப்புகளாக இருக்கின்றன. கோயில் திருவிழாவை ஒட்டி சாதிக் கலவரங்கள் நடக்கின்றன. 

சாதிச் சிக்கல்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. ஒளிவு மறைவின்றி தன் சாதிப் பெருமைகளை மேடைகளில் முழங்குகின்றனர். மற்ற சாதிகளை இழிவுபடுத்துகின்றனர். 

சாதிக் கொலைகள் என்று பொதுவாகச் சொன்னாலும், கொல்லப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பினரே! சாதிக் கலவரங்கள் என்று பொதுவாகச் சொன்னாலும், அவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டோர் ஒடுக்கப்பட்ட மக்களே! 
பிறந்த சாதி காரணமாகத் தொடர்ந்து தாக்கப்படுவதால், இழிவுபடுத்தப்படுவதால் - இப்போது ஒடுக்கப்பட்ட வகுப்பினர் எதிர்வினையாற்ற - பதிலடி தரத் தயாராகிறார்கள். அதேவேளை, கொடுக்கல் வாங்கல் தகராறு மற்றும் சாதாரணக் கோபதாபங்கள் ஆகியவற்றிற்குக்கூட தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் புகார் கொடுக்கும் நிலைமைகளும் இருக்கின்றன. 

இதனால், ஊர்கள் சாதி முகாம்களாகக் காட்சியளிக்கின்றன. சாதி உறுமல்கள் காதில் கேட்காவிட்டாலும் மனத்தில் கேட்கின்றன. வெளித் தோற்றத்திற்கு சாதிச் சண்டையில்லாத அமைதி தெரிகிறது. உள்ளுக்குள் பிற்படுத்தப்பட்ட வகுப் பாருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே கசப்புணர்ச்சி கனன்று கொண்டிருக்கிறது. நல்லிணக்கம் இல்லை. ஒருவருக்கொருவர் நம்பிக்கை இல்லை! 

1960களில் - 1970களில் இப்படி இல்லை. அப்போதும் சாதி ஆதிக்கம் இருந்தது. சாதி ஆதிக்கத்திற்கெதிரான நடவடிக்கைகளும் போராட்டங்களும் இருந்தன. ஆனால் பல்வேறு சாதி மக்களுக்கிடையே ஒருவகையான உறவும் இணக்கமும் இருந்தன. அதெல்லாம் மாறிப் போனதேன்?

சாதிச் சங்கங்கள், சாதிக் கட்சிகள் அதிகரித்ததும் வளர்ந்ததும்தான் சாதிப் பகைமை வளர்ந்ததற்கான முதன்மைக் காரணம்! சாதிப் பகைமைகள் தொடர்ந்தால்தான் சாதி வாக்குகளை வாங்க முடியும். 

இந்த அளவிற்கு சாதி சங்கங்களும் சாதிக் கட்சிகளும் 1950களில் - 60களில் - 70களில் தீவிரப்படாமல் வளராமல் இருந்ததற்கும் இப்போது அவை வளர்ந்ததற்கும் காரணம் என்ன?

1950களில், 60களில் தி.மு.க. - தனிநாட்டு இலட்சியத் தையும் அதனுடன் தமிழின உணர்வையும் முன்னிறுத்தியது. கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் ரசியப் புரட்சி போல், இந்தியப் புரட்சி நடத்தும் இலட்சியத்தை மக்கள் முன் வைத்தன. இப்போது எந்தத் தேர்தல் கட்சிக்கும் எந்த இலட்சியமும் இல்லை. இலட்சியம் முன் வைக்கப்படாத சமூகம் இலக்கின்றி சீரழியும். 

தமிழ்த்தேசியம் வளர்வதுதான், சாதிச்சண்டைகளுக்கும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் தூண்டு விசையா? “தமிழன்”, “தமிழச்சி” என்று சொந்த இனத்தின் பெயரை முதன்மைப்படுத்துவது சாதிச் சிக்கல்கள் வளர்வதற்குக் காரணமா? தமிழ்த்தேசியர்கள், சாதிவாதிகள் என்கிறார்கள். 

இவர்கள் தங்கள் கூற்றுக்குச் சான்றுகள் தருகிறார்களா? இல்லை! 

எந்தத் தமிழ்த்தேசிய அமைப்பு சாதியை முதன்மைப்படுத்துகிறது? எந்தத் தமிழ்த்தேசிய அமைப்பு சாதிச் சண்டையை, எங்கே தூண்டி விட்டது? 

அண்மையில் இந்திய அரசு திணித்த நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு - மாணவி அனிதா உயிரீகம் செய்தபோது நடந்த இரங்கல் கூட்டமொன்றில், தமிழ்பபெண் அனிதா என்று இயக்குநர் அமீர் கூறியது குற்றமென்று இன்னொரு இயக்குநர் இரஞ்சித் மேடைக்குப் பாய்ந்து ஒலிவாங்கியைப் பிடுங்கிக் கொண்டு, “தமிழன்” என்று சொல்லக்கூடாது என்றார். “எங்களுக்கு ஊருக்குள் இடமில்லை; சேரிக்குள்தான் இருக்கிறோம்” என்றார். 

சேரி என்று தனித்து ஒரு பகுதித் தமிழ் மக்களை ஒதுக்கி வைத்தது கொடிய ஒடுக்குமுறை! அதில் மாற்றுக் கருத்தில்லை. அந்தத் கொடுமையை எதிர்த்து, ஒடுக்கப் பட்ட வகுப்பு இளைஞர்கள் ஆவேசப்படுவது ஞாயம்! ஆனால், இந்த ஆவேசத்தில் ஒரு தலைச்சார்பான - நடுநிலை தவறிய குற்றச்சாட்டு கூறக்கூடாது! 

இயக்குநர் ரஞ்சித் கூறினார் என்பதற்காக இக்கருத்தை திறனாய்வு செய்யவில்லை! ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழர்களில் மற்றும் சிலர் இவ்வாறு கூறுகிறார்கள். ரஞ்சித் கூற்று என்பது ஒரு மாதிரிக் கூறு (Sample) மட்டுமே! மற்றபடி அவர் மீது நமக்கு எந்த வருத்தமும் இல்லை. 

அண்மைக்காலமாக வளர்ந்து வெகுமக்கள் ஆதரவைப் பெற்றுவரும் தமிழ்த்தேசியர்கள் அல்லது தமிழின உணர்வாளர்கள்தான் இந்த சேரி ஒதுக்கலுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் காரணமா? 

1947 ஆகத்து 15லிருந்து இந்தியத்தேசிய ஆட்சியின் கீழ் தமிழர்கள் அனைவரும் இருந்து வருகிறோம். அன்றாடம் புதுதில்லி தொடங்கி நம் புதுப்பட்டி வரை - குடியரசுத் தலைவர் தொடங்கி நம் குப்பத்து இந்தியத்தேசியவாதி வரை, “நாம் இந்தியர், நம் தேசம் இந்தியா, இந்தியர் அனைவரும் உடன்பிறப்புகள், இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம்” என்று கூறி வருகிறார்கள். 

திரும்பிய பக்கமெல்லாம் “இந்தியன்” முழக்கம், திரைப்படம் போனால் இந்திய கீதம், அதற்கு எழுந்து நிற்கவில்லை எனில் தண்டனை; கல்விக்கோ, வேலைக்கோ, கடன் வாங்கும் வங்கிக்கோ, கடவுச்சீட்டுக்கோ எல்லா விண்ணப்பங்களிலும் “என் தேசிய இனம் இந்தியன்” என்று எழுதுகிறோம். அது கட்டாயம்! 

பெட்ரோல் நிலையம் போனால், பிரதமரின் இந்தியன் முழக்கம்! கட்டணக் கழிப்பிடம் போனால் அங்கேயும் இந்தியன் முழக்கம்! ஆட்சி, ஆள், அம்பு சேனை, கல்வித்துறை, காவல்துறை, நீதித்துறை அனைத்தும் இந்தியன் ஆட்சி வசம்! 

எல்லோரும் இந்தியர், ஒரே தேசிய இனம் என்று எழுபதாண்டுகளாக சட்டம் போட்டும் சத்தம் போட்டும் ஏன் சேரிகள் இன்னும் தனித்திருக்கின்றன; தீண்டாமைக் கொடுமைகள் ஏன் தொடர்கின்றன? “தமிழன்” என்று நம் அனைவரின் முன்னோரும் பிறந்த இனத்தை, நமது சொந்த இனத்தைக் கூறும் போது வரும் ஆத்திரம், “இந்தியன்” என்று ஆரியச் சார்பான இனத்தைத் திணிப்பவர்கள் மீது வராதது ஏன்? எப்போதாவது இவர்கள் “இந்தியன்” என்பதைக் கேள்வி கேட்டார்களா?

ஐம்பது ஆண்டுகளாக 1967லிருந்து “திராவிடன்” என்று இனப்பெயர் சொல்லும், மாநில ஆட்சியில் இருக்கிறோம். திராவிட ஆட்சியில்தான் 1968இல் கீழ்வெண்மணியில் ஒடுக்கப்பட்ட வகுப்புத் தாய் மார்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை ஒரு குடிசைக்குள் பூட்டிக் கொளுத்திச் சாம்பலாக் கினார்கள் சாதி வெறியர்கள்!

திராவிட இனத்தின் பெருந்தலைவர் பெரியார், அந்த மேல்சாதி வெறியர்களின் கொலை வெறித் தாண்ட வத்தை கண்டித்து, ஓர் அறிக்கை கூட கொடுக்கவில்லை! கொலைகாரன் கோபாலகிருட்டிண நாயுடுவைச் சிறையில் தள்ளு என்று பெரியார் குரல் கொடுக்கவில்லை. மாறாக, கம்யூனிஸ்ட்டுகளின் அராஜகங்கள் 44 பேரைத் தீ வைத்துக் கொள்ளுத்தும் அளவுக்கு மிராசுதார்களுக்கு ஆத்திரத்தைத் தூண்டிவிட்டுள்ளது என்று பெரியார் எழுதினார். 

காதல் கலப்புத் திருமணங்களை எதிர்த்து தலித் இளைஞர்களை சாதி வெறியர்கள் படுகொலை செய்தபோது, தி.மு.க., அ.தி.மு.க., திராவிடர் கழகம் ஆகியவை என்ன எதிர்வினை ஆற்றின? நாயக்கன் கொட்டாய்க்கு தி.மு.க. தலைவரோ செயல் தலைவரோ போய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னார்களா? 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நானும் தோழர்களும் நாய்க்கன்கொட்டாய் போனோம். நாங்கள் போய்ப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பார்வையிட அங்கு வந்தார். ஆனால், அடுத்த சில நாட்களில் தமிழ்த்தேசியர்கள் யாரும் நாய்க்கன்கொட்டாய்க்கு வரவில்லை என ஏடுகளில் செவ்வி கொடுத்தார் திருமா.

2011 செப்டம்பரில், இமானுவேல் சேகரனார் நினைவு நாளுக்கு வந்து கொண்டிருந்த திரு. ஜான் பாண்டியனைத் தடுத்து, திருவாடானையில் தளைப் படுத்தி வைத்துக் கொண்டு, பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, 7 பேரை சுட்டுக் கொன்றது செயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சி! ஆறுமாதம் கழித்து நடந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ஜான்பாண்டியன் கட்சியும் மருத்துவர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் செயலலிதாவின் அ.தி.மு.க.வைத்தான் ஆதரித்துத் தேர்தல் வேலை செய்தன. 

சாதிக் கட்சிகள், சாதி சங்கங்கள் 1990களிலிருந்து அதிகரித்தன என்கிறோம். என்ன காரணம்? 

இதற்கு உடனடிக்காரணம் தி.மு.க. - அ.தி.மு.க.! அடிப்படைக் காரணம், காங்கிரசுக் கட்சி! 

தமிழ்நாட்டில் காங்கிரசுக் கட்சி, அடர்த்தியான சாதியினர் உள்ள மாவட்டங்களில் அந்த சாதியைச் சேர்ந்தவர்களை மாவட்டத் தவைர்களாக, செயலாளர்களாக, தேர்தல் வேட்பாளராகத் தேர்வு செய்யும் முறையைக் கொண்டு வந்தது. பொது நலத்தொண்டு, கட்சிக்கான உழைப்பு, ஒப்படைப்பு, அறிவாற்றல் போன்றவை அடிப்படைத் தகுதிகள் அல்ல; சாதிதான் முதல் பெரும் தகுதி என்றாக்கியது காங்கிரசு! 

இந்தத் திசையில், காங்கிரசு 70 விழுக்காடு செயல்பட்டது என்றால், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் 99 விழுக்காடு செயல்பட்டன. மாவட்டப் பொறுப்பு, ஒன்றியப் பொறுப்பு அனைத்தையும் பெரும்பாலும் சாதி பார்த்துக் கொடுத்தன. வேட்பாளர்கள் தேர்வும் அப்படியே! 

இன்னொரு பக்கம், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளும் அவற்றின் ஆட்சிகளும் முழுநேர அரசியல் பிரமுகர்களை உருவாக்கின. அவர்கள் மக்கள் தொண்டு, மக்கள் உரிமைப் போராட்டங்கள் எதுவும் நடத்துவதில்லை. அரசியல் தரகு வேலை பார்த்துப் பெரும் பொருள் ஈட்டினார்கள். அதிகாரம், சமூக மரியாதை பெற்றார்கள். வசதி வந்த பிறகு வருவாய்க்கான நிறுவனங்களை உருவாக்கிக் கொண்டார்கள். 

தமிழ்நாட்டில் அடர்த்தியான சாதிகளுக்கான சங்கங்கள் அல்லது அமைப்புகள் நடத்தி வந்தவர்களுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அல்லது ஆட்சியில் பங்கு பெறும் ஆசையைத் தூண்டிவிட்டது யார்? தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான்! தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வேறு சிறுபான்மைச் சாதியினரால் தலைமை தாங்கப்படுகிறது. நம் பெரும்பான்மைச் சாதியைப் பயன்படுத்தி, அவர்கள் முதலமைச்சர் ஆகிறார்கள்; அமைச்சர்கள் ஆகிறார்கள். நாம் நம் பெரும்பான்மைச் சாதியைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாமே என்ற ஆசையைக் கழகங்களின் அரசியல் தூண்டி விட்டது. தமிழ்நாட்டு அரசியலில் இன்று சாதி அமைப்புகள் பல செயல்படுகின்றன. 

இப்படிப்பட்ட திராவிடக் கட்சிகளால்தான் தமிழ்நாட்டின் தன்மானமும், சமத்துவ சமூக நீதியும் தழைத்துச் செழித்து வளர்ந்துள்ளன என்று தலித் அமைப்புகளும், அட்டவணை வகுப்பினர்க்கான அரசியல் கட்சிகளும் பெருமைபட்டுக் கொள்கின்றன. அவற்றுடன் கூட்டணி சேர போட்டி போடுகின்றன. காங்கிரசு, பா.ச.க.வுடன் கைகோக்கவும் இந்த அமைப்புகள் அணியமாக உள்ளன. ஆனால், தமிழ்த்தேசியம், தமிழ்த்தேசியர் என்றால் இடைநிலைச் சாதி ஆதிக்க ஆற்றல் என்று சாடுகின்றனர். 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைப் பொறுத்தவரை எல்லா சாதியினரும் இருக்கிறார்கள். தலைமைப் பொறுப்புகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த தோழர்களும் இருக்கிறார்கள். நான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவன். என் மகன் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவன். தலைமைச் செயற்குழு தோழர் அ. ஆனந்தன், இரெ. இராசு, நா. வைகறை ஆகியோர் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தம் இருமகள்களுக்கும் தேடித்தேடி, சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார். 

மார்க்சியம் பேசும் கட்சிகளும் தனிநபர்களும், “பெரியார் மண்” என்று தமிழ்நாட்டின் பெருமை பேசுகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்குப் போட்டி போடுகின்றன கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள்!

தமிழ்த்தேசியம் பேசுவோரில் தனிநபர்களாகச் சிலர் தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுவோரை எதிர்க்கின்றனர். அவர்கள் தமிழ்நாட்டு அரசியல், தொழில், வணிகம் ஆகியவற்றில் கொண் டுள்ள ஆதிக்கம் கருதி அச்சிலரும் அவ்வாறு எதிர்க்கின்றனர். எனவே, பிறமொழி பேசுவோரைக் கண்டறிய சாதி அடையாளம் அறிவது தேவை என்று கூறுகின்றனர். 

இவர்களின் இந்தக் கூற்றைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஏற்கவில்லை - எதிர்க்கிறது! இவர்களின் கூற்றை வேறு எந்தத் தமிழ்த்தேசிய இயக்கமும் ஏற்பதாகவும் சான்றில்லை. சாதி அடையாளம் தேவை என்று கூறும் அந்தத் தமிழ்த்தேசியத் தனிநபர்கள் கூடத் தமிழினத் திற்குள் சாதி ஏற்றத்தாழ்வு பார்க்கவில்லை. தமிழர்கள் அனைவரும் சமம் என்ற கருத்தில் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். 

ஆனாலும், சாதியை இன அடையாளமாகப் பார்க்கத் தொடங்கினால், அந்தப் போக்கு - சாதி உயர்வு தாழ்வில்தான் போய் முடியும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. பிறப்பு வழி தொடரும் உயர்வு தாழ்வு மங்கி மறைந்து விட்டால், சாதிக்கான ஆணிவேர் அறுந்து விடும். மெல்ல மெல்ல சாதி பட்டுப்போகும். எனவே சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதானது உயர்வு தாழ்வில்தான் போய் முடியும். 

சாதி மங்கி மறைந்து போவதிலும் அல்லது, சாதி ஒரே அடியாக ஒழிந்து போவதிலும் தமிழ்த்தேசியத் திற்கு முழு ஏற்புண்டு! அதற்கான ஆக்கத்திட்டங் களையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வகுத்துள்ளது. 

• சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர்க்கு அரசு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 

• அட்டவணை சாதியருடன் பிற சாதியினர் திருமணம் செய்து கொண்டால், அதில் அட்டவணை சாதியைச் சேர்ந்த ஆண் அல்லது பெண்ணுக்கு அரசு வேலை தர வேண்டும். 

• ஊர்ப்புறங்களில் சுடுகாட்டுப் பணிகள், செத்த கால்நடைகளை அப்புறப்படுத்தல் ஆகியவை பிறப்பு அடிப்படையில் ஒடுக்கப்பட்ட சாதியார் பார்ப்பதைத் தடை செய்து, அப்பணிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் ஊராட்சிகளில் பணியாளர்களை அரசு அமர்த்த வேண்டும். 

• அரசு, ஊராட்சி மற்றும் ஊர்ப் பொது அறிவிப்புகளைப் பறையடித்துத் தண்டோரா போடும் முறை சாதி அடிப்படையில் இருப்பதால், அதைத் தடை செய்ய வேண்டும். நவீன முறையில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும்.

• காதலர்கள் சாதி மறுப்புத் திருமணத்திற்காக, வீட்டை விட்டு பெண் வெளியேறிவிட்டால் - பெற்றோர் கொடுக்கும் புகாரை, அப்படியே ஏற்று ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்து, அக்காதலர்க்கான பாதுகாப்பை உறுதி செய்து, கூப்பிட்டு விசாரித்து திருமண அகவையும் இருவர்க்கும் விருப்பமும் இருந்தால் பெற்றோர் கொடுத்த புகாரைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காதலர்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டும். இதற்காகக் காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும். அந்தப் பிரிவில் மட்டுமே இவ்வாறான புகார்கள் விசாரிக்கப்பட வேண்டும். 

• தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியம் கட்டி ஒப்படைக்கும் குடியிருப்புகளில், 25 விழுக்காடு வீடுகள் அட்டவணை வகுப்பினர்க்கு, தவணைத் தொகை அடிப்படையில் கட்டாயம் வழங்க வேண்டும். 

• சாதி மறுப்பு உளவியலைப் பள்ளியிலிருந்து மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். தமிழ் மக்கள் சாதியைப் பொருட்படுத்தாத மறுமலர்ச்சி சிந்தனை களை அரசும், தனி அமைப்புகளும் வளர்த்து உளவியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். 

மேற்கண்டவை அனைத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன் வைக்கும் ஆக்கத் திட்டங்கள்! திருத்துறைப்பூண்டியில் 1997 பிப்ரவரி 22-இல் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அப்போது த.தே.பொ.க.), நடத்திய “தீண்டாமை ஒழிப்பு - தமிழர் ஒற்றுமை” மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஆக்கத்திட்டம் இது! 

அம்மாநாட்டில் காலஞ்சென்ற பேராசிரியர் கோ. கேசவன், காலஞ்சென்ற வழக்கறிஞர் பூ.அர. குப்புசாமி, தோழர் தியாகு, தோழர் உஞ்சை அரசன் (தலித் பண்பாட்டுப் பேரவை), பாவலர் தணிகைச்செல்வன், முனைவர் குருசாமி சித்தர் (அனைத்திந்திய தமிழர் முன்னேற்றக் கழகம்), முனைவர் கே.ஏ. குணசேகரன், முனைவர் அரங்க. சுப்பையா ஆகியோர் சிறப்புரை யாளர்களாக அழைக்கப்பட்டு அவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறினர். இன்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் ஆக்கத்திட்டங்களில் இதுவும் உள்ளது. 

இதுபோன்ற திட்டத்தை எந்தத் தலித் அமைப்பு அச்சிட்டு வெளியிட்டிருக்கிறது. நாங்கள் புத்தகமாக வெளியிட்டுள்ளோம். அதைப் பரப்புரை செய்தும் வருகிறோம். தலித் அமைப்புகள் கூடிக்குலாவுகின்ற - கூட்டணி சேருகின்ற திராவிடக் கட்சி எது இப்படிப்பட்ட வேலைத் திட்டத்தை வைத்துள்ளது? மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணி வைத்து, களப்பணிகள் ஆற்றி வருகிறது. அதைப் பாராட்டுகிறோம். 

தமிழ்த்தேசிய அமைப்பு எதுவும், தி.மு.க., அ.தி.மு.க. போல் சாதி அளவுகோல் கொண்டு பொறுப்புகள் வழங்குவதில்லை. பிறகு எதற்காகத் தமிழ்த்தேசியர்கள் சாதியவாதிகள் என்று குற்றம் சாட்டுகின்றன? இது திட்டமிட்டு தெரிவு செய்த குற்றச்சாட்டாக (ஷிமீறீமீநீtவீஸ்மீ கிநீநீusணீtவீஷீஸீ) அல்லவா இருக்கிறது. 

தமிழ்த்தேசியத்தைக் கண்டு சாதி அமைப்புகள் பொதுவாகவே அச்சப்படுகின்றன. தமிழ் இன உணர்ச்சி வளர்ந்தால், நாம் அனைவரும் சங்கத் தமிழர்களின் வாரிசுகள் என்ற இன ஒற்றுமை உளவியல் உருவாகும். தமிழ்த்தேசியம் பேசுவோரும் சமகால நெருக்கடிகளைச் சந்திக்கும் வகையில், கொள்கைகளையும் களப்போராட்டங்களையும் முன்னெடுக்கிறார்கள். படித்த இளைஞர்கள் ஏராள மாக சமூக வலைத்தளங்களில் அறிவாற்றலுடன் தமிழ்த்தேசியப் பணிபுரிகிறார்கள். 

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் போன்றவை - காலத்திற்குப் பொருந்தாத தலைமைகளையும் செயல்பாடுகளையும் கொண்டுள்ளன.

எனவே தமிழ்த்தேசியம் விரைந்து வளர்ச்சி பெறும்; அவ்வாறு வளர்கையில் தங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் தமிழ்த்தேசிய அமைப்பில் சேர்ந்து விடுவார்கள். தனியே சாதி அமைப்பை நடத்த முடியாத நிலை உருவாகும் என்று சாதி அமைப்பு நடத்துவோர் அச்சப்படுகின்றனர். அந்த வளர்ச்சியைக் தடுக்கும் உத்தியுடன் - தமிழ்த் தேசியம் இனவெறிக் கொள்கை கொண்டது - சாதிவாதம் கொண்டது என்று புரளி பரப்புகிறார்கள். 

தமிழ்த்தேசியர்களைப் பொறுத்தவரை -தங்களை மேலும் சமத்துவக் கொள்கையாளர்களாக உறுதிப் படுத்திக் கொள்ள இப்புரளிகள் பயன்பட வேண்டும். 

தமிழ் இன மரபு சமத்துவமானது. யாதும் ஊரே, யாவரும் கேளிர்; அனைவரும் பிறப்பால் சமம் - பிறப்பொக்கும் எல்லா உயிரும் - நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் - சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்தீர் என்பன போன் நம் முன்னோர்கள் வழங்கிய அறிவுரைகள் தமிழர் உளவியலில் விரைந்து வளரும்! 

அடிமரம் ஒன்று; அதன் கிளைகள் பல; அவற்றில் உயர்வு தாழ்வில்லை என்ற உணர்வு தமிழர்கள் அனைவர்க்கும் வேண்டும்! 

சமகாலத் தமிழர்களிடையே சாதி உளவியலும் இருக்கிறது; இன உளவியலும் இருக்கிறது. ஆனால், இன உளவியல் ஆழமான மரபுத் தொடர்ச்சி கொண்டது. இன உளவியல் வளர வளர சாதி உளவியல் மங்கும்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2017 நவம்பர் 16-30 இதழில் வெளியான கட்டுரை இது!)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.