வெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கிய தேர்வு இரத்து - புதிய தேர்வில் தமிழ்நாட்டு தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
வெளி மாநிலத்தவருக்கு பணி வழங்கிய தேர்வு இரத்து - புதிய தேர்வில் தமிழ்நாட்டு தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாகவுள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு, இரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் பணித் தேர்வாணையம் அறிவித்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது!
கடந்த 16.9.2017 அன்று விரிவுரையாளர் பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத்தேர்வின் முடிவுகள் 07.11.2017 அன்று வெளியானபோது, அம்முடிவுகளில், வெளி மாநில மாணவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றிருந்தது அம்பலமானது. இதனையடுத்து, 23.11.2017 அன்று சென்னையில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டபோது, பல இலட்சம் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலை இன்றி தவிக்கும் சூழலில் - தமிழ்நாட்டு அரசுக் கல்லூரிகளிலேயே வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்தக் கூடாது என்று சுட்டிக்காட்டி, சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை அறவழிப் போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்துவோம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், 11.12.2017 அன்று தேர்வெழுதியோரின் விடைத்தாளை ஆசிரியர் தேர்வாணையம் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டபின், பலர் மோசடியான மதிப்பெண்கள் பெற்றிருந்தது அம்பலமாகி, அதன் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டனர். அதில் முதன்மையானவர்கள் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து, 12.12.2017 அன்று அறிக்கை வெளியிட்ட தமிழ்த்தேசியப் பேரியக்கம், அத்தேர்வை முழுவதுமாக இரத்து செய்ய வேண்டுமெனக் கோரியது! பலரும் அவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இன்று (09.02.2018) அத்தேர்வு முழுவதுமாக இரத்து செய்யப்படுவதாகவும், மே 2018இல் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் பணித் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது!
மே மாதம் அறிக்கப்படவுள்ள தேர்வில், வெளி மாநிலத்தவரை அனுமதிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே பணியிடங்கள் கிடைக்கும் வகையில், அவர்களது வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவெண், இருப்பிடச்சான்று போன்றவற்றை கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இனியாவது முறைகேடுகள் ஏதுமின்றி தேர்வுகள் வெளிப்படையாக நடைபெறுவதை, தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Leave a Comment