"சாக்கடையில் குளித்து விட்டு சந்தனம் பூசிக்கொள்வதா?" தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
"சாக்கடையில் குளித்து விட்டு சந்தனம் பூசிக்கொள்வதா?" தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
அண்மையில் (03.02.2018) கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி முப்பது இலட்சம் ரூபாய் கையூட்டுப் பெறும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரமேசு என்ற உதவிப் பேராசிரியரின் பதவியை நிரந்தரப்படுத்துவதற்காக அவரிடம் முப்பது இலட்சம் ரூபாய் கையூட்டுப் பெற்றுள்ளார் கணபதி. இதற்கு முன் 2008 இல், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். இராதாகிருட்டிணன் பல்கலைக்கழகத்திற்கு அறைகலன்கள் (Furnitures) வாங்கிய தனியார் நிறுவனத்திடம் கையூட்டாக நாற்பதாயிரம் ரூபாய் வாங்கியதற்காக நடந்த வழக்கில் ஐந்தாண்டு தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு வந்த இராதாகிருட்டிணனிடம் செய்தியாளர்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்ன விடை உண்மையைப் போட்டு உடைத்தது.
“வாரந்தோறும் சனிக்கிழமை வந்தால் ஒப்பந்தக்காரர்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் போடுகிறார்கள் அல்லவா, அதைப்போல நானும் எங்கள் துறை சார்ந்த அமைச்சருக்கு வாரந்தோரும் கொட்டி அழவேண்டியிருக்கிறது” என்று கொந்தளித்துக் கூறினார் ஆர். இராதாகிருட்டிணன்.
ஏ.இலட்சுமணசாமி முதலியார், நெ.து. சுந்தர வடிவேலு, மால்கம் ஆதி சேசையா, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மு. வரதராசனார், வி.ஐ. சுப்பிரமணியம், எனப் பல கல்வியாளர்கள் துணை வேந்தர்களாகத் தகுதி அடிப்படையில் வந்தார்கள். அப்பதவி அவர்களைத் தேடிப்போனது; அவர்கள் அதைத் தேடி அலையவில்லை!
ஆனால் இப்போது துணைவேந்தர் பதவிகளை முதலமைச்சரும், ஆளுநரும் விற்கிறார்கள். சான்றிதழ்த் தகுதி உள்ள பேராசிரியர்கள் அதிக விலை கொடுத்து அப்பதவியை வாங்குகிறார்கள். முதலமைச்சரும் ஆளுநரும் நேரடியாகப் பேரம் பேசுவதில்லை. துறை அமைச்சர் அதைப் பார்த்துக்கொள்வார். கையூட்டில் வெட்டுத் தொகை துறையமைச்சருக்கும் உண்டு. இதில் தி.மு.க., அ.தி.மு.க. வேறு பாடில்லை. ஒன்று போல் செயல்படுவார்கள்.
பல கோடி ரூபாய் கொடுத்து துணை வேந்தர் பதவியை விலைக்கு வாங்குகிறவர்கள் தாங்கள் கொடுத்ததை விடப் பன்மடங்கு கூடுதலாகக் கையூட்டு வாங்குகிறவர்கள். வாங்கிட வாய்ப்புள்ளது என்பதால் ஆட்சியாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். ஆட்சியாளர்கள் கையூட்டுப் பெற்றுக் கொண்டு கொடுத்த பதவிகளில் உள்ளோர் கையூட்டு வாங்கினால் கண்டு கொள்ளமாட்டார்கள். இராதாகிருட்டிணன், கணபதி போன்றவர்கள் ஏதோ தனிக் காரணங்களால் மாட்டிக் கொண்டார்கள். மாட்டிக் கொள்ளாத துணைவேந்தர்கள் பலர் இன்று பதவியில் இருக்கிறார்கள்; பலர் பணி ஓய்வுப் பெற்று ஒய்யாரமாக வாழ்கிறார்கள்.
நீதித்துறையில் கையூட்டு அதிகரித்து விட்டது. அனைத்திந்திய அளவில் இது நிலவுகிறது. உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. நாம் தமிழ்நாடு பற்றி மட்டுமே இக்கட்டுரையில் பேசுகிறோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் சிலர் குறித்து வெளிப்படையாகவே கையூட்டுக் குற்றச் சாட்டுகள் கூறப்படுகின்றன. கீழ் நிலை நீதிபதிகள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உலவுகின்றன. அவர்களில் எட்டு நீதிபதிகள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.எம். இக்பால், தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான நீதிபதிகள் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன என்று வெளிப்படையாக எச்சரித்ததை இந்து ஆங்கிலநாளேடு 12.02.2012 அன்று வெளியிட்டது. “மாவட்ட நீதிபதிகள் வரை உள்ள நீதிபதிகள் மீது 500 புகார்கள் உயர் நீதிமன்றத் திற்கு வந்துள்ளதாக” எச்சரித்தார்.
எவ்வளவு வளங்களையும் எத்தனை சிறப்புகளையும் ஒரு நாடு பெற்றிருந்தாலும் தகுதியான அரசு அமையவில்லை என்றால் அவ்வளங்களால், அச்சிறப்புகளால் பயன் இல்லை என்றார் பேராசான் திருவள்ளுவர்.
“ஆங்கமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றே
வேந்துஅமைவு இல்லாத நாடு”, குறள் - 740.
இப்பொழுது அரசு என்பது அரசியலில் இருந்து உருவாகிறது. தமிழ்நாட்டு அரசியலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கோலோச்சுகின்றன. இந்தியாவிலேயே மிக மோசமான ஊழல் கட்சிகளின் பட்டியலில் இவ்விரு கழகங்களும் முதலிரண்டு இடத்தைப் பிடிக்கும் “தகுதி” பெற்றவை!
சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒரு கட்டட அனுமதி பெற வேண்டுமானால் ஆட்சியாளருக்கு ஒரு சதுர அடிக்கு 40 ரூபாய் - 50 ரூபாய் எனக் கையூட்டுத் தரவேண்டும். செல்வாக்குள்ள தலைவர் இல்லாததால் அத்தொகை இப்பொழுது கொஞ்சம் குறைந்திருப்பதாகச் சொல்லக் கேள்வி! ஆற்றுக்குள் 1500 ரூபாய்க்கு வாங்கும் ஒரு லோடு மணல் கரையேறி வந்தால் இருப்பதைந்தாயிரத்திலிருந்து, முப்பத்தைந்தாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆட்சியாளருக்கு ஒரு லோடுக்கு இவ்வளவு என்று கையூட்டுப் போகிறது. ஆட்சியாளர்கள் என்றால் யார் யார்?
முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள் ஆகியோரே ஆட்சியாளர்கள். ரோசையா போன்ற ஆளுநர்களும் இச் செயலில் இடம் பெற்றுள்ளனர். அவரவர்க்கும் வரையறுக்கப்பட்ட விழுக்காட்டு கணக்கில் கையூட்டுத் தொகை போகிறது. அரசுக்கு வரும் வரி வருமானம் போல் அன்றாடம் தடையின்றிப் போய்க்கொண்டே இருக்கிறது கையூட்டுத் தொகை!
பதவியில் இருக்கும் போது முதலமைச்சர், அமைச்சர், ஆளுநர் யாரும் பிடிபடுவதில்லை, பிடிக்க முடிவதில்லை ஆனால் கையூட்டு வாங்குபோது, கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியர், காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர், துணைவேந்தர் என்று பலரும் பிடிபடுகிறார்கள்.
அரசு மருத்துவமனை செவிலியர் மருத்துவர் போன்றோர் ஊர் மாற்றம் கேட்டால் ஒவ்வொன்றிற்கும் ஒரு தொகை ஆட்சியாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் அதே போல் அரசு அலுவலர் இடமாற்றத்திற்கும் பதவி உயர்வுக்கும் கப்பத் தொகை கட்டியாக வேண்டும். அரசு சார்ந்த வேலையில் சேரக் கப்பத் தொகைக் கட்டாயம்! வேலை பெறுவதற்காக தேர்வு நடத்துவதெல்லாம் ஒப்புக்கே!
தொழில்துறையினர், வணிகர்கள் பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் முதலியவர்களிடம் வாங்கும் கையூட்டுகள் ஏராளம், ஏராளம்! ஊழலுக்கு ஓராயிரம் வழிகள்; நேர்மைக்கு ஒன்றே ஒன்று!
மக்களிடம் ஊழல்
ஊழல் அரசியல் தலைவர்கள் மக்களை ஊழலுக்கு பழக்குகிறார்கள். மக்களையும் ஊழல்களில் பங்காளிகள் ஆக்க முயல்கிறார்கள். கையூட்டு வாங்கி மாளிகைகள் கட்டி புதுப்பணக்கார்களாக மினுக்கித்திரியும் ஊழல் பிரமுகர்கள் சமூகத்தில் மரியாதையுடன் வாழ்கிறார்கள். அவர்களைப் பார்த்து மக்கள் அருவருக்கவில்லை. மாறாக, அவர்களோடு உறவு வைத்துக் கொள்ள ஆசைப் படுகிறார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் இளந்தலை முறையினரில் ஒரு சாரார் தாங்களும் ஊழல் பிரமுகர்கள் போல் வாழ்வில் உயர வேண்டும் என்று கனவு காண் கிறார்கள். இவ்வாறாக ஊழல் சமூகமயமாகிச் செழிக்கின்றது.
சனநாயகத்தின் உயர்ந்த வடிவம், மக்கள் வாக்களித் துத் தங்கள் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் முறை! ஆனால் அது எப்படி இருக்கிறது? வெற்றிக்கான வாய்ப்புள்ள கட்சிகளில் வேட்பாளராய் ஆகிட குறைந்தது இலட்சக்கணக்கில் அல்லது கோடிக் கணக்கில் தலைமைக்குக் கையூட்டுக் கொடுக்க வேண்டும். பின்னர் தேர்தல் வேலை செய்ய கட்சிக் காரர்களுக்கு தண்ணீரை விடத் தாராளமாய் பணம் தர வேண்டும். அதன் பிறகு வாக்காளருக்கு அன்றைய சந்தை நிலவரப்படி பணம் தரவேண்டும். இத்தனை ஏணிப்படிகளிலும் சறுக்கி விடாமல் ஏறிவருபவர்தான் வெல்வார். இவர்களைக் கொண்டு பணநாயகப்படி ஆட்சி அமைகிறது! இதுவே இன்றைய சனநாயகம்!
அரசியல் சீரழிந்தால் அத்தனையும் சீரழியும்! அதனால்தான் அரசியலில் குற்றம் செய்தவர்களை அறம் தண்டிக்கும் என்று சீற்றத்துடன் அன்றே சொன்னார் இளங்கோவடிகள்!
நீதி, நிர்வாகம், காவல்துறை, கல்வித் துறை அறிவியல் துறை, விளையாட்டுத் துறை, பண்பாட்டுத் துறை என அனைத்திலும் தமிழ்நாட்டில் ஊழலும், கையூட்டும் பேயாட்டம் ஆடுகின்றன. இந்தியா முழுவதும் இதுதான் நிலைமை என்றாலும் தமிழ்நாட்டில் ஊழலின் பேயாட்டம் உச்சியில் உள்ளது.
ஒரு வேளை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் செல்வாக்கிழந்து போனால், தமிழ்ச்சமூகம் தானே மாறிவிடும் என்று கருத வேண்டாம். தி.மு.க. - அ.தி.மு.க. போல் கதாநாயக அரசியல் நடத்துவோர் யார் வந்தாலும் ஊழல் தொடரும். பா.ச.க.வினரும் காங்கிரசும் ஊழலின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஊற்றுக் கண் திறப்பார்கள்!
மக்களில் நேர்மையாளர்கள் இல்லையா? நேர்மை யாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் இந்த ஊழலை - இந்த அநீதியை நம்மால் தடுக்க முடியாது; நம்மளவில் நேர்மையாக வாழ்வோம் என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
ஊழலின் பாதிப்புகள் ஊழல் செய்யாத உயர்ந் தோரையும் தாக்குகின்றன. எத்தனை இயற்கை வளங்கள் இருந்தாலும் உற்பத்தி எவ்வளவு பெருகினாலும் கல்வி வளர்ச்சி எந்த உயர்த்தை எட்டினாலும், அறிவியல் கண்டுபிடிப்புகள் அன்றாடம் வளர்ந்தாலும் ஊழல் என்பது ஒரு சமூகத்தை உள்ளிருந்தே சீரழிக்கும் புற்று நோயாகும். வறுமை, வேலையின்மை, வேலைக்கேற்ற ஊதியம் மின்மை, ஊதியம் எவ்வளவு உயர்ந்தாவலும், பற்றாக்குறை பெருகுதல் எனச் சீரழிவுகள் பல வகைப்பட்டவை!
ஊழல் நோயால் பாதிக்கப்பட்ட சமூகத்தில் தனி மனித உறவுகளில் பாதிப்பு ஏற்படும்; குடும்ப உறவுகளில், நண்பர்களிடையே உள்ள உறவுகளில் நம்பகத் தன்மை பாதிக்கப்படும். ஆராய்ச்சித்துறையில், விளை யாட்டுத் துறையில் தகுதிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வேண்டியவர்க்கும் வேண்டியதை கொடுப்பவர்க்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் ஆட்சியாளர்களிடமும், அரசியல்வாதிகளிடமும் உருவாகும் ஊழல் ஒட்டு மொத்த சமூகத்தையும் சிதைத்து சின்னாப்பின்னமாகிவிடும்.
கையூட்டு வாங்கும் அரசியல் தலைவர்களையும் தலைவிகளையும் கொண்டுள்ள இனம், தனது தேசிய உரிமைகளைக்காக்கும் ஆற்றல் அற்றது மட்டுமல்ல, அக்கறை அற்றதும் ஆகும்! காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உரிமைகளை நாம் இழந்துள்ளோம். கச்சத்தீவை இழந்துள்ளோம், கடல் உரிமை இழந்துள்ளோம், கல்வி உரிமை இழந்துள்ளோம்; மொழி உரிமை இழந்துள் ளோம், மண்ணுரிமை இழந்து - ஓ.என்.ஜி.சி., கெய்ல் மற்றும் பெருங்குழுமங்களிடம் விலை நிலங்களை இழந்து வருகிறோம். வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர் களின் வேட்டைக்காடாகத் தமிழ்நாடு மாற்றப்பட்டு, சொந்த மண்ணிலேயே தமிழர்கள் இரண்டாந்தரக் குடிகள் ஆனோம்! தொழில், வணிகம், வேலை என அனைத்திலும் அயலார் ஆதிக்கம்! இந்த வேட்டைகள் பெருகியது எப்போது? கையூட்டு நாயக - நாயகியரின் கழகங்களின் ஆட்சியில்!
“எற்றுக்கு உரியவர் கயவர் ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து” (குறள் - 1080)
ஊழல்களையும் இயக்கம்
ஊழலை எதிர்ப்போர் ஒவ்வொருவரும் முதலில் தன்னைத் திறனாய்வு செய்து சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊழலற்ற வாழ்வுக்குத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் - அரசு தொடங்கி சமூகத்தின் அடிமட்டம் வரை ஊழல் ஒழிப்பிற்கான துப்புரவுப் பணி தொடங்கப்பட வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க., பாணியில் கட்சி நடத்திக் கொண்டும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு, பா.ச.க., கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டும் ஊழல் ஒழிப்பு பற்றி ஓர் அமைப்போ, ஒரு தலைவரோ, பேசினால் அதுவே பெரும் ஊழலாகும்! காந்தியடிகள், தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் போன்றோரே தன்னல மறுப்பின் அடையாளச் சின்னங்கள்! கம்யூ னிஸ்ட் தலைவர்கள் பலர் கையூட்டும் ஊழலும் அண்டா நெருப்பினராக உண்மையான ஈகியராக வாழ்ந்திருக் கிறார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஊழல் கட்சிகளுடன் அரசியல் உறவு கொண்டு ஆள் விழுங்கி மலைப்பாம்புகளின் தலைமையில் சேர்ந்து தங்களின் தனித்தன்மையை இழந்து விடுகிறார்கள்.
தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணி ஆற்றுவோர் ஆற்றட்டும். தேர்தலில் போட்டியிடாமல் மக்கள் பணி ஆற்றுவோர் ஆற்றட்டும். இரண்டுமே அரசியல் தான்! இவ்விரு சாராரும் இன்று செய்ய வேண்டிய முதற்பெரும் மக்கள் பணி - ஊழல் சந்தர்ப்பவாதம் போன்றவற்றால் உளவியல் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களில் கணிசமானோரை உயர் நெறிகளின் பக்கம் திருப்பு வதாகும்! உரிமை இலட்சியங்கள் - உயர்ந்த அறநெறிகள் - இவற்றிற்கான போர்க்குணம் ஆகியவற்றை கணிசமான மக்கள் பெறும் வகையில் தமிழ்ச் சமூகத்தில் தீவிர மாற்றம் (Radicalisation) ஒன்றை உருவாக்க வேண்டும்.
இந்த மாற்றம் எல்லா மக்களிடமும் அல்ல. பத்து அல்லது பதினைந்து விழுக்காட்டு மக்களிடம் வர வேண்டும். அந்த மக்களின் இலட்சியப் பிரதிநிதிகளாகத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் போட்டியிடலாம். அப்பொழுதும் போட்டியிடாமல் இலட்சிய அரசியல் களத்தில் செயல்படுவோர் செயல்படலாம்.
நிலவுகின்ற ஊழல் சமூக அமைப்பில் ஆட்சிக்குப் போய் ஊழலை ஒழிப்போம், உரிமைகளை மீட்போம் என்று பேசுவது விவரமறியாப் பேச்சாக இருக்க வேண்டும் அல்லது தந்திரமான சாகசப் பேச்சாக இருக்க வேண்டும். இன்றையச் சூழலில் இலட்சியப் பிடிப்புள்ள தூய்மையான இயக்கம் ஆட்சியைப் பிடிக்கவே முடியாது. மக்கள் ஏற்க மாட்டார்கள்.
சாக்கடையில் குளித்துவிட்டு சந்தனம் பூசிக்கொள்வது போன்றது! தன்னல சந்தர்ப்பவாத அரசியல் நடத்திக் கொண்டு ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசுவது! எல்லாச் சமுகத்திலும் ஊழல் இருக்கும். அந்த ஊழல் ஒரு சாக்கடையைப் போல் ஒதுக்கி வைக்கப்படவேண்டும். வரம்பு கட்டப்பட்டு தனிவாய்க்காலிலோ அல்லது தனிக் குழாயிலோ சாக்கடை ஓட வேண்டும். ஊழல் ஒழிப்பு பேசுவோர் சாக்கடைக்குள் இறங்கி சக வாழ்வு வாழக் கூடாது. சாக்கடையில் படகுச் சவாரி செய்யக் கூடாது. சாக்கடைக்கு வெளியே இருந்து கொண்டு தான் மண் போட்டு அதை மூடவேண்டும்; அல்லது ஓரங்கட்டி குழாய்க்குள் ஓட விடவேண்டும்!
தமிழ்த்தேசியத்தின் இரு பெரும் பணிகளில் ஒன்று தமிழின உரிமை! மற்றொன்று தமிழ்ச் சமூகத்தை மறுவார்ப்பு செய்யும் சமூக மாற்றம்!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் 2018 பிப்ரவரி 16-28 இதழில் வெளியான கட்டுரை இது).
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Leave a Comment