ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

குரலற்றவர்களின் குரலாய் தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டம் - கவிஞர் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்

குரலற்றவர்களின் குரலாய் தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டம்
(09.12.2017 அன்று தஞ்சையில் நடைபெற்ற தமிழர் கண்ணோட்டம் - படிப்பு வட்டத்தில் படிக்கப்பட்ட திறனாய்வுரை)
கவிஞர் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்


என்ன நிகழ்ந்தாலும், ஒரு நாட்டுக் கோழி எங்ஙனம் இரை தேடுமோ அங்ஙனம் பிழைப்பிற்காய் ஓடும் மனிதர்கள் எந்தவித எதிர்வினையும் செய்ய இயலாத /விரும்பாத தமிழ்ச்சூழலில் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் போன்ற இதழ்கள்தான் “குரலற்றவர் களின் குரலாய், கருத்தற்றவர்களின் கருத்தாய், களமற்ற வர்களின் களமாய்’’ விளங்குகின்றன.
தொன்ணூறுகளில் பெரிய வீச்சாக வெளிவந்த நூற்றுக்கணக்கான இதழ்களின் பங்களிப்புகளால், அறிவார்ந்த தத்துவார்த்த விவாதங்களால், நுட்பமான படைப்புகளால் எங்களைப் போன்ற படைப்பாளர் களும், சிறந்த அரசியல் சிந்தனையாளர்களும் உருவானோம். இன்றைய தமிழ்ச் சூழலில் அங்ஙனமான அறிவாளுமை இல்லாத நிலையில் ஒரு அரசியல் -_ பண்பாட்டு -_ மொழி ரீதியிலான “வெற்றிடம்” தோன்றி யுள்ளது. ஆங்கிலக் கல்வியின் மீப்பெரும் தாக்கத்தால் இந்த வெற்றிடத்தை, சமூகத்தினை முக்கியமாக இளைய சமூகத்தினை நுட்பமாகப் பார்க்கும் யாரும் உணர்ந்து கொள்ள இயலும்.
ஒரு தந்தையாக, ஒரு ஆசிரியனாக நான் இன்றைய தமிழ் இளைஞர்களிடம் இந்த “வெற்றிடத்தை” ஒரு வித வலியுடன் உணர்கிறேன்.
தமிழ்ச்சூழலை அதில் நிகழ்ந்துள்ள _- நிகழ்ந்து கொண்டுள்ள இழப்புகளை _- மேலாண்மைகளை _- அழிப்புகளை இன்றைய இளைய சமூகம் பார்க்கத் தொடங்கினாலொழிய இங்கு மாற்றங்கள் நிகழ்வது சாத்தியமே இல்லை.

படைப்பிற்கு மட்டுமல்ல, வாழ்வதற்கும் இந்தப் “பார்த்தல்” -_ “கவனித்தல்” மிகவும் அவசியமாகும். அங் ஙனம் தமிழர் ஒவ்வொருவரின் கண்ணாக _- செவியாக _- சிந்தனையாற்றலுள்ள மூளையாக இந்த இதழ் அமைந்துள்ளது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அரசியல் -_ பண்பாட்டு இதழாக இது வெளி வந்தாலும், ஒரு சாதாரண -_ அமைப்பு சாராத _- மனிதர்க்கும் பல கதவு களைத் திறக்கும் இதழாக இவ்விதழ் வெளிவந்து கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது.
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக தோழர் பெ. மணியரசன் மற்றும் இணையாசிரியர் தோழர் கி. வெங்கட்ராமன் போன்ற பேராசான்களின் மிக நுட்பமான கட்டுரைகள், தமிழ்த்தேசிய சிந்தனைகள் இவ்விதழை சிறப்பிக்கின்றன.

தமிழ் அரசியல், சுற்றுச்சூழல், ஆளும் வர்க்கத்தின் மேலாண்மைக்கெதிரான போர்க்குரல், பண்பாட்டுத் தளங்களில் நிகழும் மாற்றங்கள், தமிழீழச் சிந்தனைகள், கல்வி, தாய்மொழித் தமிழ் போன்ற ஆயிரமாயிரம் பொருண்மைகளில் இவர்களின் நுண்ணிய கட்டுரைகள் இடம் பெறுகின்றன.
இவற்றை படிக்கும் வாசகர் ஒவ்வொருவருக்குள் ளும் எழும் கேள்விகளுக்கும், மன வேதனைகளுக்கும், எழுச்சியுற வேண்டும் என்ற வேட்கைக்கும் விடையா கவும், தீர்வாகவும், உத்வேகமாகவும் இதழில் கட்டு ரைகள் அமைகின்றன. இவர்களன்றியும் எழுதும் மற்ற கட்டுரையாளர்களின் பங்களிப்புகளையும் நாம் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. தமிழ்ச்சூழலில் முன்னெடுக்கப்படும் விடுதலைக்கான அனைத்து நிகழ்வுகள் குறித்தும் தம்முடைய நிலைப்பாட்டினை அக்கட்டுரையாளர்கள் திறம்பட பதிவிடுகின்றனர்.
மொத்தத்தில் குழம்பிய நிலையில் வாழுகிற கடை கோடித் தமிழரையும், மீட்டெடுத்து அவர்க்கு “விழிப் புகளை’’ வழங்கி விடுதலை நோக்கி ஆற்றுப் படுத்தும் இதழாக, கண்ணோட்டம் திகழ்கிறது.
இதழில் படைப்பாக்கத்திற்கென, நூலில் ஒரு பகுதியையேனும் ஒதுக்கினால் இளைஞர்களிடம் இன்னும் பரவலாக இதழ் சென்று சேர வாய்ப்பாக அமையும் என்பது என் கருத்து.
இளைஞர்களுக்கு மேடை தருவதன் மூலம் -_ களம் அமைத்துத் தருவதன் மூலம், அவர்களுடனான உரை யாடலை நாம் தொடங்க முடியும். கவிதை, சிறுகதை உள்ளிட்ட கலை இலக்கிய வடிவங்களை இன்னும் சற்று அதிகமாக வெளியிட்டால், ஆர்வமுடன் இளைய படைப்பாளிகள் இதழ் பக்கமாகத் திரும்புவர். சமூக வலைத்தளங்களின் ஆக்கிரமிப்பால் சிக்குண்டு கிடக்கும் தமிழ் இளைஞர்களை, கண்ணோட்டம் போன்ற இதழ்களால்தான் மீட்டெடுக்க இயலும் என்று நான் கருதுகிறேன்.
குறைந்தபட்சம் 5 ஆயிரம் ஆண்டுத் தொன்மை வாய்ந்த நம் இனத்தையும் மொழியையும், காக்கும் கடமையை நாம் நமது பிள்ளைகளுக்குக் கையளிக்க வேண்டும். எந்தப் புள்ளியில் தொடங்குவது.. இளை ஞனோ யுவதியோ இந்த அரங்கில் எத்தனை பேர்... (எங்கே அவர் நம்மோடிக்கிறார்.. ஒன்று “நெட்”டில் இருக்கிறார்.. இல்லையேல் அவரவர் “செட்டில்” இருக்கிறார்கள்...) தமிழர் கண்ணோட்டம் என்ற இந்தப் பேரியக்கத்தால் அவர்களோடு நாம் ஒரு உரையாடலைத் தொடங்க இயலும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
ஓர் அரசியல் -_ பண்பாட்டு -_ மாற்று நிகழ்வாக இயக்கமுறும் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் நின்று நிலைத்து வென்று வரலாறாக வாழும்.. வரலாறாக மலரும்! நன்றி!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் 2017 திசம்பர் 16-31 இதழில் வெளியான கட்டுரை இது).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.